வியாழன், 5 பிப்ரவரி, 2026

அஜித் உயிரிழப்பு -பொய்ப் புகாரளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்: அஜித்குமார் தாயார்

அஜித்குமார் (இடது); நகை திருடப்பட்டதாக புகார் கொடுத்த நிகிதா (வலது)

 hindutamil.in - இ.ஜெகநாதன் : திருப்புவனம்: “என் மகன் மீது தவறாக திருட்டு புகார் கொடுத்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” என போலீஸார் விசாரணையில் மரணமடைந்த மடப்புரம் காவலாளி அஜித்குமார் தாயார் மாலதி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். அந்த கோயிலுக்கு கடந்த ஆண்டு ஜுன் 27-ம் தேதி சாமி கும்பிட வந்த மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் நிகிதா தனது தங்கச் சங்கிலி திருடு போனதாக புகார் கொடுத்தார்.



இதுகுறித்து அஜித்குமாரிடம் விசாரித்த தனிப்படை காவலர்கள் தாக்கியதில் அவர் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் திடீர் திருப்பமாக நிகிதா அளித்த திருட்டு புகாரே பொய் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.

இதையடுத்து, இன்று மடப்புரத்தில் அஜித்குமார் தாயார் மாலதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிகிதா நகை திருட்டை விசாரிக்க போலீஸார் எனது 2 மகன்களையும் அழைத்துச் சென்றனர். நகையை எடுத்திருந்தால் சிறையில் வைப்பார்கள். எடுக்காவிட்டால் விட்டு விடுவார்கள் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால், தண்ணீர் கூட கெடுக்காமல் கொடூரமாக அடித்தே எனது மகன் அஜித்குமாரை கொன்றுள்ளனர். எனது மகன் என்ன பயங்கரவாதியா? ஆறு அறிவு மனிதனுக்கு இரக்க குணம் உண்டு. ஆனால், 5 அறிவு அரக்கர்களாக காவலர்கள் இருந்துள்ளனர். பட்டினியாக வைத்து என் மகனை கொலை செய்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவத்தை நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. அவன் திருடவில்லை என நான் நம்பிக்கையாக இருந்தேன். தற்போது சிபிஐ விசாரணையில் உண்மை வெளி வந்துள்ளது. இது உலகத்துக்கே தெரிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். தற்போது தான் விடிவு வந்துள்ளது.

எனது மகன் திருடியதை யார் பார்த்தது?. நாங்கள் கஷ்டபடுபவர்களாக இருக்கலாம் ஆனால் தவறானவர்களாக எனது பிள்ளைகளை வளர்க்கவில்லை.

யாரோ 5 பேர் சொல்லித் தான் எனது மகனை அடித்துக் கொன்றுள்ளனர். அந்த 5 பேர் யார் ? என்பதை விசாரிக்க வேண்டும். கைதான போலீஸார் 5 பேரையும் வெளியே விடக் கூடாது. எனது மகனுக்கு தீங்கு நினைத்த யாரையும் வெளியே விடக் கூடாது.

கோயிலுக்குள் வைத்தே அடித்துள்ளனர். அடித்தவர்களே காயமடைந்த எனது மகனை காப்பாற்றியிருக்க வேண்டும். என் மகன் மீது பொய்யாக திருட்டு புகார் கொடுத்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

பொய்ப் புகார் கொடுத்து ஏன் என்று விசாரித்து தெரிவிக்க வேண்டும். அஜித்குமாரை தாக்க சொன்னது யார்? பெரிய இடத்திலிருந்து உத்தரவு வந்ததாக சொன்னார்கள். அந்த பெரிய இடம் எது என்பதையும் விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இருக்கிறது. மேலும் இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அஜித்குமாரின் தாயார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: