வியாழன், 26 ஜூலை, 2018

பாகிஸ்தான் பிரதமாராக இம்ரான் ... வருவதில் புதிய சிக்கல்


விகடன் -அஷ்வினி சிவலிங்கம் : பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி  முன்னிலை வகித்து வந்த நிலையில்,  தற்போது புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.< பாகிஸ்தானில் நேற்று (25-07-2018) பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி, பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நேற்றிரவு 11 மணி நிலவரப்படி இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி 101 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இம்ரான் கான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதில் இம்ரான் கான் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் மொத்தம் 272 தொகுதிகள் உள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை. இதையடுத்து மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று இம்ரான் கான் ஆட்சி அமைக்கலாம். எம்.எம்.ஏ. என்னும் ராணுவ கட்சியின் ஆதரவை இம்ரான் கான் நாடலாம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் கணித்துள்ளன. ராணுவக் கட்சியின் ஆதரவைப் பெற்றால், இம்ரான் கான் ஆட்சியிலும் ராணுவ முறைகள் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும். 
இன்று காலை நிலவரப்படி, இம்ரான் கானின் கட்சி 113 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. நவாஸ் ஷெரீஃப் கட்சி 64 இடங்களிலும் பிலவால் பூட்டோ கட்சி 42 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக நவாஸ் ஷெரீஃபின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரபூர்வமாக யார் முன்னிலை என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ‘புதிய பாகிஸ்தான் பிறந்துவிட்டது’, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்’ என்று கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.

பாகிஸ்தான் தேர்தலை கூர்ந்து கவனித்து வரும் அமெரிக்கா, இது நியாயமான முறையில் நடத்தப்பட்ட தேர்தல் இல்லை. முறைகேடுகள் நடந்துள்ளன’ என்று விமர்சித்துள்ளது. எது அப்படியோ சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் ஆகப்போவது உறுதி!

கருத்துகள் இல்லை: