மின்னம்பலம் - Kavi : கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2026 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தோல்வியுற்றார். அந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
இந்த நிலையில் விஎஸ் பாபு வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.
அதில், முறைகேடுகள் நடந்துள்ளதால், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை சரிபாா்க்க உத்தரவிட வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, கடந்த மே 7ம் தேதி, 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் முறைகேடு அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
மே மாதம் தொடக்கத்தில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் மிக தாமதமாக கடந்த ஜூலை 29 அன்றுதான் சோதனையும் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை சரி பார்க்க வேண்டும். விஎஸ் பாபு வெற்றியை செல்லாது என்று அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 3) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தொடர்ந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய நீதிபதிகள் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக