செவ்வாய், 9 நவம்பர், 2010

சீனப் பூனைக்கு யார் மணிகட்டுவது?

ஆசியப் பிராந்தியத்தில் சீனா வல்லமை மிக்க நாடாக பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் வளர்ந்துவிட்டது.அதைச் சுற்றியிருக்கும் நாடுகளான இந்தியா,ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் பொருளாதாரத்திலும் இராணுவ ரீதியிலும் வளர்வது அதன் கண்களை உறுத்துகிறது.

இராணுவ ரீதியாக மோதி அதன் வலிமையைக் காட்ட விரும்பாத சீனா ராஜதந்திர ரீதியாகக் காய் நகர்த்துகிறது.ஆசியப் பிராந்தி யத்தின் நிகரற்ற சக்தியென்று தன்னை நிரூபிக்க அரும்பாடுபடுகிறது.இதற்கு அதனுடைய சக்தியை விரயம் செய்யாமல் எடுபிடிகள் போலுள்ள நாடுகளான பாகிஸ்தானையும் வடகொரியாவையும் லாவகமாகப் பயன்படுத்துகிறது.
உலக சந்தையில் அமெரிக்க தயாரிப்புகள் அதிகம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றின் விலையோ மிக அதிகம். அடுத்தபடியாக ஜப்பான்,தென்கொரியா,இந்தியா இவை மூன்றும் அசுர வேகத்தில் சீனப் பொருளாதாரத்துடன் போட்டி போடுகின்றன.சீனாவோ இவற்றின் வேகத்தை முடக்க நினைக்கிறது.
ஒரு மனிதனுக்கு பொன்னாசை,பெண்ணாசை,மண்ணாசை இம்மூன்றில் எது வந்தாலும் அவன் வளர்ச்சியானது முடிந்துவிடும்.இது நாட்டுக்கும் பொருந்தும்.வீட்டுக்கும் பொருந்தும்.ஹிட்லருக்குப் பிடித்தது மண்ணாசை அவர் உயிர் விடுவதற்கும் அதுதான் காரணம்.ஜப்பான் தன் நெஞ்சில் இரண்டு அணுகுண்டுகளைச் சுமந்த வலி இன்னும் மறையவில்லை.இது வரலாறு சொல்லும் உண்மை.
இந்தப் பாணியை சீனா இப்பொழுது கையில் எடுத்துள்ளது ஆனால், வேறு பாதையில்.
ஜப்பான்,சீனா எல்லையை ஒட்டியுள்ள மூன்று தீவுகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது.தாய்வான் தனக்குக் கீழ்ப்படியாமலிருப்பதால் அதனை விழுங்கக் காத்திருக்கிறது.தென் கொரியாவை வளைக்க தன் கைப்பிள்ளை வடகொரியாவை ஏவி ரகளை செய்கிறது.
இந்தியா மீது ஒரு கண் வைக்க பாகிஸ்தானைத் தயார்ப்படுத்தி வைக்கிறது.இப்படி ஆசியப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையைத் திரை மறைவிலிருந்து சீனா அரங்கேற்றி வருகிறது.
இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன்,இத்தாலி,ஜப்பான் செய்த நேர்முகப் போரை விரும்பாமல் ராஜதந்திர ரீதியில் தன் கைப்பிள்ளைகளை ஏவி வேலை செய்கிறது சீனா. பர்மா மக்களின் துயரம் மிக மிக அதிகம். ஜனநாயகம் மலர மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் பர்மா இராணுவம் விரும்பவில்லை. பர்மாவை ஒட்டியுள்ள நாடு இந்தியா. இதற்கு எளிதாக ஊடுருவ முடியும் என்ற வழி ஒன்றுக்காகவே பர்மா மீது காதல் சீனாவுக்கு.
1962 இல் இந்திய சீனப்போரில் இந்தியா இழந்திட்ட பகுதி இப்பொழுதுள்ள கேரள மாநில அளவுதான். இதை சீனா இந்தியாவுக்கு விட்டுத் தருமா?உலகமே எதிர்த்தபோது திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. அதை சுதந்திர நாடாக அறிவிக்குமா?
அருணாசல பிரதேசத்தை சீனா தனக்குச் சொந்தங் கொண்டாடுகிறது.ஜப்பானுடன் மூன்று தீவுகளுக்கு இப்போது தள்ளு முள்ளு.இப்படி தனக்கொரு நீதி மற்றங்களுக்கு ஒர நீதியா? ஜப்பான் சீனாவில் செய்துள்ள முதலீடுகள் மிக அதிகம்.அதை இழக்க விரும்பவில்லை சீனா இதற்காகச் சமாதானப்படுத்த சில ஜப்பான் மீனவர்களை விடுதலை செய்துள்ளது சீனா. நேரடி மோதல் முடியாவிட்டால் தன் கைப்பிள்ளை வடகொரியா மூலம் ஹிம்சைதர ஆரம்பிப்பது அதன் வழக்கம்.
இப்படி ஆசிய பிராந்தியத்தில் தன் நிலம் என்று உரிமை கொண்டாடும் சீனா இந்திய நிலப்பரப்பை விட்டு விலகுமா? பர்மாவுக்கு இந்தியா தந்த “கோகோ’ தீவில் சீன இராணுவத்துக்கு என்ன வேலை? பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு,காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளில் சீனாவுக்கு என்ன அக்கறை? எனினும் சோவியத் ரஷ்யாவானது 13 நாடுகளாகச் சிதறிய பிறகு உலக அரங்கில் கம்யூனிசத்துக்குத் தலைமை ஏற்றுள்ள சீனா இன்னொரு பனிப்போருக்கு ஆயத்தமாகிவிட்டது. ஜனநாயகம் அமைதியாக இருக்க தெற்கு ஆசியாவில் தன்னைக் காத்துக் கொள்ள இந்தியாவும் தயார் நிலையிலிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நாம் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்.உலக அரங்கில் மற்ற நாடுகளைப் புரிந்துகொள்ளும் இந்தியா சீனாவைப் புரிந்து கொள்ளாதது மிக வியப்பாகவே உள்ளது.
சீனாவின் வலையில் இந்தியா சிக்குவது சாத்தியமில்லை என்று உணர்த்த வேண்டிய தருணமிது.ஜப்பானைப் போன்று சீனாவின் பொருளாதரம் நம் சந்தையிலுள்ளது.சீனாவின் சகல விதமான வளர்ச்சிக்கும் அதன் பொருளாதாரம் மிக முக்கியமான காரணமாகும். ஜப்பான்,தென்கொரியா மற்றும் இந்தியா இவற்றின் சந்தையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் சீனா தன் கொள்கையிலிருந்து மாறுபட்டு முரண்டு பிடிக்கிறது.
சீனப் பொருள்களின் இறக்குமதிக்கும் அவர்களின் வர்த்தகத்துக்கும் இந்தியா முட்டுக்கட்டை போடுவதன் மூலம் சீனாவுக்குப் பாடம் புகட்டலாம்.
நேரடியாக நம்மால் முட்டுக்கட்டை போட முடியாது.உலக வர்த்தக அமைப்பு யார் வேண்டுமானாலும் எந்தப் பொருளையும் எங்கேயும் விற்கலாம் என்று சொல்கிறது.இதனால் நேரடியாகத் தடை செய்தால் நமக்கும் பாதிப்பு ஏற்படும்.ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் தரம் இல்லாத பொருள்களை இறக்குமதி செய்வதில்லை.மேற்கத்திய நாடுகளும் அப்படியே. அதையும் மீறி இறக்குமதி செய்தால் அதன் மீது அதிகமான வரி விதிக்கப்படுகிறது.இதனால் உள்ளூர் உற்பத்திப் பொருகளைக் காட்டிலும் இறக்குமதிப் பொருள்கள் விலை அதிகம்.
ஆனால்,இந்தியாவில் அப்படியில்லை. சீனப் பொருள்கள் தரம் குறைந்ததாக மலிவு விலையில் நம் சந்தையை நிரப்புகின்றன. இதனால் அவர்களுக்கு நல்ல இலாபம்.120 கோடி மக்கள் தொகை சீனாவுக்கு நல்ல இலாபத்தை தருகிறது.இதற்குப் பலியாவது நல்ல தரத்தில் உற்பத்தி செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்கள்.இப்படி நாமும் சீனாப் பொருள்களை மறைமுகமாக வரி மற்றும் தரம் ரீதியாகக் கட்டுப்படுத்தினால் இந்தியாவில் இன்னொரு தொழில்புரட்சி சாத்தியமோ,பொருளாதார ரீதியில் பலம் கொண்டதால் ஆட்டம்போடும் சீனா இனி யாரையும் மிரட்ட முடியாது.
டி.ராஜாராம்

கருத்துகள் இல்லை: