வியாழன், 4 டிசம்பர், 2025

ஏ.வி.எம்.நிறுவனத்தின் எளிமையான முதலாளி AVM சரவணன்

AVM and its 175th film

 Abdul Samath Fayaz  · உங்கப்பா 36 வருஷமா சர்க்கரை நோயாளி!.
அவருக்கு இருக்கிற டயாபடீஸ் உனக்கும் வர வாய்ப்பிருக்கு!.ஜாக்கிரதை! 
குடும்ப டாக்டர் ரங்க பாஷ்யம் ஒரு சின்ன சர்ஜரி செய்தபோது எச்சரித்தார்!.
அதற்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார் அந்த மனிதர்.
காபி சாப்பிடுவதில் ஆர்வமுள்ள அந்த மனுஷன் அதற்குப் பிறகு காபியில் சர்க்கரையே போடவில்லை.
மனுஷனுக்கு கட்டுப்பாடு அவசியம்.
மனம் அலை பாயும்.ஐம் புலனும் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கும்.


அதுக்கு அடிமையாகாம கடைசி வரை புலடக்கத்தோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார் ஏ.வி.எம்.சரவணன்.தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத ஏ.வி.எம்.குடும்பத்து வாரிசு இன்று நம்மிடையே இல்லை! 
அமைதியான ஆர்பாட்டமில்லாத வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் சரவணன்.அவ்வளவு பெரிய ஏ.வி.எம்.நிறுவனத்தின் முதலாளி என்கிற பந்தா துளி கூட இல்லாதவர்.எங்கிருந்து அறிவுரை வந்தாலும் சொன்னவர் யாரென பார்க்கமாட்டார்.அவர் தரும் அறிவுரை கரெக்டா இருக்கா?.அவரது கருத்து அறிவுக்கு ஏற்ற மாதிரி இருக்கா?.தயங்காமல் ஏற்றுக்கொள்வார்.

1973 ல் ஒரு நியூ இயர் பார்ட்டி!..நண்பர்களின் அழைப்பை ஏற்று  சரவணன் சுதர்சன் ஓட்டலுக்கு வருகிறார்.அது கே.ஆர்.விஜயா வீட்டுக்காரர் ஓட்டல்;! பார்ட்டி முடிஞ்சு நண்பர்கள் அனைவரும் வெளியே வர அநேகரது காரில் இருந்த பல பொருட்கள் களவு போனது தெரிந்தது.சரவணன் காரிலிருந்து எதுவுமே மிஸ் ஆகவில்லை.பத்து பதினைந்து கார்களில் கை வரிசை காட்டிய திருடன் எப்படி சரவணன் காரை மட்டும் தொடாமல் விட்டான்?.நண்பர் ஒருவர் தந்த சின்ன ஐடியா தான்.
 

எப்போது காரை நிறுத்தினாலும் இருட்டில் நிறுத்தாதே!..சரவணன் தனது காரை ஓட்டலுக்கு  கொஞ்சம் தள்ளியிருந்த போஸ்ட் கம்பத்தில் நிறுத்தியது தான் திருடனுக்கு எரிச்சலைத் தந்தது.வெளிச்சம் பாய்ந்த காரில் விளையாடுவது ரிஸ்க்.சின்ன மேட்டரா இருந்தாலும் உபயோகித்துப் பார்ப்பது சரவணன் வழக்கம்.நட்பென வந்துவிட்டால் நபர்களைத் தான் பார்ப்பார்.அதற்கொரு உதாரணம் அசோகன்.அத்தனை ஹீரோக்களிடமும் நட்பாக இருக்கும் சரவணன் அசோகனிடம் மட்டும் ஏகத்துக்கு நெருக்கம்.இதற்கும் அசோகன் பெரிய ஹீரோவெல்லாம் இல்லை!..ஆனால் நல்ல படிப்பாளி!..சரவணனுக்கு நிறைய படிப்பவர்களை பிடிக்கும்.ஜாவரை பிடிக்க காரணம் அது தான்.இறுதி வரை திருலோக்கோடு இணையக் காரணமும் அது தான்.அதே அலை வரிசை தான் அசோகனையும் அவர் பால் ஈர்த்தது.அன்பே வா உருவாகக் காரணமே அசோகன் தான்.
அசோகன் எம்.ஜி.ஆரின் தீவிர விசிறி!.சின்னவரை வெச்சு கண்டிப்பா நீங்க ஒரு படம் பண்ணனும் சரவணன்!.உங்களுக்கு அது பெரிய கௌரவமா இருக்கும்.பார்க்கும்போதெல்லாம் சரவணன் மனதில் ஆசையைத் தூண்டிவிட்டவர் அசோகன்.வெறும் நெருக்கம் மட்டுமல்ல.சரவணனுக்கு பல புதி நண்பர்களையும் அறிமுகப்படுத்தியது அசோகன் தான்.ஏ.ஸி.யை அவர் தான் ஏ.வி.எம்மிற்குள் நுழைத்தார்.ஆனந்தனை சரவணனுக்கு  அறிமுகப்படுத்தியதும் அவர் தான்.ஜெய்சங்கர் தேங்காய் பாலச்சந்தர் ஆலங்குடி சோமு டி.என்.பாலு என பலரையும் சரவணனுக்கு அசோகன் தான் அறிமுகம்.தந்தையிடம் இருக்கும்  ஒன்று சரவணனிடம் இல்லை!...அது தான் முன் கோபம்.எம்.ஜி.ஆர்.மாதிரி ஏ.வி.எம்மும் சட்டென டென்ஷனாவார்.சரவணன் அரிதாகவே கோபப்படுவார்.அதே போல் மியூசிக்கில் அதிக ஆர்வம் காட்டமாட்டார்.இசை டிபார்ட்மெண்டா?..குமரனைத் தான் கை காட்டுவார்.
திரைத் துறையில் இருந்தாலும் எந்தவித கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகாதவர் சரவணன்.ஸ்டுடியோவை ஒரு கோவிலாக கட்டிக் காத்த பெரியவரிடமிருந்து அப்படியே கற்றுக் கொண்ட பாடம்.ஏகப்பட்ட வெட்டிச் செலவுகளை வைக்கும் சினிமாவில் திட்டமிட்டபடி தயாரித்தால் லாபகரமான தொழில் தான் என நிரூபித்தவர் சரவணன்.பக்காவான ஸ்கிரிப்ட் இல்லாமல் படப்பிடிப்பையே தொடங்கமாட்டார்.அதே நேரத்தில் பழுது ஏற்ப்பட்டால் பத்தாயிரம் அடியாக இருந்தாலும் தூக்கிப் போடத் தயங்கமாட்டார்.தந்தையிடம் கற்ற பாடம்.முடிந்த வரை ஒரு நல்ல திரைப்படத்தை சமூகத்திற்கு தர வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்.ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்குப் பின்னாலும் அவனது தாய் இருப்பார்.சரவணன் வளர்ச்சியில் தாயார் ராஜேஸ்வரியின் பங்களிப்பு முக்கியமானது.
 

கையைத் தொங்கப்போட்டு நிற்கும் சரவணனை நாம் பார்ப்பது அரிது!.அந்தப் பணிவு தாயார் ராஜேஸ்வரியம்மா கற்றுத் தந்தது.பணத்தில் மிதந்தாலும் பணிவைக் கைவிடாதே! வேலைக்காரர்களுக்கும் உரிய மரியாதையைக் கொடு.அந்தம்மா வளர்த்தெடுத்த விதம் அப்படி.பெரியவர் ஸ்டுடியோவே பழியா கிடப்பார்.வயசாகிட்டே போகுது.பசங்க கையில பொறுப்பை ஒப்படைச்சு ரெஸ்ட் எடுங்க!.முருகன் பிரதர்ஸ் சினிமாவில் நுழைய அம்மா தான் காரணம்.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இலாகா!.சரவணனுக்கு வட பழனி ப்ரஸ்.அங்கிருந்து தான் ஆபீஸ் நிர்வாகத்தை அவர்  கற்றுக் கொண்டார்.

அது தான் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு உறுதுணையா இருந்தது.சரவணன்மீது அம்மா அதிக கேர் எடுத்துக்கொள்வார்.இரண்டாம் உலக யுத்தத்தில் சென்னையிலிருந்து குடும்பத்தை மதுரைக்கு அனுப்பினார் பெரியவர்.சரவணனுக்கு நாலு வயசிருக்கும்.உடல் நலமில்லாம சீரியஸா போச்சு.மதுரை டாக்டர் கை விட இந்தம்மா தன்னந்தனியா சென்னை வந்து புரசைவாக்கத்தில வீடெடுத்து தங்கி டாக்டர் பிரபுகிட்ட வைத்தியம் பார்த்து தனது பையனை காப்பாத்துனாங்க!.அந்தப் பிள்ளை தான் இன்று வயது மூப்பில்  அசையாம கிடக்கு..எத்தனை எத்தனை சினிமா அனுபவங்கள்.எத்தனையோ பிரபலங்களோடு ஏகப்பட்ட அனுபவங்கள்.அத்தனை பிரபலங்களும் அவரைப் பற்றி எக்காலத்திலும்  நல்லதே சொல்லியிருக்கு.வாழும் வாழ்க்கைக்கான முழு  அர்த்தம் இறந்த பிறகு தான் தெரியும் என்பார்கள்.கை கட்டியே பார்த்து பழக்கப்பட்ட சரவணன் படுக்கையிலும் கை கட்டியே இருப்பது ஆச்சர்யம்.அவரது ஆடையைப் போலவே வெண்மையான தூய உள்ளம் ..நீண்ட நெடிய உறக்கம்!.யாருக்கும் தீங்கு இழைக்காத அந்த ஆத்மா 
உறங்கட்டும் அமைதியிலே!.அவரது பிரிவின் துயரில் இந்த கட்டுரைக் குழுவும் பங்கெடுக்கிறது.

கருத்துகள் இல்லை: