புதன், 3 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றத்தில் வெடித்த பதற்றம்... 144 தடை உத்தரவு : அரசு அவசர முறையீடு!

 மின்னம்பலம் - Kavi : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க கேட்டு தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது. 
 கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபமேற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்  அனுமதி வழங்கினார். 
சிஐஎஸ்எப் படை வீரர்களுடன் சென்று தீபம் ஏற்றுமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சூழலில் இந்து முன்னணியினரும் பாஜகவினரும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, போலீசார் தடுப்புகளையும் மீறி சென்றனர். 



அப்போது போலீஸாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் உண்டானது. 

இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில்  மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். 

எனவே இந்த தடையை மீறி திருப்பரங்குன்றம் மலை ஏற மதுரை ஆணையர் லோகநாதன் மறுப்பு தெரிவித்தார். 

இந்த சூழலில் தமிழக அரசு இன்று இரவு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ‘நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டுள்ளது. 

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் முறையீடு செய்தார். 

இதை விசாரித்த நீதிபதி நாளை (டிசம்பர் 4) காலை முதல் வழக்காக விசாரிப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போது இந்து முன்னணியினரிடம், தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால் அனுமதிக்க முடியாது என்று போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: