செவ்வாய், 9 நவம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் நடக்கும் மீற்றிங் கலாசாரம்


அதிகாலை வேளையில் எழுந்து பஸ் பிடித்து தேவையை நிறைவு செய்வதற்காக கந்தோருக்குச் செல்கிறார் ஒருவர். கந்தோர் வாசலில் நிற்பவர் என்ன என்று வினவுகிறார். ஐயாவைச் சந்திக்க என்பது பதிலாக இருக்க, ஐயாவைச் சந்திக்க முடியாது என்ற பதில் அதிரடியாக வருகிறது.
ஏன்?
ஐயா மீற்றிங்குக்கு (கூட்டத்திற்கு) போயிற்றார்…
நேற்றும் இப்படித்தானே சொன்னனீங்கள்…
நேற்று பலாலியில மீற்றிங்…
அப்ப இண்டைக்கு…
கொழும்பில மீற்றிங்.
எப்ப வருவார்?
சொல்லமுடியாது.
கடவுளே! வாற திங்கட்கிழமையாவது சந்திக் கலாமோ?
திங்கட்கிழமை ஐயா பிரதம விருந்தினர்.
எங்க?
என்ன விடுப்புக் கேட்கிறியள். ஐயா இல்லை யெண்டால் போகவேண்டியதுதானே!
வாசலில் நின்றவர் குரைக்கத் தொடங்கினார். தொடர்ந்து கேள்விகேட்டால் ஏஆர்வி போட வேண்டி வந்தாலும் வரும். இருந்தும் அம்மாவையாவது சந்திக்கலாமோ? என்று பெளவியமாக கேட்டார் அந்த வயதானவர்.
அம்மா திட்டமிடல் கூட்டத்திற்குப் போயிட்டார்.
திட்டமிடல் கூட்டமோ? அதென்ன?
இந்தாளோட பெரும் கரைச்சல் என்ற முணு முணுப்போடு வாசலில் நின்றவர் கூறினார்.மக்களுக்கு எப்படி சேவையாற்றுவது, என்ன திட்டங்களை அமுல்படுத்துவது என்று ஆராய்வதுதான் திட்டமிடல் கூட்டம்.
இந்தப்பதிலைக் கேட்டதும் அந்த முதியவர் விழுந்து விழுந்து சிரித்தார்.
என்னையா இப்படிச் சிரிக்கிறியள். நான் இப்ப என்ன சொல்லிப்போட்டன்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்கு திட்டமிடல் கூட்டமென்றால் எப்ப பெஞ்சனுக்கு பிறகோ மக்களுக்கு சேவையாற்றுவது…?
முதியவரின் கருத்து முறைப்பாக இருந்தது. அட தம்பி! அதிகாரிகள் முதலில் கதிரையில குந்தியிருக்கவேணும். அங்க மீற்றிங் இங்க மீற்றிங் என்று மிற்றிங்கிலேயே காலத்தை வீணாக்கினால் அந்த அலுவலகமும் பாழாய்ப் போய் மக்கள் சேவையும் நாசமாய் போய்விடும். முதியவரின் கூற்று அலுவலக வாசலில் நின்ற வரை நெகிழவைத்தது.
நீங்கள் சொல்வது சரிதான் ஐயா! நாங்கள் என்ன செய்யிறது. எத்தனையோ பேர் இங்க வந்து அலைந்து போகினம். பலாலியில கூட்டம், ஊரெழுவில சந்திப்பு, திருகோணமலையில மீற்றிங், கொழும்பில கருத்ரங்கு, யாழ்ப்பாணத்தில பயிலரங்கு என்ன செய்யிறது, இவற்றுக்கு மேலாக விழாக்கள், மாலை மரியாதை ஏற்பாடுகள் இதுக்கே நேரம் போதாது. பாவம் பொதுசனங்கள்.
எதிர்பாராத இந்தக்கதையைக் கேட்டதும் முதியவர் இறைவா! என அண்ணாந்தார். அலுவலகத்தின் சுவரில் நோக்கக்கூற்று, பணிக்கூற்று எல்லாம் அழகாக எழுதப்பட்டதை பார்த்த அவர் விம்மி விம்மி அழுதார்.வீடுசெல்லத் தயாரானபோது, இரண்டுபேர் அவரின் கையில் துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்தனர். ‘முதியோர் தின விழா’ என்று அந்தத் துண்டுப்பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது. முதியவர் தள் ளாடினார்.
உலகே மாயம்… இந்த உலகே மாயம்… என்ற பாடல் வானலையில் இசைக்கப்படுகிறது. உலகு மாயம்; யாழ்ப்பாணம்
-வலம்புரி -

கருத்துகள் இல்லை: