கரண் தாப்பரின் ‘டெவில்ஸ் அட்வகேட்; அன்டோல்ட் ஸ்டோரி’ (Devils Advocate: The Untold Story) என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.
கரண் தாப்பர்
நரேந்திர மோடியிடம் 2007இல் பேட்டி கண்டது, கரண் தாப்பர் எடுத்த ஆயிரக்கணக்கான பேட்டிகளில் ஒன்று என்றாலும், வேறு காரணங்களுக்காக இந்தப் பேட்டி அவரால் மறக்க முடியாததாக இருக்கிறது. இந்தக் கதைக்கு இன்னும் முடிவு வரவில்லை. இன்றும்கூட அந்தப் பேட்டி பேசப்படுகிறது. அந்த பேட்டிக்கு முன், பேட்டியின்போது மற்றும் பிறகு என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
நரேந்திர மோடி அரசு என்னைப் பற்றி உயர்வாக நினைக்கவில்லை என்பது ஒன்றும் ரகசியம் இல்லை. ஒரு சில அமைச்சர்களுடன் நான் நட்பாக இருக்கிறேன் – அருண் ஜேட்லி நல்ல உதாரணம் – ஆனால், பெரும்பாலான அமைச்சர்கள், என்னுடன் நன்றாகப் பழகியவர்கள், மோடி பிரதமரான ஒரு ஆண்டுக்குள் என்னை புறக்கணிப்பதற்கான காரணங்கள் அல்லது சாக்குகளைக் கண்டுபிடிக்கத் துவங்கிவிட்டனர்.
ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், வெங்கையா நாயுடு போன்றவர்கள் எனக்குக் கதவை மூடத் துவங்கிவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தபோதும் 2014க்குப் பிறகும் ஆட்சியின் முதலாண்டில் கேட்டவுடன் பேட்டி கொடுத்தவர்கள்தான் இவர்கள். நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் பேட்டிக்கு ஒப்புக்கொண்டு நேரம் ஒதுக்கிவிட்டு, பின்னர் கடைசி நேரத்தில் எந்த விளக்கமும் கூறாமல் ரத்து செய்யும் அளவுக்குச் சென்றனர்.
கட்சியின் புறக்கணிப்பு
எனது டிவி நிகழ்ச்சி விவாதத்தில் பங்கேற்பதற்கான அழைப்புகளை பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மறுக்கத் துவங்கியபோது, நான் வேண்டப்படாதவன் என்பது புரியத் துவங்கியது. துவக்கத்தில் அவர்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக்கொண்டேன். எனினும் இது தொடர்ந்து நிகழந்தபோது, சம்பீத் பத்ராவிடம் ஏதேனும் பிரச்சினையா என்று கேட்டேன். அவர் மெல்லிய குரலில், தர்மசங்கடம் அடைந்ததை உணர்த்தும் விதமாக, பதில் சொல்வதற்கு முன், என்னால் ரகசியத்தைக் காக்க முடியுமா எனக் கேட்டார். நான் தேவையான உறுதி அளித்த பிறகு, பாஜக செய்தித் தொடர்பாளர்கள் என் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்ததாக அமைச்சர்கள். எப்போதும் பேட்டி கொடுக்கத் தயாராக இருந்தவர்கள், சவாலான கருத்துப் பரிமாற்றத்தை விரும்பியவர்கள், திடீரென அழைப்பிற்கு பதில் அளிக்காத தொலைபேசி எண்களாக மாறினர். அவர்கள் செயலாளர்கள், “சார் சாரி என்கிறார். அவர் மிகவும் பிஸி” எனும் பதிலை மட்டுமே அளித்தனர்.
பிரகாஷ் ஜவடேகரை மட்டும்தான் என்னால் நிகழ்ச்சியில் பங்கேற்கவைக்க முடிந்தது. அவரது கட்சி செய்தித் தொடர்பாளர்கள், அமைச்சரவை சகாக்கள் ஆகியோர் மறுப்பது அல்லது பதிலளிக்காமல் இருப்பது எனும் உத்தியைக் கடைப்பிடிக்கத் துவங்கிய பிறகும் அவர் தொடர்ந்தார். பின்னர் ஒருநாள் அவரும் தயங்கினார். அவராக அழைத்துப் பேசியபோது இது புரிந்தது. “என்ன ஆயிற்று கரண், உங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது எனக் கட்சி கூறுகிறது” என கேட்டார்.
அப்போதுதான், பாஜகவுக்கு என்னிடம் பிரச்சினை இருக்கிறது என முதல் முறையாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஜவடேகர் என்னிடம் ரகசியம் காக்க எல்லாம் கோரவில்லை. மாறாக என்னைப் புறக்கணிப்பதற்கான உத்தரவு அவரை வியக்கவைத்தது. இந்தச் சூழலை எப்படி கையாளவது என ஆலோசனை சொல்வதற்காக என்னை அழைத்தார். “கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசித் தீர்வு காணுங்கள்” என்றார்.
எனக்குத் தெரியும் என்பதால் அருண் ஜேட்லியை முதலில் அழைத்தேன். அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என உறுதி அளித்தார். நான் கற்பனை செய்துகொள்கிறேன் என்றார். எல்லாம் சரியாகிவிடும் என்றார்.
அருண் ஜேட்லி பண்பட்டவராக நடந்துகொண்டதாக நினைத்தேன். எனவே அவரை மீண்டும் தொடர்புகொண்டேன். இந்த முறை போனில் அழைத்தேன். இந்த முறை அவர் பிரச்சினை இல்லை என மறுக்கவில்லை, ஆனால் அது பறந்து சென்றுவிடும் என்றார். “ஆனால் அருண், அது சரியாகிவிடும் என்றால், அதைச் சரி செய்ய வேண்டும் என்று பொருள். எனில் பிரச்சினை இருக்கிறது என்பதுதான் உண்மை அல்லவா?” என நான் கேட்டேன். அவர் சிரிக்க மட்டும் செய்தார்.
என்ன பிரச்சினையாக இருந்தாலும் அது அவரால் சமாளிக்கக்கூடியதைவிடப் பெரிய பிரச்சினை என உணர்ந்தேன். உதவி செய்வதற்கான அவரது விருப்பத்தையும் கோரிக்கையையும் நான் சந்தேகிக்கவில்லை. இன்றும் அப்படித்தான். ஆனால், அதைச் செய்வதற்கான ஆற்றல் அவருக்கு இல்லை எனும் முடிவுக்கு வந்திருந்தேன்.
இதில் இன்னமும் சந்தேகத்திற்கு இடம் இருந்தால், அது பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவால் தீர்க்கப்பட்டது. 2017 ஜனவரியில் அவரிடம் பேட்டிக்கான கோரிக்கை வைத்தேன். எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில் அவர் உடனே ஒப்புக்கொண்டார். ஜனவரி 16இல் பதிவு நடைபெற்றது. அதன் பிறகு அவருக்கு நன்றி கூறினேன். அவர் கூறிய பதில் என்னையும், எனது தயாரிப்பாளர் அரவிந்த் குமாரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
“நீங்கள் நன்றி என சொல்லலாம்,” என்று புன்னகையோடு கூறியவர், தீவிரமாக, “ஆனால், என சகாக்கள் எனக்கு நன்றி கூற மாட்டார்கள். இந்தப் பேட்டிக்கு நான் உடன்பட்டிருக்கக் கூடாது எனக் கருதுவார்கள். நான் இந்தப் பேட்டி கொடுத்ததற்காக அவர்கள் மகிழ மாட்டார்கள், ஆனால் மனிதர்களைப் புறக்கணிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறினார்.
அமித் ஷா தந்த பதில்
அப்போதுதான் நான் அமித் ஷாவைச் சந்திக்கத் தீர்மானித்தேன். அவருக்குப் பல முறை கடிதங்கள் எழுதிப் பல முறை போன் செய்த பிறகு 2017இல் ஹோலிக்கு மறுதினம் சந்திக்க ஒப்புக்கொண்டார். அக்பர் சாலையில் உள்ள அவரது வீட்டில் சந்திப்பு நடைபெற்றது. அது நீண்ட சந்திப்பு இல்லை, ஆனால் எனதுக் கேள்வியை கேட்கவும், அவர் பதில் அளிக்கவும் அது போதுமானதாக இருந்தது.
கடந்த ஓராண்டாக முதலில் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் பின்னர் அமைச்சர்கள் எனது நிகழ்ச்சியில் பங்கேற்க மறுப்பதால் அவரைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினேன். நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது எனச் சொல்லப்பட்டுள்ளதாக தனிப்பட்ட முறையில் செய்தித் தொடர்பாளர்கள் என்னிடம் கூறியதையும், அண்மையில் மூத்த அமைச்சர்கள் இதே கருத்தைக் கூறியதையும் தெரிவித்தேன். ஜவடேகர் பற்றியும், அருண் ஜேட்லியுடனான பேச்சு பற்றியும் கூறினேன். இறுதியாக, என்ன பிரச்சினை எனத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன் என்றும், தெரியாமல் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அல்லது ஏதாவது கூறியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன் என்றும் கூறினேன். அப்படி நான் என்ன செய்துவிட்டேன் என்று கேட்டேன்.
அமித் ஷா நான் சொல்வதை அமைதியாகக் கேட்டார். நான் என் நிலையை விளக்க ஒன்று அல்லது இரண்டு நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
அவரது வீட்டின் பெரிய வரவேற்பறையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். தோட்டத்தை நோக்கிய சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அருகே இருந்த சோபாவில் நான் அமர்ந்திருந்தேன். அறையில் நாங்கள் இருவர் தான் இருந்தோம்.
“கரண்ஜி,” என அழைத்தார். அவர் நட்பாகப் பேசினார் அல்லது அதற்கு எதிரான தன்மை அவரிடம் காணப்படவில்லை. நான் சூழ்நிலையைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதாகக் கூறினார். என்னுடைய நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு செய்தித் தொடர்பாளர்களுக்கோ அமைச்சர்களுக்கோ உத்தரவிடப்படவில்லை என்றார்.
இறுதியாக, இந்த பிரச்சினை குறித்து கவனித்து 24 மணி நேரத்திற்குள் போன் செய்வதாகக் கூறினார்.
நான் ஆறுதல் அடைந்தேன். என்ன பிரச்சினையாக இருந்தாலும் அது தீர்க்கப்பட்டுவிட்டதாக நினைத்தேன். நான் நினைத்தது தவறு.
அமித் ஷா மீண்டும் அழைக்கவேயில்லை. அடுத்த ஆறு வாரங்களில் அதிக கடிதங்களை எழுதினேன். 50 முறைக்கு மேல் போன் செய்துபார்த்தேன். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால், வேறு ஒன்று நடந்தது. விஷயம் என்னவெனத் தெரியவரத் துவங்கியது.
அமித் ஷா பதில் அளிக்காதது என்னை ஆழமாக யோசிக்க வைத்தது. சாதாரணமாகப் பேசி, தவறான நம்பிக்கை அளிக்க கூடிய மனிதர் அவர் அல்ல என நினைத்தேன். ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் அவரைத் தடுத்திருக்க வேண்டும். அப்போதுதான், பிரச்சினை நரேந்திர மோடி என நினைக்கத் துவங்கினேன்.
இதைப் பற்றி அதிகம் யோசித்தபோது, இது இன்னும் உறுதியானது. என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. குறைந்தபட்சம் அந்த நேரத்தில் இல்லை. ஆனால், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் அழைப்புகளை மறுப்பதற்கும், அமைச்சர்கள் பேட்டிக்கு ஒப்புக்கொண்டு ரத்து செய்வதற்கும் என்ன பொருள்? ஜவடேகரின் கருத்து, ஜேட்லியின் கருத்து, 24 மணி நேரத்தில் பதில் அளிப்பதாகக் கூறிய அமித் ஷாவின் மவுனம் ஆகியவற்றுக்கெல்லாம் வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
நான் எடுத்த பேட்டியும் எழுதிய கட்டுரையும்
2007இல், இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, மோடியிடம் நான் எடுத்த பேட்டிதான் இதற்குக் காரணமா? இந்தப் பேட்டியில் 3 நிமிடத்தில் அவர் வெளியேறிவிட்டார்.
இல்லை, பிரச்சினை இதற்கு முன்னதாக நடந்ததாகக்கூட இருக்கலாம். 2002 மார்ச்சில் கோத்ரா சோக சம்பவம் மற்றும் அதற்குப் பின் நடைபெற்ற அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக நான் எழுதிய சன்டே சென்டிமென்ட்ஸ் பத்தியில்தான் பிரச்சினையின் வேர் இருப்பதாக அந்த நொடியில் தோன்றியது.
மோடியிடம் நேரடியாகப் பேசுவதற்கான நேரம் இது எனத் தீர்மானித்தேன். நேர்மையான உரையாடல் எங்களிடையே உள்ள பிரச்சினையைத் தீர்க்கும் என நினைத்தேன். இது நடைபெறச் சாத்தியம் இல்லை என நான் 50 சதவீதம் நினைத்தாலும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. அவரது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அவரது முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவை அழைத்தேன்.
தோவலிடம் பேசுவதற்கு முன் மிஸ்ராவிடம் பேசினேன். இரண்டு உரையாடல்களும், 2017 மே 1ஆம் தேதி நடைபெற்றன.
அவரது அலுவலகத்தில் நான் தெரிவித்திருந்த செய்திக்கு பதில் அளிக்கும் விதமாக மிஸ்ரா போனில் அழைத்தார். அமைச்சர்கள் மற்றும் அவரது கட்சியால் நான் புறக்கணிக்கப்படுவது ஏன் என்று அறிந்துகொள்ளப் பிரதமர் மோடியைச் சந்திக்க விரும்புகிறேன் என்றும், நான் எனக்கே தெரியாத தெரியாத வகையில் பிரதமரை அதிருப்தி அடையச்செய்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தேன். ஆனால், முதலில் என்ன பிரச்சினை எனத்தெரிய வேண்டும் என கூறினேன். 2007 பேட்டி இதற்குக் காரணமாக இருக்க முடியாது என நம்புவதாகவும், அது நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் கூறினேன்.
மிஸ்ரா மோடியிடம் கேட்டுவிட்டு என்னை அழைப்பதாகத் தெரிவித்தார். அன்று மாலை சவுத் பிளாக்கில் அஜித் தோவலைச் சந்தித்து இதே செய்தியைக் கூறினேன். மிஸ்ரா என்னைத் தொடர்புகொள்ளும் வரை காத்திருப்பேன் என்று கூறினார். மிஸ்ராவால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என நம்புவதாகக் கூறினார். அப்படி அவரால் முடியவில்லை என்றால் மோடியிடம் நேரடியாகப் பேசுவதாக கூறினார்.
மூன்று நாடகளுக்குப் பின் மிஸ்ரா அழைத்தார். மோடியிடம் பேசியதாகவும், பிரதமரைச் சந்திப்பதில் எந்த பலனும் இல்லை என நினைப்பதாகவும் கூறினார். நான் அவருக்கு எதிராகப் பாரபட்சமாக இருப்பதாகவும், என் அணுகுமுறை மாறாது எனப் பிரதமர் நினைப்பதாகவும் கூறினார். இதன் காரணமாகவே அமித் ஷா மீண்டும் அழைக்காமல் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். அவரும் மோடியிடம் பேசி, இதே போன்ற பதிலைப் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது எனத் தெரிந்திருக்கும் தோவலை அழைத்தேன். மிஸ்ரா கூறியதைக் கூறினேன். நான் சொல்வதை அமைதியாகக் கேட்டார். “நிலைமை சரியாகும் என நம்புவோம், ஆனால் இதற்குக் காலம் ஆகும்” என்று மட்டும் அவர் கூறினார்.
ஆக, எனக்குப் பிரச்சினையின் காரணம் தெரிந்தது. நான் மோடியைக் காயப்படுத்தியிருந்தேன். அதன் விளைவுதான் இது. ஆனால் அந்தத் தவறு எப்போது நடந்தது என்று மட்டும்தான் தெரியவில்லை. 2007 பேட்டி காரணமா? அல்லது அதற்கு முந்தைய 2002 மார்ச்சில் எழுதப்பட்ட சன்டே சென்டிமென்ட்ஸ் பத்தி காரணமா? இது பல ஆண்டுகளாக உருவாகிவந்தது என்றாலும், பத்தியிலிருந்துதான் துவங்கியிருக்க வேண்டும் என நினைத்தேன்.
இங்குதான் பிரச்சினை துவங்கியது எனும் எனது உள்ளுணர்வு சரி என்றால், அப்போது எழுதியதை மீண்டும் நினைவுகூர்வதுதான் நியாயமானதாக இருக்கும். “செல்லுங்கள் மோடி, இப்போதே” எனும் அந்த கட்டுரையை மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அதில் இருந்த கருத்துக்கள் இவைதான்:
(அந்தக் கட்டுரையும் மேலும் பல விஷயங்களும்… அடுத்த பகுதியில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக