திங்கள், 23 ஜனவரி, 2017

மெரினா ரவுண்டு-அப்: கடற்கரைப் போராட்டம் நடந்ததது எப்படி?



படம்: தமிழ் தி இந்து
தமிழ்நாடு முழுவதிலும் ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடிக்கொண்டிருக்கும் மாணவர்களை, காவல்துறை போராட்டக் களத்திலிருந்து அப்புறப்படுத்த முயன்றுகொண்டிருக்கிறது. அறப் போராட்டம் செய்துவந்த மாணவர்கள் காவல்துறையின் முயற்சிகளுக்கு எதிராக நடத்திய எந்தப் போராட்டங்களும் பயனளிக்கவில்லை. நான்கு போலீஸ்காரர்களாகச் சேர்ந்து மாணவர்களைப் பிடித்து போராட்டக் களங்களைவிட்டு அப்புறப்படுத்தியபோது தேசிய கீதம் பாடினார்கள். ஆனால், தேசிய கீதம் பாடியபடியே காவல்துறையினர் அவர்களை போராட்டக்களத்திலிருந்து தூக்கிச் சென்றனர். இந்திய தேசியக் கொடியை மேலே போர்த்திக்கொண்டு படுத்திருந்தவர்களுக்கும் இதே கதிதான். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால்தான் மாணவர்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டனர்.
போராட்டக்களத்திலிருந்து சென்ற மாணவர்கள் சாலைகளில் ஓரத்தில் நின்று கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருக்க, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் கடற்கரையை நோக்கி ஓடிச்சென்று அலை கடல் சேரும் இடத்தில் நின்றுகொண்டனர்.
இந்த செயலைக் கண்ட மாணவர்களும் கடற்கரையில் சென்று நின்றுகொண்டனர். அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சித்ததால் கடலில் இறங்கி இளைஞர்கள் மிரட்டுவதால், செய்வதறியாமல் காவல்துறை ஸ்தம்பித்து நிற்கிறது.
மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் எந்தவிதத்திலும் மாணவர்களை துன்புறுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதை களத்திலேயே காண முடிந்தது. எந்த போலீஸ் அதிகாரிக்கும் எவ்வித ஆயுதங்களும் வழங்கப்படவில்லை. ஷீல்டுகள் கூட அளிக்கப்படவில்லை. கைகளால் மட்டுமே மாணவர்களைத் தடுக்கிறார்கள். இப்போது மெரினாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில் கவனிக்கவேண்டியது, கடலில் குதித்துவிடுவோம் என்ற ஐடியாவை ஆரம்பித்தவர்கள் யார்? என்பதுதான். காவல்துறையும் இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் தேடிக்கொண்டிருக்கிறது. மாணவர்களின் போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே பங்குகொண்டிருந்த மே 17 மற்றும் ம.க.இ.க. அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான், கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும் மாணவர்களுடன் இருக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கான போராட்டங்களை அதிகளவில் நடத்திய மே 17 இயக்கமும், தமிழக மக்களுக்காக சமீப ஆண்டுகளாக அதிக போராட்டக் களங்களைக் கண்டவர்களுமான ம.க.இ.க. அமைப்பினரும், மெரினா போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். விவேகானந்தர் இல்லத்தை மையமாகக் கொண்டு போராட்டத்தைத் தொடங்கிய மாணவர் படையின், வலதுபுறத்தில் மே 17 இயக்கத்தினரும், இடதுபுறத்தில் ம.க.இ.க. அமைப்பினரும் கடந்த 6 நாட்களாக தங்களது போராட்டத்தை நடத்திவந்தனர். மே 17 இயக்கத்தில் இந்தியப் பிரதமரின் அரசியலையும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியலையும் பேச்சாளர்களை வைத்து விமர்சித்துக் கொண்டிருந்தனர். இன்னொருபக்கம் ம.க.இ.க-வினர் கோவனின் குழுவினர் மற்றும் பல கலைக்குழுவினரை வைத்து கலையின் மூலமாக போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தி வந்திருந்தனர். இந்த இரு அமைப்பினரும் இப்போது மாணவர்களை ஒன்றுசேர்த்து கடற்கரையில் நின்றுகொண்டிருக்கின்றனர். மெரினா கடற்கரையை அடையும் அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டுவிட்டன. காலையிலிருந்து எவ்வித உணவும் எடுக்காமல் போராட்டக்காரர்கள் கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உணவு கொண்டுசெல்வதற்கும் வழிகள் இல்லாததால், பட்டினப்பாக்கம் மீன்பிடி மக்கள் படகுகள் மூலமாக உணவுப்பொருட்களை கடல்வழியாகக் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றனர். மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் இப்போதும் காவல் அதிகாரிகளை தனித்தனியாக அனுப்பி போராட்டக்காரர்களுக்கு அவசரச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டத்தைக் கைவிடவேண்டிய அவசியம் என்னவென்பதை விளக்கிவருகிறார்கள்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: