வியாழன், 26 ஜூலை, 2018

ஊடகங்களால் முடியாததைத் தனி ஒருவனாகச் சாதித்தார் ராகுல் காந்தி .. கேள்விக்கு உள்ளாக்கப்படும் அதிகாரம்

சவுக்கு : குத்துச்சண்டைக் களத்தில் முகமது அலி முதல் மைக் டைசன் வரை பலரும் நாக் அவுட் குத்து விடுவதை பார்த்திருக்கிறோம். ராகுல் காந்தி தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர் என்ற போதிலும், தனது நாக் அவுட் பஞ்சைக் குத்து மூலம் அளிக்கவில்லை. காட்டமான, தீவிரமான உரையை நிகழ்த்தியதற்குப் பின், அவர் கட்டி அணைப்பதன் மூலம் அளித்த பஞ்ச், பிரதமர் நரேந்திர மோடியைத் தீவிரமான திகைப்பில் ஆழ்த்தி, பாஜகவைத் திணறடித்தது. அவரது இந்தச் செயல், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் என அனைத்தையும் வியாபித்து அமித் ஷா படையினரை ஓட ஓட விரட்டியது.
ராகுல், திகைத்துப்போன மோடியை கட்டி அணைத்ததன் மூலம் தோல்வியில் முடிந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தைக் காலிசெய்துவிட்டார். வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டித் தழுவும் பழக்கம் கொண்டவரும் மற்றவர்களை திணறடிப்பவரும் 56 அங்குலம் விரிந்த மார்பு கொண்டவருமான பிரதமரை ராகுல் கட்டி அணைத்தார். திகைத்துப்போன மோடி, ராகுலை பதிலுக்குக் கட்டி அணைக்கவில்லை. ஆனால் தொலைக்காட்சி காமிராக்களை உணர்ந்தவர் அரை மனதுடன் ராகுலிடம் கைகுலுக்கினார். ராகுல் முதுகில் லேசாக தட்டிப் பாராட்டவும் முற்பட்டார். ராகுல் திரும்பி வந்தபோது தனது காங்கிரஸ் சகாக்களைப் பார்த்து கண்ணசைத்தது அனைவரையும் கவர்ந்தது.

தலைப்புச் செய்திகளுக்கு உயிரூட்டி, தொலைக்காட்சித் திரைகளைத் துடிப்பாக்கிய இந்த நிகழ்வுக்கு முன், ராகுல், மோடி தனது ஆட்சியை ‘நல்ல நிர்வாகம்’ எனக் கூறிவரும் கருத்தின் மீது நுணுக்கமான தாக்குதலைத் தொடுத்தார். மோடி, அமித் ஷாவின் கூற்றுகளைக் கிழித்தெறிந்தவர், ஆளும் கட்சிக்கு எங்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துமோ அத்தகைய பிரச்சினைகளில் வறுத்தெடுத்தார்.
பெண்கள், விவசாயிகள் மற்றும் தலித்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஒரு மனிதர் மற்றும் அவரது தற்பெருமை அரசின் ஜும்லா (பொய் பேசுதல்) தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதிலிருந்து ராகுல் துவங்கினார்.
ராகுல் எதையும் விட்டுவைக்கவில்லை. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மோடி, நிர்மலா சீதாராமன் இருவர் மீதும் குற்றம் சாட்டினார். எப்படி இந்த ஒப்பந்தம் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து பறிக்கப்பட்டு, மோடியின் கோடீஸ்வர ஆதரவாளரிடம் கொடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டார். ராகுல் நேரடியாகத் தாக்கினார். மோடிக்கு நெருக்கமான இந்த நபர் பாதுகாப்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாதவர்; பல்லாயிரம் கோடி கடனில் மூழ்கியிருப்பவர் எனவும் ராகுல் குறிப்பிட்டார்.
இந்தத் தீவிரத் தாக்குதலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பாஜக உறுப்பினர்கள் எதிர் கூச்சலிட்டார்கள். குறிப்பாக, மோடி ஆட்சியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜே ஷா பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதாக ராகுல் குற்றம் சாட்டியபோது. ராகுல் இந்தியில் தடுமாறியபோது மிகையாகச் சிரித்துப் பரிகசித்தனர்.
மிகையான சிரிப்பை மீறி, சாம்பலாக மாறிய மோடியின் முகம் எல்லாவற்றையும் சொல்லியது. சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் என்று ராகுல், தனது பேச்சில் அடித்து நொறுக்கினார். அன்றைய தினத்தின் சிறந்த வாசகத்தையும் பேசினார். “மோடி காப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் கொள்ளையில் பங்கெடுக்கிறார்.”
மோடி முகத்தில் கோபம் தாண்டவமாடியதைப் பார்க்கலாம். மோடிக்கு இரு வழித் தகவல் தொடர்பில் பழக்கம் இல்லை. அதை அவர் வெறுக்கிறார். நீண்ட, போதனையான, திட்டமிட்ட உரைகளை அவர் விரும்புகிறார். இதன் மூலம் அனுதாபத்தை அறுவடை செய்ய விரும்புகிறார்.
கூச்சலிட்டு, ஊளையிட்டுக்கொண்டிருந்த பாஜகவினர், ஆளும்கட்சி உறுப்பினர்கள் போலக் காட்சி அளிக்காமல் தெருச் சண்டைக்காரர்கள் போலத் தோன்றினர்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நிர்மலா சீதாராமன், அனந்த் குமார் ஆகியோரின் உரத்த குரலிலான தலையீடுகளின் நெருக்கடிக்கு உள்ளானர். இவர்கள் ‘அவதூறு’ எனும் கருத்தை எழுப்ப முயன்றனர். பிறகு மகாஜன், மரியாதையாகப் பேசுவது பற்றி வகுப்பெடுத்தார். ஆனால் அவை என்பது உண்மையான மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் இருப்பிடம் சபாநாயகர் அவர்களே. ராகுல் இதை அவருக்குச் சரியாகச் சுட்டிக்காட்டினார்.
துதிபாடுபவர்களால் சூழப்பட்டிருக்கும் மோடி, எதிர்மறையான எதையுமே கேட்க முடியாதவராக இருக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சாரம்சம் என்பது காது கொடுத்துக் கேட்பதுதான். அது அவருக்கு அந்நியமானது.
பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட கொறடா அனுராக் தாகூர், அவையில் எதிர்கட்சியினரைப் பேச விட மாட்டேன் என மிரட்டல் விடுத்த பிறகு ராகுலின் உரை நிகழ்ந்தது. இது விநோதமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் புதிய இந்தியா – புதிய பாஜக. ஜனநாயக நாட்டில் விவாதத்தை நசுக்கப்பார்ப்பவர்கள் அவர்கள். மோடி, ஷாவிடம் சிறப்பான உறவு இல்லாத தாகூர், எதிர்க்கட்சியினரை மிரட்டித் தனக்கான ஆதரவை தேட முற்பட்டிருக்கலாம். ஆனால், ராகுலிடம் அது செல்லுபடியாகவில்லை.
ராகுல் போல் அல்லாமல் மோடி, புன்னகை இல்லாத சிரிப்புடன், சகாக்களை அச்சுறுத்த விரும்பும் விக்டோரிய காலத் தலைமை ஆசிரியர் போல, எதிர்க்கட்சிகளையும் தேசத்தையும் கட்டுப்படுத்தி வைக்க விரும்புகிறவர். மோடியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், தனக்கு நெருக்கமான பெரும் பணக்காரர்களுக்கு அவர் காட்டும் தயவு, மோடி உருவாக்கிய பணமதிப்பிழப்பு பாதிப்பு, அவரது வலது கரமான அமித் ஷா மேலும் மேலும் செழிப்படைவது ஆகியவற்றைக் குறிவைத்து ராகுல் தொடுத்த தாக்குதல் மோடியைத் தடுமாற வைத்ததைப் பார்க்க முடிந்தது.
ராகுல் உரை நிகழ்த்தியபோது அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜகவினர் ரகளை செய்ததால், அவை ஒத்தி வைக்கப்பட்டது நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாதது. இங்கு நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அமைச்சர்கள், அதிலும் குறிப்பாக காந்தி குடும்பத்தினரை வம்புக்கிழுப்பதைத் தனது பணியாக வைத்திருக்கும் ஸ்மிருதி இரானி, இரு முறை உயர் பொறுப்பு இலக்காக்களிலிருந்து நீக்கப்பட்டும், ராகுலைத் தாக்குவதற்காகவே அமைச்சரவையில் நீடிப்பவர். அவர் சொல்வதை எல்லாம விசுவாசமாக வெளியிடும் ஊடகங்கள் ராகுலை பாஜக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தன.
ஒவ்வொரு நாளும் இதே போன்ற வாசகங்கள் ஆவேசமான பாஜக செய்தித் தொடர்பாளர்களால் உதிர்க்கப்பட்டு, சுதந்திரமான ஊடகங்களால் விழுங்கப்பட்டன.
ஜனநாயகத்தில் சுதந்திர ஊடகம் செய்ய வேண்டியதை, அதாவது, அதிகாரத்தைக் கேள்வி கேட்பதை ராகுல் தனிமனிதராகச் செய்திருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாகச் சில அரிதான விதிவிலக்குகளைத் தவிர, ஊடகத்தில் உள்ள பாஜக துதிபாடிகள் எதிர்க்கட்சியைத்தான் கேள்வி கேட்கின்றன.
ஷா உருவாக்கிய படையினர் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ராகுல் மீது அதை வெளிப்படுத்தினர். நாடகம் நிகழ்த்துவதாக அவரை ஏளனம் செய்தனர். ஆனால் அதற்கு உரியவர் அடையாளம் காட்டப்பட்டபோது இந்த வீரர்கள் மவுனமாக இருந்தனர். மோடி, ஷாவின் ஒவ்வொரு உத்திக்கும் ஆரவாரம் செய்து கைதட்டி குட்டிக்கரணம் அடித்தனர். ராகுல் இந்தியிலேயே பேசியிருக்க வேண்டும் என்றார் ஒருவர். தென்னிந்தியா, கிழக்கு இந்தியா ஆகியவை எல்லாம் முக்கியமில்லாததுபோல் அவர் இதைச் சொன்னார். ராகுலைத் தாக்க மிகவும் பரிதாபமான முயற்சியில் பரிதவிப்போடு அவர்கள் இறங்கினார்கள்.
திகைத்துப்போன் பாஜக இப்படிக் குறும்பதிவு வெளியிட்டது; மோடியின் சிரிக்கும் படத்தை வெளியிட்டு “நல்ல பொழுபோக்கிற்கு நன்றி” எனக் கூறியது. ஆனால், கேலிக்குள்ளானது தாங்கள்தான் என்பதை ஆணவத்தினாலும் பதற்றத்தினாலும், பாஜகவால் உணர முடியவில்லை.
ராகுல் காந்திக்கு இது வெற்றித் தருணமாக அமைந்தது. பலரும் விரும்புவதுபோல மோடியின் கோமாளியாக மாறாமல் இருக்க அவர் தீர்மானித்தார். மோடியின் துவேஷத்திற்கு எதிராக அவர் அன்பை முன்நிறுத்தி, தனது கொள்கையில் உறுதியாக நின்று காங்கிரஸ் உறுதியாக நம்புவதையும் வெளிப்படுத்தினார். அவரது உரை அரசியல் பூகம்பத்தை உண்டாக்கியது. நாடாளுமன்றத்தின் உறுதியான சுவர்களுக்கு வெளியேவும் இதன் அதிர்வுகளை உணரலாம்.
(ஸ்வாதி சதுர்வேதி தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்.)
 நன்றி: நியூஸ் சென்ட்ரல்
 https://newscentral24x7.com/gandhi-single-handedly-did-what-the-entire-free-press-should-be-doing-in-a-democracy-holding-power-to-account/

கருத்துகள் இல்லை: