வியாழன், 18 பிப்ரவரி, 2010

எந்தவொரு சமூகத்தையும் அழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் விரும்பியிருந்தால் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை யுத்த வலயத்திலிருந்து நாங்கள் ஏன் காப்பாற்றியிருக்க வேண்டுமென்று கேள்வி எழுப்பியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னால் பாரிய சவாலொன்று இருப்பதாகவும் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழ்ச் சகோதர, சகோதரிகள்,புதல்வர்கள்,புதல்விகளுக்கு கடந்த காலத்தில் அவர்கள் இருந்ததிலும் பார்க்க சிறப்பாக இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கான சவாலாக அது காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்திய பத்திரிகையாளரும் ஜிபைல்ஸின் பிரதம ஆசிரியருமான இந்தர்ஜித் பத்வாருக்கு ஜனாதிபதி அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.இப்பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துகள் இங்கு தரப்பட்டுள்ளது.

இலங்கையும் இந்தியாவும் உண்மையிலேயே ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக ஒன்றித்துள்ளன. எமது மக்கள், எமது கலாசாரங்கள்,எமது மொழிகள்,எமது ஆன்மீக விழுமியங்கள் என்பன புராதன இந்தியாவிலிருந்தே வந்துள்ளன.நவீன இந்தியாவானது எப்போதும் எனக்கு உந்து சக்தியாக உள்ளது.எமக்கு மட்டுமல்ல முழு உலகமே இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு அதிகமுள்ளது.இந்தியாவின் பொருளாதாரத்தை இந்தியா நிர்வகிக்கும் வழிமுறையிலிருந்து நாம் யாவரும் அனுகூலத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கெதிராக யுத்தத்தின் போது சீனா,பாகிஸ்தானிடமிருந்து இராணுவ உதவிகளை பெற்றன தொடர்பாக இந்தியா மற்றும் மேற்குலகிடமிருந்து எழுந்த அழுத்தங்கள் தொடர்பாமை கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,இந்தியாவிடமிருந்து ஒருபோதும் அழுத்தம் வரவில்லை.அதிகளவு புரிந்துணர்விற்கான நிர்ப்பந்தமே வெளிப்படுத்தப்பட்டது.அழுத்தங்கள் ஏதாவது எனக்கு ஏற்பட்டிருந்தால் அது மேற்குலகிடமிருந்துதான் வந்தது.ஆனால், பயங்கரவாதிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிவதற்கும் அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுப்பதற்கும் மக்கள் என்னை தெரிவு செய்திருக்கவில்லை.இந்தியாவின் உணர்வுகளையிட்டு நான் கவனத்தில் கொண்டிருந்தேன்.இந்தியா எனது மூத்த சகோதரர்.இதனை நான் மேற்குலகிற்கு வெளிப்படையாக கூறியிருந்தேன்.நான் அவர்களை நண்பர்களென அழைக்க வேண்டுமென்றால் நான் எவரினதும் அடிவருடியாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என்பதை சகல நாடுகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.நான் ஒரு இலங்கை தேசியவாதி.நான் பொறுப்பில் இருக்கும் வரை இலங்கையை எந்தவொரு நாடும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான களமாக ஏற்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளுக்கெதிரான வெற்றியின் பின்னர் உலகில் குறிப்பாக ஐரோப்பாவில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள், துயரங்கள் தொடர்பாக கரிசனையுடன் இருக்கமாட்டீர்கள் என்ற கவலை அதிகரித்திருப்பது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட போது,பதிலளித்த ஜனாதிபதி,இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக வெளியாரின் சொற்பொழிவுகளைக் கேட்கவேண்டிய தேவை எனக்கில்லை. அவர்கள் எனது மக்கள்.எனது நாடு.அவர்களையிட்டு பெருமை கொள்கிறது.அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.எந்தவொரு இலங்கையருக்கும் அநீதி இழைக்கப்படுவதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்.எனது குடும்பம் தமிழர்களுடன் திருமணம் செய்துள்ளது. எனது அமைச்சரவையில் தமிழர்கள் உள்ளனர்.தெற்கிலும் மேற்கிலும் 70வீதமான தமிழர்கள் எப்போதும் சமாதானமாக வாழ்ந்து வருகிறார்கள்.இவை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திராத பகுதிகளாகும்.உங்களிடம் கேள்வியொன்றை நான் கேட்கிறேன். புலிகள் தோற்கடிக்கப்படும் தருணத்தில் இருந்த போது யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த இந்த மேற்கு நாடுகள் புலிகளின் சகல உறுப்பினர்களுக்கும் தமது நாடுகளில் புகலிடம் கொடுக்க விரும்பியிருந்தார்களா என்று கேட்க விரும்புகின்றேன் என்று கூறியுள்ளார்.

இதன் அர்த்தம் நீங்கள் வடக்கிலுள்ள தமிழ் சிறுபான்மையினருடன் அதிகளவு அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதில் ஈடுபாடு காட்டுகின்றீர்கள் என்பதாக அமையுமா?என்று கேட்கப்பட்ட போது, நான் எப்போதும் அடிமட்டத்திலிருந்து நிர்வாகத்தை மேற்கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். தமிழ்மொழியை நான் மதிக்கின்றேன்.மக்கள் தமது தாய்மொழியில் எத்தகைய உணர்வை கொண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன்.'தமிழில் ஒருவர் நிந்தனை செய்தால் கடவுள் கூட அவரை மன்னித்து விடுவார்'என்று ஒரு பழமொழியுண்டு.அரசியல் தீர்வானது என்னால் தாமதமடையவில்லை.அரசியல் தீர்வை நாடும் சகலரையும் புலிகள் பணயக் கைதிகளாக துப்பாக்கி முனையில் வைத்திருந்தார்கள்.அல்லது படுகொலை செய்தார்கள்.13ஆவது திருத்தமானது ஆரம்ப கட்ட விடயமென்று நான் வெளிப்படையாக கூறியிருந்தேன்.இது இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்று.இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகுமென்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழ்க் குழுக்கள் இனப்படுகொலைகள் தொடர்பாக குற்றம் சாட்டியுள்ளன.பொதுமக்கள் கொல்லப்பட்டமை மனித உரிமை மீறல்கள் என்பனவற்றிருக்கு எதிராக ஐ.நா.வின் தடைகளை உங்கள் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வர பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் முயற்சித்தன என்பது பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்த ஜனாதிபதி கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிபவர்கள் பரிசுத்தவான்களாக செயற்படுகின்றனர்.ஏனென்றால் மேற்குலகின் ஊடக தன்மைக்கு நான் பொருத்தமானவனாக இருக்கவில்லை.அவர்களுடைய எதிர்வு கூறல்களுக்கு நான் பணிந்து செயற்படவில்லை. அவர்களுடைய பொம்மைகளாக நான் இருக்கவும் இல்லை.

இனப்படுகொலையானது சமூகமொன்று மற்றொரு சமூகத்தால் படிமுறையாக அழிக்கப்படுவதாகும்.எனது நாட்டில் எந்தவொரு சமூகமும் படிப்படியாக அழிக்கப்படவில்லை. அத்தகைய ஒரு கொடூரத்தன்மையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.நாங்கள் பொல்பொட்,இடிஅமீன் ஆட்சியை நடத்தவில்லை.எமது தாய்நாட்டிற்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள பொதுமக்கள் இலக்குகள் மீது நாங்கள் குண்டு வீச்சை நடத்தவில்லை. எனது அரசாங்கம் ஏதாவது ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமென விரும்பியிருந்தால் புலிகளின் துப்பாக்கி முனையில் யுத்த வலயத்திலிருந்த 3இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நாங்கள் ஏன் மீட்க வேண்டும்.

இன அழித்தொழிப்பை மேற்கொள்பவர்கள் அழிந்து கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற மாட்டார்கள்.எமது மக்கள் சமாதானத்தை விரும்பும் சாந்தமான உணர்வைக் கொண்டவர்கள்.நான் தெற்கிலிருந்து வந்தவன்.கிராமிய பின்னணியைக் கொண்டவன். நான் புத்த தர்மத்தை நம்புகிறேன். புத்த தர்மத்தின் நடுவழியை பின்பற்றுகின்றவன்.அந்த நடுவழியானது பலவந்தமாக என்னை நெருங்கிய போது நான் அந்த இடத்தைப் பெற்றுக் கொள்ளப் போராடுவது அவசியமென்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ங்களை சர்வாதிகாரியென உங்களை விமர்சிப்போர் கூறும் போது அது தொடர்பான உங்கள் பிரதிபலிப்பென்ன என்று கேட்கப்பட்ட போதுஇ விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்ட போது கடுமையான சட்டத்தை கொண்டுவருவதற்கான இலகுவான வழியை ஏற்படுத்தியிருக்க முடியும். படுகொலைகள் குண்டுவீச்சுக்களை அவர்கள் மேற்கொண்ட பின்னரும் நோர்வேயின் அனுசரணையுடனான யுத்த நிறுத்தத்தின் பின்னரும் அதனை நான் கொண்டுவந்திருக்க முடியும்.

நான் அவ்வாறு செய்யவில்லை.நான் உள்ளூராட்சி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினேன். யுத்தத்தின் மத்தியில் சர்வாதிகாரிகள் தேர்தல்களை நடத்துவார்களா?எமது பத்திரிகைகளிலேயே சர்வாதிகாரத்தனம் தொடர்பான விமர்சனங்கள் வந்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனது அரசாங்கத்தை சுட்டிக்காட்டும் இலங்கை பத்திரிகையாளர் ஒருவரின் கட்டுரை அவரின் மறைவின் பின் இலங்கைப் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.சர்வாதிகாரி ஒருவர் இதனை அனுமதித்திருப்பாரா?இந்த மாதிரியான கேள்விகளுக்கு உங்களின் பேட்டியின் போது சர்வாதிகாரியொருவர் பதிலளித்திருப்பாரா?யுத்த காலத்தில் சில கட்டுப்பாடுகள் இருந்தன.அவை சகல நாடுகளிலும் அமுல்படுத்தப்பட்டிருந்தமையாகும்.ஈராக்கில் அமெரிக்கா போக்கிலாண்ட் யுத்தத்தின் போது மார்க்கிரட் தட்சரின் காலத்தில் இவை அமுல்படுத்தப்பட்டிருந்தன என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த கால இலங்கைத் தலைவர்களிலும் பார்க்க புலிகளை கையாள்வதில் எந்தவிதத்தில் நீங்கள் வேறுபட்டிருந்தீர்கள்?எப்போதுமே நீங்கள் இராணுவத் தீர்வை நாடியிருந்தீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,முன்னர் குழப்பகரமான அணுகுமுறையே மேற்கொள்ளப்பட்டது.அது பிரபாகரனுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அனுகூலமாக இருந்தது. இருவழி அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தைக்கு கதவைத் திறந்து வைக்கும் அதேசமயம், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நான் தெரிவு செய்யப்பட்ட முதல் இரண்டு வருடங்களிலும் அந்த வழிமுறையையே நானும் பின்பற்றினேன். தேடப்பட்ட பயங்கரவாதியானாலும் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரும்பியிருந்தேன். அவர் இலங்கையரென நான் கூறியிருந்தேன். ஒன்றுபட்ட இலங்கை என்பதில் அவர் நம்பிக்கை கொண்டு பிரகடனப்படுத்த வேண்டுமென நான் ஒரேயொரு நிபந்தனையை விதித்திருந்தேன் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.திடீரென மாற்றமேற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்ட போது அதிகளவு பயங்கரவாதம்,குண்டு வீச்சுக்கள்,புலிகளின் ஆயுதப்பலத்தைக் கட்டியெழுப்புதல் என்பனவற்றால் எனக்கு கதவுகள் மூடப்பட்டன.மாவிலாறு அணைக்கட்டைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து அவர் முழு அளவிலான போரை விரும்புவதாக நான் தீர்மானித்தேன்.நாங்கள் அந்த இலக்கை நிறைவேற்றியுள்ளோம்.இப்போது இரண்டாவது இலக்கை நிறைவேற்ற வேண்டியுள்ளது. வட கிழக்கில் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.அங்கு சமாதானம்,சுபீட்சம்,ஜனநாயகம் என்பனவற்றை ஏற்படுத்துவதே இரண்டாவது இலக்கு என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: