திங்கள், 15 நவம்பர், 2010

கனிமொழியா, தயாநிதி மாறனா?அடுத்த தொலைத் தொடர்பு அமைச்சர்

சென்னை: மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜா விலகியுள்ளதால் அடுத்து அப்பொறுப்புக்கு வரப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் புதிய அமைச்சர் உடனடியாக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், ஜனவரி 15க்குப் பிறகுதான் புதிய அமைச்சர் நியமிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அதுவரை பிரதமர் வசமே இத்துறை தற்காலிகமாக இருக்கும்.

தொலைத் தொடர்புத்துறை அடுத்து யாருக்குப் போகப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி அடுத்த அமைச்சர் என்று சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, நான் அமைச்சராகம் திட்டம் ஏதும் இல்லை. மாநிலங்களவை எம்.பியாகவே தொடர்கிறேன் என்று தெரிவித்தார்.

இருப்பினும் அடுத்த அமைச்சர் போட்டியில் கனிமொழி முதலிடத்தில் இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து ஏற்கனவே இப்பொறுப்பை வகித்தவரும், தற்போது ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவருமான தயாநிதி மாறன் இருக்கிறார். இவர் முதலிலேயே தொலைத் தொடர்புத்துறையைத்தான் எதிர்பார்த்திருந்தார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் கூட தயாநிதிக்கே இத்துறையைத் தர விருப்பமாக இருந்தனர். இதை ஒரு நிபந்தனையாகக் கூட காங்கிரஸ் தரப்பு திமுகவிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் திமுக தலைமைதான், அவருக்கு இதை ஒதுக்காமல் ராஜாவை அமர்த்தி விட்டது. இதனால் பெரும் அப்செட்டில் இருந்தார் தயாநிதி மாறன். பின்னர்தான் அவர் ஜவுளித்துறை ஏற்றுக் கொண்டார். முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். பின்னர் கருணாநிதி குடும்பத்தில் பெரும் பிரச்சினை வெடித்ததைத் தொடர்ந்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது ராஜா விலகியுள்ளதால் மீண்டும் இத்துறையைப் பெறுவதில் அவர் தீவிரமாக இருக்கிறார்.

இவர்கள் தவிர தலித் வகுப்பைச் சேர்ந்தவரான ஏ.கே.எஸ். விஜயன் எம்.பியின் பெயரும் அடிபடுகிறது. அதேபோல நிதித்துறை இணை அமைச்சராக இருக்கும் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் பெயரும் அடிபடுகிறது. இவர்கள் தீவிர ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

கருணாநிதிக்கும் மிகவும் நெருங்கியவரான டி.கே.எஸ். இளங்கோவன் பெயரும் பதவிப் போட்டியில் அடிபடுகிறது. இவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார். இவருக்கு கனிமொழியின் ஆதரவு உள்ளது.

இவர்களை விட முக்கியமாக டி.ஆர்.பாலுவின் பெயரும் அடிபடுகிறது. ஆனால் பாலுவுக்கு அமைச்சர் பதவியே கிடையாது என்று அமைச்சரவை உருவாக்கத்தின்போது காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக கூறியது நினைவிருக்கலாம். எனவே இந்தமுறை பாலுவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அதேசமயம், அவரது நீண்டஅனுபவம், நிர்வாகத் திறமை, பேச்சுத் திறமை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அவருக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இத்தனை பேர் பெயர்கள் அடிபட்டாலும் கூட தற்போதைக்கு கனிமொழியின் பெயர்தான் முதன்மையாக பேசப்படுகிறது. அவரது ஆங்கிலத் திறமை மட்டுமல்லாமல், முதல்வரின் மகள் என்ற கூடுதல் பலமும் மற்றவர்களை விட அவரை முதல் வரிசையில் நிற்க வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: