புதன், 3 டிசம்பர், 2025

Milk Mafia பால் மாபியா

இனமொன்றின் குரல்  :  இலங்கை தீவு ஆண்டு தோறும் பால்மா பவுடர் (Milk Powder) இறக்குமதிக்கு 300- 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை  செலவழித்து வருகின்றது.
இங்கு சுமார் 1.2 மில்லியன் கால்நடைகள் இருந்தும், உற்பத்தியாகும் பால் சுமார்  450 மில்லியன் லிட்டர்களாக மட்டுமே உள்ளது.
இந்த உற்பத்தி தேசிய தேவையின் 40% ஐ மட்டும்  பூர்த்தி செய்வதால் , ஆண்டுக்கு 75,000 மெட்ரிக் டொன் பால் பவுடர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆனால், உள்ளூரில்  பால் உற்பத்திக்கு  (Fresh Milk) பங்களிக்க கூடிய வடக்கு மற்றும் கிழக்கு பண்ணையாளர்களை தொடர்ந்தும் வஞ்சிக்கின்றார்கள் .
குறிப்பாக, இந்தப் பகுதிகளில் கால்நடை உற்பத்திக்கு  ஆதாரமான மேய்ச்சல் நிலங்களை பெற்று கொடுப்பதில்  ஜேவிபி ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.
அதேபோல் மன்னாரில் 140,000 கால்நடைகள், வவுனியாவில் 130,000 கால்நடைகள் உள்ளன.


இவ்வாறு பால் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள 370,000 கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
வனவளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட மத்திய ஒற்றையாட்சி நிறுவனங்கள், இந்த கால்நடைகளுக்கான நிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றார்கள்.
இதற்கும் மேலாக, மட்டக்களப்பில் 300,000 கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தி வந்த மயிலத்தமடு மற்றும் மாதவனை போன்ற பகுதிகளிலிருந்து, தமிழ் பண்ணையாளர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இவ்வாறு உள்ளூரிலேயே பண்ணையாளர்களை வஞ்சித்து விட்டு, பசும்பாலுக்கு பதிலாக பால் பவுடர்களை தொடர்ந்தும்  இறக்குமதி செய்கின்றனர்.
உண்மையில், மேய்ச்சல் நிலங்களைச் சுற்றி இயங்கும் ஒரு வளமான பல்லுயிர் சூழல் உள்ளது.
மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளின் ஆதாரமாக மட்டுமல்லாது, கால்நடைகளின் மேய்ச்சலால் பல்லுயிர் பன்மையை ஊக்குவிப்பதும், சுற்றுச்சூழலுக்கு பயனளிப்பதும், கார்பன் உமிழ்வை குறைப்பதும், நீர்நிலைகளை பாதுகாப்பதும் போன்ற பன்முகப் பணிகளை செய்கின்றன.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, 2026 ஆம் ஆண்டை "மெய்ச்சல் நிலங்களின் மற்றும் மேய்ச்சல் சமூகங்களின் சர்வதேச ஆண்டு" (International Year of Rangelands & Pastoralists) என அறிவித்துள்ளது.
ஆனால் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு இதுபற்றிய அக்கறை எதுவும் இல்லை.
இது போதாதென்று உற்பத்தி பொருளாதாரம் குறித்து எந்த கரிசனமோ புரிதலோ கிடையாது .
தெற்காசியாவில் அதிகமான நீரழிவு நோயாளர்கள் உள்ள லங்கை தீவில், பால் பவுடரை ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாகவே திணித்திருக்கின்றார்கள்.
இதன் விளைவாக சர்வதேச சந்தை நிலைமை உட்பட்ட பல காரணங்களால் நிகழும் பால் பவுடர் விலை தளம்பலையும் பொதுமக்கள் மீது சுமத்தி வருகின்றார்கள் 
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிககளில் கால்நடை  வேளாண்மையில்  ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேய்ச்சல் நிலங்களை பெற்று கொடுத்து, தனியார் மற்றும் கூட்டுறவு அரச சார்பற்ற நிறுவனனங்களை கூட்டிணைத்து நிகழ்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படுமாக இருந்தால் இலங்கை தீவின் பால் தேவைக்கு வடக்கு கிழக்கு மாகாணங்கள் காத்திரமாக பங்களிக்க முடியும்.
குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் சினைப்படுத்தும் நிலையங்களை விருத்தி செய்வதன் மூலமாகவும் தனியார் பண்ணைகளை ஊக்குவிப்பதன் மூலமும் நல்லின கால்நடைகளை உற்பத்தி செய்வதற்கான நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிக்க முடியும்.
அதே போல வடக்கு கிழக்கு பகுதிகளில் கால்நடை வைத்திய சேவைக்கான ஏற்று கொள்ளத்தக்க உட்கட்டுமான வசதிகளை பரந்த அளவில் உருவாக்க பட வேண்டிய தேவையும் இருக்கின்றது
இது மட்டுமின்றி விலங்கு வேளாண்மையில் வெற்றியடைய வீடுகள் தோறும் கால்நடை வளர்ப்பை ஊக்குவித்தல் , உற்பத்தித்திறன் மிக்க கால்நடைகளை உருவாக்குதல், தொழில்நுட்ப பரிமாற்றம், ஆரோக்கியமான கால்நடைகளை பராமரித்தல், சந்தை வாய்ப்பை பரவலாக்கல், நிறுவனங்களின் இயலளவை அதிகரித்தல், கால்நடை தீவன வளங்களை அதிகரித்தல் என அதிக கவனம் செலுத்த பட வேண்டிய இடங்கள் இன்று வரை கவனம் செலுத்தப்படாமல் இருக்கின்றது .
இவ்வாறான அடிப்படை விடயங்களை கூட்டுறவு சங்கங்கள் , விவசாய சம்மேளனங்கள்,, கிராமிய அபிவிருத்தி சங்கங்கள் போன்ற சமூக மட்ட நிறுவனங்களை வலுமைப்படுத்துவதன் மூலம் செய்ய முடியும்
அது மட்டுமின்றி வடக்கு கிழக்கில் உற்பத்தி செய்யப்படுகிற பால் மூலப்பொருளாக மட்டுமே வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன .
இவ்வாறான விடயங்களை தவிர்த்து, பால் உற்பத்திகளை கொண்டு முடிவு பொருட்களை தயாரிக்கும் வலுமையான நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் சமூக மட்டத்தில் பல்வேறு தரப்பினரை குறித்த தொழில்துறைகளுக்கு உள்வாங்க முடியும்
ஆனால் அதிகாரத்திலுள்ள ஜேவிபி புத்திசாலிகளுக்கு இவை விளங்க வேண்டுமே ?

கருத்துகள் இல்லை: