![]() |
| கோ.சி.மணி |
மின்னம்பலம் - Mathi : திமுகவின் சோழமண்டலத் தளகர்த்தர் என்று கலைஞரால் பாராட்டப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் திமுக அடையாளமான முன்னாள் அமைச்சர், முன்னாள் தஞ்சை மாவட்டச் செயலாளர், டெல்டா மண்டல பொறுப்பாளர் கோ.சி.மணியின் 9 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று டிசம்பர் 2 அனுசரிக்கப்படுகிறது.
கோ.சி. மணி மறைந்து 9 ஆண்டுகள் ஆன பின்னாலும், திமுகவில் அவரது தடமும், அவரது முத்திரையும் இன்னும் அப்படியே உள்ளது.
அண்மையில், திமுகவின் வேலூர் மாவட்டப் பொறுப்பாளராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டதில் கூட கோசி.மணியின் பங்கு இருக்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?
திமுகவில் மாற்றங்கள்
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நியமனம் பற்றியும், புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் பற்றியுமான அறிவிப்பு கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினால் வெளியிடப்பட்டது. இதன்படி திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் புதிதாக நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட பொன்முடி மீண்டும் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்போடு வேலூர் மாவட்ட திமுகவை இரண்டாகப் பிரித்து காட்பாடி, கே வி குப்பம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம். பி. நியமிக்கப்பட்டார். இதெல்லாம் சுமார் ஒரு மாத கால சமாச்சாரங்கள்.
துரைமுருகன் உருக்கம்
ஆனால்… கதிர் ஆனந்த் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களிடம்… ”இதுக்கெல்லாம் அந்த கோ.சி. மணிக்குத்தான் நன்றி சொல்லணும்” என்று உருக்கமாக சொல்லியிருக்கிறார் பொதுச் செயலாளர் துரைமுருகன்.
அறிவாலயத்தில் ஸ்டாலின் சொன்னது என்ன?
என்ன இது? இப்போது கதிர் ஆனந்த மாவட்ட பொறுப்பாளர் ஆனதற்கும் தஞ்சை மாவட்டத்தில் அரசியல் செய்து 9 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த கோ.சி. மணிக்கும் என்ன சம்பந்தம்? என விசாரித்தபோதுதான் பல சூடான சுவாரசியமான தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
நவம்பர் 4-ஆம் தேதி இந்த நியமன அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக அறிவாலயத்தில் அமைச்சர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்போது, “சீனியரான பொன்முடி கட்சிப் பதவி இல்லாமல் மிகவும் வருத்தப்படுகிறார்.. அதனால் அவரை மறுபடியும் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கலாம்.. கொங்கு பகுதியைச் சேர்ந்த கவுண்டர் சமுதாயத்தினருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கலாம் என்ற அடிப்படையில் அமைச்சரான மு.பெ. சாமிநாதனை அந்த இடத்துக்கு கொண்டு வரலாம்.. சாமிநாதன் தற்போது திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் அந்த இடத்துக்கு தெற்கு மாவட்டம் பத்மநாபனை நியமிக்கலாம்” என ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தார்.
துரைமுருகன் வைத்த கோரிக்கை
திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அப்போது குறுக்கிட்டு, “சரியான முடிவுதான் தம்பி. அப்படியே வேலூரில் என்னுடைய மகனையும் மாவட்டப் பொறுப்பாளராக ஆக்கி விடுங்களேன். ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருக்கேன்” என்று ஒரு கோரிக்கையை முன் வைத்தார். ஏற்கனவே பல முறை முயற்சித்தும் ஸ்டாலின் அதற்கு சம்மதிக்கவில்லை.
துரைமுருகன் பேச்சால் ஸ்டாலின் கோபம்
இந்நிலையில் இப்போதும் துரைமுருகன் அந்த கோரிக்கையை முன் வைக்க ஸ்டாலின் முகம் மாறியது. உடனே துரைமுருகன், “எல்லாருக்கும் என்னென்னமோ பண்றீங்க. அத பத்தி எல்லாம் நான் எதுவும் கேக்கல தம்பி. என் பையனுக்கு மாவட்ட செயலாளர் பதவி குடுங்க. கோ.சி. மணி குடும்பம் மாதிரி என் குடும்பமும் ஆகிடணுமா?” என்று துரைமுருகன் சட்டென ஒரு வார்த்தையை விட, சுருக்கென கோபம் வந்துவிட்டது முதலமைச்சருக்கு.
சமாதானப்படுத்திய கனிமொழி
தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து அறை வாசலை நோக்கி வேகமாக சென்றார். கனிமொழி தான் முதலமைச்சரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து அமர வைத்திருக்கிறார்.
ஸ்டாலின் கோபமும் ஒப்புதலும்
”நாங்க கோ.சி மணி குடும்பம் மாதிரி ஆயிடணுமா?” என்ற துரைமுருகனின் வார்த்தைகளுக்கு பிறகு தான்… கதிர் ஆனந்துக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை வழங்க கோபத்தோடு சம்மதித்திருக்கிறார் முதலமைச்சர்
திமுகவில் கோ.சி.மணி
அது சரி ”கோ.சி. மணி குடும்பம் மாதிரி ஆயிடனுமா” என்று துரைமுருகன் ஏன் சொன்னார்? கோசி மணி குடும்பம் என்ன ஆனது?
இப்போதைய மயிலாடுதுறை மாவட்டம்- அப்போதைய தஞ்சை மாவட்டம் மேக்கரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கோ.சிவசுப்பிரமணி என்கிற கோ.சி. மணி- பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் மேடைப்பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு 1960 களிலேயே திமுகவில் இணைந்தவர்.
அண்ணாவும் கோ.சி.மணியும்
அண்ணா காலத்திலேயே சட்டமன்ற உறுப்பினராக ஆனவர். அறிஞர் அண்ணா ஒரு முறை தனது சுற்றுப்பயணத்தின் போது திடீரென கோ.சி. மணியின் சொந்த ஊரான மேக்கரி மங்கலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் அப்போது கோ.சி. மணி வீட்டில் இல்லை. மணி எங்கே? என்று அண்ணா கேட்க வயலுக்கு போயிருக்கிறார் என்று சொன்னார்கள் வீட்டில்.
நான் வயலுக்கு சென்று கோ.சி. மணியை பார்த்துக் கொள்கிறேன் என்று, அண்ணா, கோ.சி. மணியைத் தேடி வயலுக்கே சென்று அவரை சந்தித்தார். இதை கலைஞரே சொல்லியிருக்கிறார்.
நண்பர், மந்திரி, சேவகர், தளகர்த்தர் – கலைஞர்
இப்படி அண்ணாவால் மதிக்கப்பட்டு கலைஞரால்… “எனக்கு நண்பர், மந்திரி, நலம் பேணும் சேவகர். கழகத்தின் சோழமண்டல தளகர்த்தர்” என அழைக்கப்பட்டவர் கோ.சி. மணி.
கலைஞர் அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றினார் கோ.சி. மணி. அவரது உடல்நிலையானது அமைச்சராகப் பணியாற்ற ஒத்துழைக்காத நிலையில் கோ.சி. மணியை புள்ளியல் துறை அமைச்சராக கலைஞர் மாற்றினார். அதில் மற்ற துறைகள் போல கடினமான பணிகள் இல்லை. கோ.சி. மணி உடல் நலம் குன்றிய நேரத்திலும் அவரை அமைச்சராக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்தார் கலைஞர். உடல் நலம் பெற்றுத் திரும்பியதும் மீண்டும் அவருக்கு கூட்டுறவுத் துறையை கொடுத்தார் கலைஞர்.
கோ.சி. மணி வகித்த பதவிகள்
இப்படி அண்ணா காலத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர், கலைஞர் காலத்தில் அமைச்சர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் என்றெல்லாம் முக்கிய பதவிகளை வகித்த கோ.சி. மணியின் குடும்பத்தினரோ, வாரிசுகளோ திமுகவில் இன்றைக்கு எந்த உயர் பதவியிலும் இல்லை என்பதுதான் டெல்டா திமுக தொண்டனின் நெஞ்சை சுடும் உண்மை.
கோ.சி.மணியும் திமுக பொதுக்குழுவும்
1993-இல் திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய நிலையில், உதயசூரியன் சின்னத்துக்கும் அறிவாலயத்துக்கும் உரிமை கொண்டாடினார். அப்போது திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தன் பக்கமே பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கலைஞருக்கு ஏற்பட்டது.
அப்போது பொதுக்குழுவை நடத்தும் பொறுப்பை கோ.சி.மணியிடம் ஒப்படைத்தார் கலைஞர். தஞ்சாவூரில் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டிய கோ.சி.மணி. மொத்தமுள்ள 1,112 பொதுக்குழு உறுப்பினர்களில் 903 பேர் கலந்துகொண்டனர். மிகவும் பாதுகாப்பாக அந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்திய கோ.சி. மணி 903 பேரிடமும், ‘நாங்கள் கலைஞர் பக்கம்தான் இருக்கிறோம்’ என்று பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, அதை வீடியோவும் எடுக்க ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக கலைஞருடன் போட்டோ எடுத்து இந்த ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் கலைஞர். இறுதியில் கலைஞருக்கே வெற்றி கிடைத்தது. மிக சிக்கலான அந்த நேரத்தில் கலைஞருக்கு உறுதுணையாய் திமுக மீட்புப் போரில் முன்னின்று செயல்பட்டவர் கோ.சி.மணி.
கோ.சி. மணி குடும்பம் எப்படி இருக்கிறது?
இப்படி, திமுகவுக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த கோ.சி. மணியின் குடும்பத்தில் இருந்து யாரும் இப்போது திமுகவில் உயர் பதவிகளில் இல்லை. எம்பி, எம்.எல்.ஏ.ஆகவும் இல்லை.
கோ.சி. மனைவிக்கு இரு மனைவிகள். முதல் மனைவி சாவித்திரி. அவருக்கு புஷ்பா, இந்திராணி ஆகிய மகள்கள் மதியழகன் என்ற மகனும் பிறந்தனர். இரண்டாவது மனைவி கிருஷ்ணவேணிக்கு இளங்கோவன், புகழேந்தி, அன்பழகன் ஆகிய மகன்களும், தமிழரசி, மணிமேகலை என்கிற கீதாவும் பிறந்தனர்.
கோ.சி.மணியின் மகள்கள் மரணம்
கோ.சி. மணி விருதுநகர் மாநாட்டில் இருந்தபோது மகள் தமிழரசி இறந்த தகவல் அவருக்கு கிடைத்தது. ஆனாலும், மாநாட்டை முடித்துவிட்டுத்தான் மகளின் இறப்புக்குச் சென்றார். இன்னொரு மகள் புஷ்பா ராயப்பேட்டையில் மிகக் குறுகலான சந்து பகுதியில் உள்ள வீட்டில் இறந்தார். அப்போது தகவல் அறிந்த கலைஞர் வீல் சேருடன் கஷ்டப்பட்டு அந்த சந்துக்குள் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திமுகவில் என்ன பொறுப்புகள்?
இத்தனை தியாகங்கள் செய்தபோதும் கோ.சி.மணியின் குடும்பத்துக்கு திமுகவில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. கோ.சி. மணியின் மகன் இளங்கோவன், இப்போது ஆடுதுறை பேரூர் செயலாளராக இருக்கிறார். மற்ற மகன்கள் அரசியல் பக்கமே இல்லாமல் சென்னையில் இருக்கிறார்கள். மறைந்த கோ.சி. ம. மதியழகனின் மகனும் கோ.சி.மணியின் பேரனுமான Dr.கோ.சி.மதி.திருமா தற்போது மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். கோ.சி. மணியின் குடும்பத்துக்கு இப்போது திமுகவில் இதுதான் நிலை.
கோ.சி. மணிக்கு பின்னால் அவரது வாரிசுகள் கட்சியால் எப்படி கவனிக்காமல் விடப்பட்டார்களோ, அதே போல தன் காலத்துக்கு பிறகு தன்னுடைய வாரிசான கதிர் ஆனந்த் கைவிடப்படக்கூடாது என்ற அர்த்தத்தில்தான், “கோசி மணி குடும்பம் மாதிரி என் குடும்பம் ஆயிடக் கூடாது” என்று ஸ்டாலினிடமே நேருக்கு நேராக கூறியிருக்கிறார் துரைமுருகன். அந்த ஒரு வார்த்தை மூலமாகவே கதிர் ஆனந்துக்கு பதவியும் வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
இந்த விரக்தியான பின்னணியில்தான், கதிர் ஆனந்துக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வாங்கிக் கொடுத்ததே கோ.சி.மணிதான் என்று துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் சொல்லி வருகிறார். திமுகவில் இப்படியும் நினைக்கப்படுகிறார் கோ.சி.மணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக