செவ்வாய், 9 நவம்பர், 2010

ஜாதிவாரி கணக்கெடுப்பு, மைனாரிட்டி ஜாதிகள் "அதோகதி!'

இப்போது பல அரசியல் தலைவர்களும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், சாதாரண மக்கள் என்ன நினைக்கின்றனர் என யாரும் கவலைப்படுவதில்லை. ஏற்கனவே, ஜாதிகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. ஆனால், எந்த ஜாதியிலும், ஒரு குறிப்பிட்ட மக்களைத் தவிர, மற்றவர்கள் முன்னேற்றம் அடையவில்லை. தேவைப்படுபவர்களுக்கு இடஒதுக்கீடு, சென்றடையவில்லை. இதை யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டால், பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள், எண்ணிக்கையின் அடிப்படையில் மைனாரிட்டி ஆகி விடுவர். இப்போதே பல ஜாதியினர், அவர்களின் தலைவர்கள் விழாவின்போது, வேன்களிலும், லாரிகளிலும் அவர்களது ஜாதி கொடியை கட்டி, வன்முறையில் ஈடுபட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைய செய்கின்றனர். தேர்தல் வந்தால், ஏதாவது ஜாதிப் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்து, மாநாடு நடத்தி, மற்ற கட்சிகளோடு, சில சீட்டுகளுக்காக தங்கள் சமுதாய மக்களையே அடகு வைப்போருக்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால், கொண்டாட்டம் தான். கணக்கெடுப்பு நடந்தால், மைனாரிட்டி ஆகும் ஜாதியின் நிலை என்ன; பெரும்பான்மையான ஜாதியினர் அவர்களை எப்படி நடத்துவர், என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தித்தான் ஆக வேண்டும் என்றால் ஒன்று செய்யலாம்... இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய வேண்டும். மைனாரிட்டி ஆகும் ஜாதியினருக்கு என, தனி இட ஒதுக்கீடு செய்தால் தான், அவர்களும் சமூகத்தில் பயமில்லாமல் வாழ முடியும். இல்லையென்றால், மைனாரிட்டி ஜாதி மக்களின் நிலைமை அதோகதி தான்.

கருத்துகள் இல்லை: