திங்கள், 23 ஜனவரி, 2017

போராட்ட களத்தில் தீ வைத்த போலீஸ் .. கல்வீச்சு கண்ணீர் புகைகுண்டு வாகனங்கள் எரிப்பு ...



ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மெரினாவில் உள்ளவர்களை கலைந்து போகச்சொல்லி போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுருந்தபோது அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றியது. கைகலப்பும் ஆனது. கல்வீச்சு, செருப்பு வீச்சு, கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு, வாகனங்கள் எரிப்பு, காவல்நிலையம் தாக்குதல் என சென்னை மாநகரம் முழுவதும் போர்க்களம் ஆனது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும், மாணவர்களும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது. அடையாறு பகுதியில் இருந்து திருப்போரூர் வரை பழைய மகாபலிபுரம் சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் பல பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளிக்கு சென்ற குழந்தைகள், கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் வீடு திரும்புவது எப்படி என்ற நிலையில் இருக்கின்றனர். கலவரம் நடைபெற்ற பகுதிகளில் வீடு வீடாகச்சென்று சந்தேகப்படும் நபர்களை கைது செய்து கொண்டு போகிறார்கள் போலீசார். இதனால் மேலும் பதற்றம் நீடிக்கிறது.நக்கீரன்

கருத்துகள் இல்லை: