hindutamil.in : தஞ்சாவூர்: தமிழகம் தற்போது பெரிய பேரிடரில் சிக்கிக் கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அவர் பேசியது: தமிழகத்தில் அமைந்துள்ள சோஃபா மாடல் ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் புரிந்து வருகின்றனர். அரசின் தவறுகளை இளைஞர்கள் தட்டிக்கேட்கத் தொடங்கியுள்ளனர். தட்டிக்கேட்கும் இளைஞர்களையும், திமுகவினரையும் கைது செய்யும் வேலையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. எனவே, இதுபோன்ற அடக்கு முறைகளை எதிர்கொள்ள திமுகவுக்கு அதிக வழக்கறிஞர்கள் தேவைப்படுகின்றனர்.
தூய சக்தி என்று சொன்னவர்கள், ஆட்சிக்கு வந்ததும் குதிரைபேரத்தை தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இதனால், விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முந்தைய திமுக ஆட்சியில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை மேட்டூர் அணை வழக்கம்போல ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டு, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால், தவெக அரசு, அணையை திறக்கவில்லை. குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது என்று விவசாயிகள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தையும், விவசாயிகளையும் முதல்வர் கொச்சைப்படுத்தி வருகிறார்.
ரூ.1 லட்சம் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். அதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து, பலருக்கும் கடன் தள்ளுபடி இல்லை என அறிவித்துள்ளனர். அனைத்தையும்விட, தமிழக சட்டப்பேரவையின் ஒழுங்கை இந்த ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளியுள்ளனர். சட்டப்பேரவையா அல்லது சினிமா தியேட்டரா அல்லது ஏதேனும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டோமா என எங்களுக்கு சந்தேகம் வரும் அளவுக்கு சட்டபேரவையின் தரத்தை ஆளுங்கட்சியினர் குறைத்து கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதி மக்களே, தெரியாமல் ஒருவரை வெற்றி பெற வைத்துவிட்டோம். அவர் எங்கே போனார், யாரேனும் பார்த்தீர்களா என கேட்டு புலம்புகின்றனர். ஒட்டுமொத்த தமிழகமும் மின்சாரத்தை தேடி வருகிறது. தமிழகம் தற்போது பெரிய பேரிடரில் சிக்கிக் கொண்டுள்ளது. இதில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டியது நமது பொறுப்பு. அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக