அறிவியல், ஆன்மிகம், மொழி பெயர்ப்பு, கட்டுரைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் என பலவற்றையும் தொகுத்துள்ள கால சுப்பிரமணியம், பிரமிளுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு, அவரது படைப்புகள் பற்றி பிபிசி தமிழிடம் பேசினார்.
”நான் பிரமிளின் ஒரு கட்டுரைக்கு வாசகர் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவரிடம் இருந்தே எனக்கு பதில் கடிதம் வந்ததும், அவரை பார்ப்பதற்காக சென்னை வந்தேன். எழுதுவதில் நம்பிக்கை இல்லாமல் இருந்த அவர், எனக்காக எழுதப்போவதாக சொன்னார். இது என்னை அவரோடு நெடுங்காலம் இணைத்து வைப்பதற்கான முதல்புள்ளியாக அமைந்தது. பிரமிளின் கவிதைகளை எனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன். இது மேலும் என்னை அவரின் முழுமையாக படைப்புக்களை வாசிக்கவைத்தது,” என்கிறார் கால சுப்பிரமணியம்.
நண்பரின் படைப்புக்களை வாசிப்பது என்று தொடங்கி, அவரது புது படைப்புக்களை பத்திரிகைகள் மற்றும் பதிப்பாளர்களிடம் கொண்டு செல்வது என்று வேலை செய்யத் தொடங்கியதாக கூறுகிறார் அவர்.
”1979 முதல் 1997ல் அவரது மறைவு வரை அவரோடு பயணித்துள்ளேன். அவரோடு நீண்டகால நட்பில் இருந்தவர்கள் மிகவும் குறைவு. கருத்து மோதல்கள் காரணமாக பல விமர்சனக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதினர். இதன்காரணமாக பலரின் நட்பை அவர் இழந்தாலும், சமரசம் செய்துகொள்ளவில்லை. பிரமிளின் படைப்புக்களை வெளியிடுவதற்காக 1985ல் லயம் என்ற சிறுபத்திரிகை மற்றும் பதிப்பகத்தை நான் தொடங்கி அவரது படைப்புக்களை வெளியிட்டேன்,” என்றார்.
தற்போது கொண்டுவந்துள்ள புத்தக தொகுப்புக்கான வேலைகள் பத்து ஆண்டுகளாக நடந்துவந்தது என்று கூறும் அவர்,” பிரமிள் என்றாலே அவரது கவிதைகளை மட்டுமே பலரும் பேசுகிறார்கள். அவர் பலவிதமான படைப்புக்களை அளித்துள்ளார். எழுத்து மட்டுமில்லாமல் அவர் ஓவியம் வரைவது, களிமண் சிற்பம் வடிப்பது, ஜோதிடம், ஆன்மிகம் போன்றவற்றில் ஆர்வம், அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதுவது என பலவிதங்களில் இயங்கிவந்தார்.
பிரமிள் என்ற ஆளுமையை இந்த தலைமுறைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காக நான் பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. அவரின் கையெழுத்துப் பிரதிகளையும் இந்த தொகுப்பில் கொண்டுவந்துள்ளேன். சிறு பத்திரிகைகளில் வெளியான கதைகள் பலவற்றை தேடுவதில் சிரமம் இருந்தது. ஆனால் மனநிறைவுடன் இந்த ஆறு புத்தகங்களையும் கொண்டுவந்துள்ளேன்,” என விவரித்தார்.
பிரமிளின் படைப்புக்கள் படிப்தற்கு எளிமையானவை அல்ல என்ற வாதம் இருப்பது குறித்து கேட்டபோது, ”பிரமிளின் படைப்புகள் அடர்தியானவை என்பது உண்மைதான். ஆனால் அவரின் கட்டுரைத் தொகுதிகள் எளிமையானவை. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள், மூச்சு பயிற்சி செய்வது, சூபி, பௌத்த மதம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம், சமையல் என பலவிதமான தலைப்புகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழ் இலக்கியத்தை விரும்பிப்படிக்கும் எவரும் படிக்கும் வகையில் உள்ளன,” என்கிறார்.
எழுத்து மட்டுமே தனது வாழ்க்கை என்று இயங்கிய பிரமிளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை அமைத்துக்கொள்வதில் பல சிக்கல்கள் இருந்தன; எழுத்து மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு, நண்பர்களின் உதவியோடு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்தார் அவர் என்கிறார் சுப்ரமணியம்.
பிரமிள் வாழ்ந்த காலத்தில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறும் கால சுப்பிரமணியம், தற்போது பலரும் அவரைத் தேடி வாசிக்கும் நபராக மாறியுள்ளனர் என்றும் அவரது படைப்புக்கள் மீதான மீளாய்வு கூட்டங்களை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.
“விடுதலைப் புலிகளுக்கு மொழி பெயர்த்தவர்“
எழுத்தாளரும் பிரமிளின் நட்பு வட்டத்தில் இருந்தவருமான அழகிய சிங்கரும் பிரமிளுக்கு வாழும் காலத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறினார்.
“இருபது வயதில் பாரதி பற்றியும் இலக்கியச்சூழல் குறித்தும் அவர் ‘எழுத்து’ சிறுபத்திரிக்கையில் எழுதியுள்ளார். தற்போதுள்ள இருபதுவயது எழுத்தாளர் யாரும் பிரமிள் போல எழுதமுடியுமா என்பது கேள்விக்குறி. தமிழில் கா.ந.சுப்ரமணியம் மற்றும் சி.சு.செல்லப்பா போன்றோரின் இலக்கிய விமர்சன வரிசையில் அடுத்து வந்தவர் பிரமிள். அவரது கட்டுரைகளில் அவரது சக எழுத்தாளர்கள் பற்றி தொடர்ந்து விமர்சித்துவந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்,” என்று கூறினார்.
பிரமிள் யார்?
1939ல் இலங்கை திருகோணமலையில் பிறந்துவளர்ந்தவர்.
இலங்கையில் இருந்து தனது இளமைக்காலத்தில் தமிழகத்திற்கு குடியேறிய எழுத்தாளர். தரு.மு.சிவராம் என்று அறியப்பட்டவர். எழுத்து என்ற சிறுபத்திரிகையில் எழுதத்தொடங்கிய அவர், கவிதைகள், சிறுகதைகள், நாடகம், கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் என பலவிதமான படைப்புக்களை தொடர்ந்து எழுதிவந்துள்ளார். கசடதபற, ஞானரதம், வானம்பாடி, சதங்கை, கொல்லிப்பாவை போன்ற சிற்றிதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின.
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட பிரமிள், ஜே.கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகள், யோகிராம்சுரத்குமார் குறித்தும், பௌத்தம், சூபி, நாத்திகம் போன்ற மத நம்பிக்கைகள் குறித்தும் எழுதியுள்ளார். தனது சக எழுத்தாளர்களின் படைப்புக்களை இலக்கிய விமர்சனத்துக்கு உட்படுத்தி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
குடும்ப வாழ்க்கை இல்லாமல் தனிநபராகவே இருந்தார். சென்னை, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் வசித்த அவர் இறுதிக் காலத்தில் வேலூரில் வசித்தார். 1995ல் சிலிக் குயில் பதிப்பகத்தின் ‘புதுமைப்பித்தன் வீறு’ மற்றும் அதே ஆண்டு அமெரிக்காவில் உள்ள விளக்கு அமைப்பின் ‘புதுமைப்பித்தன் விருது’ ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 1997ல் மறைந்தார்.
bbc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக