திங்கள், 5 செப்டம்பர், 2011

புலிகளை ஆதரித்துவிட்டு மனித உரிமை பற்றி பேசுவதா?- மேற்கு நாடுகள் மீது ராஜபக்சே தாக்கு


Rajapakse
கொழும்பு: தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்துவிட்டு, மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பற்றி பேசுவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தாக்குதல் தொடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அடுத்த வாரம் ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதற்காக நியூயார்க் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான 2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், 40,000 அப்பாவித் தமிழர்களின் கொலைகளுக்கு இலங்கை அரசு பொறுபேற்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கோரி வருகின்றன. இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்ததாக, ஐ.நா. சபை அமைத்த விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இந் நிலையில் கொழும்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராஜபக்சே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் பேசியதாவது:

மனித உரிமைகளை மதிப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இன்று எங்கள் மீது குற்றம் சொல்லும் நாடுகள்தான், எங்கள் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கு நிதி உதவி அளித்தவர்களுக்கு ஆதரவாக இருந்தன.

இலங்கையில் தீவிரவாத செயலுக்கான கொள்கை வகுத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் அவர்கள்தான். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக சர்வ தேச நாடுகள் குறிப்பாக மேலை நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பற்றி அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. சில நாடுகள் இப்போதும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டி உதவி அளித்து வருகின்றன.

இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுக்கு அவை அடைக்கலம் கொடுத்தன. அவர்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து வருகின்றன (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆண்டன் பாலசிங்கம் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருந்தை மறைமுகமாக சுட்டிக் காட்டி இவ்வாறு பேசினார் ராஜபக்சே)

எங்களிடம் பெரிய அளவில் பலம் இல்லாத நிலையிலும் விடுதலைப் புலிகளை ஒடுக்கி, தெற்கு ஆசியாவை தீவிரவாதத்தில் இருந்து விடுவித்தோம். ஆனால், வல்லரசு நாடான அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான தனது போரை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுத்துள்ள மற்ற நாடுகளை நாங்கள் பின்பிற்றவில்லை. அவர்களிடம் நவீன ஆயுதங்கள் ஏராளமாக உள்ளன. இருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக போரை நடத்தியும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. (ஆப்கானிஸ்தானில் அ- காய்தாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை கிண்டலடித்து இவ்வாறு கூறினார்) என்றார்.

கருத்துகள் இல்லை: