ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

‘2 பெட்டிகளில் பணம்.. அமைச்சர் பதவி’ பகீர் கிளப்பும் ஐயூஎம்எல் எம்எல்ஏ சையது ஃபாருக் பாஷா

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : “சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு 2 பெட்டிகளில் கோடி கோடியாக பணத்தை கொண்டு வந்து உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும்?
 என எங்களிடம் கேட்டனர்” என ஐயூஎம்எல் கட்சியின் எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஐ.யூ.எம்.எல். கட்சிக் கூட்டத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர், “இங்கு சோபா பற்றி விமர்சித்தனர். ஆனால், என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாகப் பணம் கொண்டு வந்து அமைச்சர் பதவி தருகிறோம், கையெழுத்து போடுங்கள் என்றார்கள். நாங்கள் கோடிக்குச் சாய்ந்தவர்கள் அல்ல; கொள்கைக்குச் சார்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொள்கையோடுதான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்.



இரண்டு முப்திகள் பணத்தோடு வந்தார்கள். லெட்டர் பேட் தயாரித்து வந்து, ‘எந்த அமைச்சர் பதவி வேண்டும்? உள்ளாட்சி வேண்டுமா? போக்குவரத்துத்துறை வேண்டுமா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ் எங்களுக்குப் பதவி கொடுக்கக் கூடியவன்; உங்கள் பதவிக்கு எங்களது கொள்கையை விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை’ என்று சொன்னோம். அதன் காரணமாக ஷாஜகானை அழைத்து அமைச்சர் பதவி கொடுத்தார்கள். தலைவர், ‘எனக்கும் அமைச்சரவைப் பதவி வேண்டும்’ என்று கேட்டிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, விஜய் தலைமையிலான தவெக அரசு குதிரைப்பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: