மின்னம்பலம் - Santhosh : “பள்ளிக்கூடம் என்றாலே பாடம், பரீட்சை, வீட்டுப்பாடம் மட்டும்தானா? கொஞ்சம் ஜாலியாக இருக்கக் கூடாதா?” என்று ஏங்கும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை ஒரு இனிப்பான செய்தியைச் சொல்லியுள்ளது.
இனி அரசுப் பள்ளிகளில் வாரம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகக் குழந்தைகள் அதிக நேரம் டிவி அல்லது போனில் படம் பார்ப்பதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஆனால், “நல்ல சினிமா என்பது ஒரு பாடம்” என்பதை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஒரு புதிய முன்னெடுப்பைக் கையில் எடுத்துள்ளது.
எப்போது திரையிடப்படும்?
மாநிலம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக வாரம் தோறும் ஒரு குறிப்பிட்ட பாடவேளை ஒதுக்கப்படும். குறிப்பாக, மன்றச் செயல்பாடுகளுக்கான நேரத்திலோ அல்லது நூலக பாடவேளையிலோ (Library Hour) திரைப்படங்களைத் திரையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த மாதிரியான படங்கள்?
“சினிமா காட்டச் சொன்னால், கமர்ஷியல் மசாலா படங்களைப் போட்டுவிடக் கூடாது” என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது. மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், சமூக விழுமியங்களைக் கற்றுத்தரும் வகையிலும் உள்ள குழந்தைகள் திரைப்படங்கள் (Children’s Movies), உலகத் தரம் வாய்ந்த குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் மட்டுமே திரையிடப்பட வேண்டும். இதற்கானப் பட்டியலைப் பள்ளிக்கல்வித் துறையே பரிந்துரைக்கும் என்று தெரிகிறது.
வெறும் பொழுதுபோக்கு அல்ல:
படம் பார்ப்பதுடன் கடமை முடிந்துவிடாது. படம் முடிந்த பிறகு, அது குறித்த கலந்துரையாடல் (Discussion) வகுப்பறையில் நடைபெற வேண்டும்.
படத்தில் என்ன புரிந்தது?
எந்தக் கதாபாத்திரம் பிடித்திருந்தது?
படத்தின் மையக்கருத்து என்ன?
போன்ற கேள்விகளை ஆசிரியர்கள் மாணவர்களிடம் கேட்க வேண்டும். இது மாணவர்களின் விமர்சனப் பார்வையை (Critical Thinking) வளர்க்கும் என்றும், பிற மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை அவர்கள் புரிந்துகொள்ள உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பின்னணி என்ன?
ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா, இலக்கிய மன்றங்கள் மூலம் மாணவர்களின் தனித்திறமைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்தத் திரைப்படத் திரையிடல் நிகழ்வும் பார்க்கப்படுகிறது. சிறார் திரைப்படங்களை பள்ளிகளிலேயே திரையிடுவதன் மூலம், மாணவர்களின் மன அழுத்தம் குறைவதோடு, பள்ளிக்கு வரும் ஆர்வமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படிப்புடன் சேர்த்து, உலக அறிவையும் மாணவர்களுக்குப் புகட்டும் இந்த ‘சினிமா’ பாடம், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கான ப்ரொஜெக்டர் மற்றும் திரை வசதிகளை ஹை-டெக் லேப்கள் (Hi-Tech Labs) மூலம் பள்ளிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக