tamil.oneindia.com -Rajkumar R : சென்னை: டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (1.12.2025) தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.
டிட்வா புயல் நேற்று பின்னிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
mk Stalin cyclone chennai rain
டிட்வா புயல் காரணமாக மாநிலத்தில் 27.11.2025-லிருந்து 01.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), இராமநாதபுரம் (8.7 செ.மீ). தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 27.11.2025 அன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும், 28.11.2025 அன்று சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டிட்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் முதலமைச்சர் தலைமையில், வடகிழக்கு பருவமழையால், குறிப்பாக புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், அக்டோபர், 2025 பயிர்பாதிப்புகளுக்கான மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4.235 எக்டர் வேளாண்பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டார். டித்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது.
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக