minnambalam.com -Mathi : தொகுதி மறுவரையறை தொடர்பாக தென் மண்டல கவுன்சில் கூட்டதில் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளன.
சென்னையை அடுத்த கோவளத்தில் தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார், கேரளா முதல்வர் சதீஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “தொகுதி மறுவரையறையின் போது மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
அண்மையில் தமிழக சட்டசபையில், தற்போதைய மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 543 என்பதை உயர்த்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது பிரநிதித்துவம் குறையாத அளவுக்கு தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் பேசி உள்ளார்.
திமுகவின் குரலில் விஜய்
இது தொடரபாக திமுக என்ஆர்ஐ விங் தமது எக்ஸ் பக்கத்தில், “ ஆரம்பம் முதலே திமுக கேட்டு வந்தது Fair Delimitation தான்.
ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுகவின் நிலைப்பாட்டை திரித்துக் கூறி, தன்னுடைய கூட்டணி அல்லக்கைகளை வைத்து ஒரு கூட்டம் நடத்தி ‘No Delimitation’ என்று தீர்மானம் நிறைவேற்றியது.
இப்போது அமித்ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுகவின் ‘Fair Delimitation’ என்கிற நிலைப்பாட்டையே எதிரொலித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
யார் யார் எங்கு சுற்றினாலும், தமிழ்நாட்டின் நலன் என்று வந்துவிட்டால், இறுதியில் திமுகவின் நிலைப்பாட்டுக்கு தான் வந்தாக வேண்டும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இது.
திமுகவின் குரலை விஜய் ஒலித்துவிட்டார். தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், தேர்தலுக்குப் பின்பு ஒரு பேச்சும் பேசிய கூட்டணி மானஸ்தர்கள் இப்போது தங்கள் முகத்தை எங்கு வைத்துக்கொள்வார்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளது.
திமுகவின் ஐடி விங், “ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையரை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!
தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல்காந்தி கூறியது இவரைத்தானா?
கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா?” என கேள்வி எழுப்பி உள்ளது.
அன்று அதிமுக பேசியதுதான்..
அதிமுகவின் ஐடி விங், “திரைப்படங்களில் பல்டி அடிச்சி டான்ஸ் ஆடுவதில் பெயர் பெற்றவர் நம்ம விஜய் ப்ரோ…
அதையெல்லாம் மிஞ்சிய அந்தர் பல்டியை, தற்போது Delimitation விவகாரத்தில் அடித்துள்ளார் ப்ரோ முதல்வர் விஜய்.
இப்போது நீங்கள் சொல்வதை தான் மத்திய அரசும் சொல்லியது, இதனால் தான் அஇஅதிமுக தொகுதி வரையறை மசோதா வந்தபோது ஆதரித்தது!
இப்படி பல்டி அடிப்பதற்கு எதற்கு ஒரு தீர்மான டிராமா?” என கேள்வி எழுப்பி உள்ளது.
விளாசிய டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமா? – தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்ப சட்டமன்றத்தில் தவெக அரசு நடத்திய “தீர்மான நாடகம்” அம்பலமாகியுள்ளது.
சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் இன்றைய உரையின் மூலமாகவே அம்பலமாகியுள்ளது.
தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கான, குறிப்பாக தமிழ்நாட்டின், மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என ஏற்கனவே உறுதியளித்துள்ள மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களின் முன்னிலையிலேயே, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக