திங்கள், 23 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு போராட்டம் பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிரான ஒரு போர் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது

மெரினாஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்களை உலகத்தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்...
முகமது யூசுஃப்: அபுதாபி
இங்குள்ள தமிழர்களுக்கு தமிழகத்தில் நடக்கிற ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் மிகப்பெரிய அரசியல் பார்வையை தந்திருக்கிறது. இங்கே மருத்துவத்துறையில் பணியாற்றுகிற நான், இந்த போராட்டத்தை, 'மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு நோயாளி மீண்டும் உயிர் பிழைப்பதைப்போலத்தான்' பார்க்கிறேன். இரத்த அழுத்தத்துக்கெல்லாம் மருந்து மாத்திரைகளை மிரட்டி உட்கொள்ள வைக்கிற அவல நிலைக்கு ஆளாகியுள்ளோம். மாரடைப்பு நேரும்போது செலுத்தப்படும் ஒரு ஊசி ஒரே இரவில்  1500 ரூபாயில்  இருந்து 4500 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நோய்களை  தீர்க்க வந்த தேவதூதனாக தம்மை நிறுவ முயற்சி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும்தான் இந்த நோய்களையே உற்பத்தி செய்கின்றன என்பதே நிஜம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக மட்டுமே பார்க்க முடிவதில்லை; இது ஒரு  பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாகவும் , எல்லாவற்றின் மீது மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் ஆளும் அரசுகளுக்கு எதிரான போராட்டமாகவுமே பார்க்கிறோம். இது ஒரு  புரட்சிக்கான விதை. இது ஜல்லிக்கட்டில் தொடங்கி இருப்பதும், இன்னும் எல்லா பிரச்னைகளுக்கும் தொடரும் என்பதோடு, அடர்ந்த காடுகளுக்கு நடுவில் சிறு மெழுகுவர்த்தியை ஏற்றி வெளிச்சம் பரவச்செய்துள்ள இன்றைய இளைஞர்களின் போராட்டம் காலத்தை கடந்து நிற்கும் என்பதும் உறுதி.
ஜல்லிக்கட்டு போராட்டம்
ஜீவிதா பால்ராஜ் : சார்லொட்டிலிருந்து
நாங்கள் தமிழகத்தின் நிலைமையை சமூக ஊடகங்கள் மூலம்தான் அறிந்துகொள்கிறோம். இங்கே தமிழர்கள் வசிக்கிற எல்லா பகுதிகளிலேயும் சிறுசிறு குழுக்களாக கவன ஈர்ப்பு பேரணியை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். வரும் ஞாயிற்றுக்கிழமை விர்ஜீனியா வில் இருக்கிற பீட்டாவின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம். நியூயார்க் போன்ற பிற பகுதிகளிலிருந்தும் இதில் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.
இது ஒரு அடையாள அழிப்புக்கான முயற்சி. அது ஜல்லிக்கட்டு என்ற ஒன்றுக்கானதாக அல்லாமல், நம் உரிமையை பறிக்க நினைக்கிற அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இங்கே உள்ள தமிழர்களுக்கு சென்னை மெரினா போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்கிற ஆதங்கம் இருக்கிறது. இது எங்களுக்குள்ளும் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கு. விரைவில் சொந்த ஊருக்கே திரும்பி நமக்கான பிழைப்பை பார்த்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையை தந்துள்ளது.
ஜல்லிக்கட்டை எல்லோரும் இனவிருத்தின்னு பேசினாலும் அது நம் தமிழனின் கலாச்சாரம். அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என்கிற மனநிலையிலே இங்கு நிலவுகிறது. இதை வெறும் ஓர் அடையாளப் போராட்டமாக மட்டுமே பார்க்காமல் ஒரு அரசியல் முன்னெடுப்பாகத்தான் பார்க்கிறோம். காவிரிப் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை என எந்த அரசியல்பிரச்னைகளையும் அதன் வேர் வரை  சென்று ஆராய்கிறார்கள்.
தமிழர்கள் மட்டுமின்றி மற்ற மாநிலத்தவர்களும் நம்மைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.​​​​​​​
ஜல்லிக்கட்டு போராட்டம்
கனிமொழி: ஃபாஸ்டன் நகரிலிருந்து
இங்கே பாஸ்டன் நகரில் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்களும், விவாதங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்
வரலாறு காணாத இந்த எழுச்சி, நமது பிரச்னைகளுக்காக போராட எந்த அரசியல் கட்சியையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்காமல் நமக்கான உரிமை பறிக்கப்படும்போது அது எல்லா மட்டங்களிலும் இளைஞர் சக்தியை அசைத்துப்பார்க்கும் என்ற பயத்தையே அரசியல் கட்சிகளுக்கு உண்டு பண்ணியிருக்கும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் முந்தைய தலைமுறையினர் செய்யத் தவறிய அரசியல் முன்னெடுப்புகளை இந்த தலைமுறையினர் ஒற்றுமை உணர்வுடன் செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த ஒற்றுமைதான் மாற்றத்துக்கான முதற்படியாக இருக்குமென நம்புகிறோம்.
- ந.புஹாரி ராஜா, மு. நியாஸ் அகமது விகடன்

கருத்துகள் இல்லை: