சனி, 28 நவம்பர், 2015

நரபலிகளுக்கு தனி விசாரணை! சகாயம் அறிக்கை! A to Z ரிப்போர்ட் ஜூ.விகடன் ரிப்போர்ட்

சி.பி.ஐ. அதிகாரிகள்... லோக் ஆயுக்தா நீதிமன்றம்... நரபலிகளுக்கு தனி விசாரணை! சகாயம் அறிக்கை! A to Z ரிப்போர்ட்‘‘இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துவிட்டனர். அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைச் சகித்துக்கொள்ள மாட்டோம். அப்படி முட்டுக்கட்டை போடப்படுமானால், எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள். சுப்ரீம் கோர்ட் காட்டிய வழியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடை செய்துவிடுவோம்’’ இப்படி அரசுக்கு எதிராக கர்ஜித்தவர் தலைமை நீதிபதி கவுல்.
கிரானைட் கொள்ளையின் முகம் கிழிந்து தொங்குகிறது. ‘16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை’ இப்போது 1.9 லட்சம் கோடி இழப்பாக எழுந்து நிற்கிறது. கிரானைட் கொள்ளையை கண்டுபிடித்ததற்காக மதுரை கலெக்டர் பதவியில் இருந்து பந்தாடப்பட்ட சகாயம்தான், இப்போது அதன் விசாரணை அதிகாரி. ஆட்சியாளர்கள் அமைக்கும் விசாரணை கமிஷன்களைப்போல சகல வசதிகள், ஆள், அம்பு, சேனையோடு, ஏசி அறைக்குள் அமர்ந்துகொண்டு சகாயம் விசாரணை நடத்தவில்லை. பல உருட்டல் மிரட்டல்களுக்கு இடையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்து சகாயம் நடத்திய வேள்வி, முடிவை எட்டிப்போய்க் கொண்டிருக்கிறது. சகாயம் அளித்த அறிக்கையின் சாராம்சமாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தொகுப்பு இது...
டிராஃபிக் ராமசாமியின்பிள்ளையார் சுழி!

‘கனிமக் கொள்ளையை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்’ என சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி போட்ட வழக்குதான் மைய புள்ளி. 2014 செப்டம்பர் 11-ல் சகாயம் விசாரணைக் குழுவை, நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால், உத்தரவை அரசு செயல்படுத்தவில்லை. நீதிமன்றம் அரசை எச்சரித்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பிறகுதான், வழிக்கு வந்தது தமிழக அரசு. சகாயம் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் புறக்கணித்தார்கள். விசாரணையில் உதவுவதற்காக சகாயம் கேட்ட அதிகாரிகளைக்கூட தராமல் இழுத்தடித்தார்கள். விசாரணைக் குழுவின் செலவுக்கு அரசு பணம் வழங்காமல் டபாய்த்தது. அதிகாரிகளிடம் கேட்ட தகவல்கள் தரப்படவில்லை. இத்தனையையும் மீறிதான் இன்றைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சகாயம் டீம்!
ஆல்பர்ட்: பயோ டெக்னாலஜி படித்தவர். அமெரிக்காவில் அதிக சம்பளத்தில் பணிபுரியும் இவருக்கு, தமிழக கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் பற்றி அனைத்தும் அத்துப்படி. சமூகத்துக்காக தன்னுடைய அமெரிக்க வேலைக்கு விடுப்புக்கொடுத்து சகாயத்துக்கு பக்கபலமாக  உழைத்திருக்கிறார். இதற்காக அரசிடமிருந்து சல்லிக்காசைக்கூட இவர் ஊதியமாகப் பெறவில்லை.
ஜெயசிங் ஞானதுரை: மதுரையில் வேளாண் துறையில் நடந்த முறைகேடுகளைத் தடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார் வேளாண் இணை இயக்குநரான ஜெயசிங் ஞானதுரை, சாமானியர்களின் குரலுக்கு ஓடோடி வருபவர். மதுரை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் எவை, தரிசு நிலங்கள் எவை, குவாரிகள் ஆக்கிரமித்த விவசாய நிலங்கள் எவை என்பதை மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறன்கொண்டவர். தனது குழுவுக்கு ஜெயசிங் ஞானதுரையை சகாயம் கேட்டபோது, தராமல் இழுத்தடித்தது அரசு.
கீர்த்தி பிரியதர்ஷினி: மதுரையில் சப்-கலெக்டராகப் பணியாற்றியவர். சிவகாசி ஆர்.டி.ஓ-வாக இருந்தபோது பட்டாசுத் தொழிற்சாலைகளில் அதிரடியாக சோதனை நடத்தி நிறைய குழந்தைத் தொழிலாளர்களை மீட்டார். நில அளவை, பட்டா, சிட்டா பற்றி நன்கு அறிந்தவர்.
வேலு: ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி-யான வேலு, கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியவர். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைச் சிறைக்கு அனுப்பாமல் ஓயமாட்டார். லஞ்ச எதிர்ப்பு இயக்கம் நடத்தி வருகிறார். காவல் துறையில் நடந்த தவறுகளைக் கண்டுபிடிக்க அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரி தேவை என்பதால், அவரை சகாயம் பயன்படுத்திக்கொண்டார்.
ராஜசேகரன்: முன்னாள் தணிக்கைத் துறை உதவி இயக்குநர். குவாரி ஒதுக்கீட்டில் நடந்துள்ள நிதி முறைகேடுகளை ஆய்வு செய்தவர். அரசுத் தரப்பிலிருந்து குறைவாக மதிப்பிடப்பட்டு குவாரி அனுமதி கொடுத்த ஃபைல்களை பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தவர். அமைதியானவர். ஆனால், தவறுகளைக் கண்டுபிடிப்பதில் முதன்மையானவர்.
ராஜாராம்: தூத்துக்குடியில் அரசு சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவு துணை ஆட்சியராகப் பணியாற்றியவர். மிகவும் நேர்மையான அதிகாரி. மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டுமென்ற சிந்தனையோடு செயல்படுகிறார்.
இவர்களுக்கு உதவி செய்ய அனுபவம் வாய்ந்த அருணாச்சலம், மீனாட்சிசுந்தரம் என்ற ஓய்வுபெற்ற தாசில்தார்கள், நம்பகமான அலுவலக உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், காவல் துறையினர் என அனைவரும் நெருப்புபோல சகாயத்துடன் பணியாற்றினார்கள்.

1.9 லட்சம் கோடி இழப்பு
1996 முதல் 2014 வரையிலான 19 ஆண்டுகால முறைகேடுகளைத் தோண்டித் துருவி எடுத்து அறிக்கை அளித்திருக்கிறார் சகாயம். கிரானைட் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 438 கோடி என அறிக்கையில் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். இதில் 65 ஆயிரம் கோடி ரூபாய் விதிமுறைகளை மீறித் தோண்டியதால் ஏற்பட்ட நஷ்டம். மீதித் தொகை கிரானைட்டை விற்பனை செய்தது, வரி ஏய்ப்பு நடத்தியதால் ஏற்பட்டது.
என்னென்ன தலைப்புகள்?
8 தலைப்புகளின் கீழ், அறிமுகம், கிரானைட் கொள்ளை, நிலத்தின் தன்மை, கிரானைட் வளம் உள்ள இடங்கள், மதுரை மாவட்டத்தில் கிரானைட் வளம், கிரானைட் குத்தகை, விதிமுறைகள், மீறப்பட்ட விதிகள், விதிமுறைகளை மீறியவர்கள், அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்கள், தமிழ்நாடு கனிமவள நிறுவன (டாமின்) விதிமுறை மீறல்கள், அந்நியச் செலவாணி மோசடி, அதனால் ஏற்பட்ட இழப்பு, கிரானைட் கொள்ளைக்காக நடைபெற்ற கொலைகள், முறைகேடுகளுக்கு அரசு இயந்திரம் உதவிய விதம் முதலியன முதல் ஐந்து தலைப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 6-வது தலைப்பில்தான் கரைவேட்டிகள் வருகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் பங்கு பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. 7-வது தலைப்பு சட்ட கமிஷன்கள் பற்றி விவரிக்கிறது. 8-வது தலைப்பில்தான் கிரானைட் கொள்ளையைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
பரிந்துரைகள் என்ன?
கிரானைட் முறைகேட்டில் பலம் பொருந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், சி.பி.ஐ. அதிகாரிகள் கொண்ட தனிக்குழு விசாரிக்க வேண்டும். முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுக்தா போன்ற சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். நரபலிகள் தொடர்பாக தனி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வெளிநாடுகளில் கிரானைட் ஏற்றுமதி செய்தது தொடர்பாக, சரியான விலைப் புள்ளிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுத் துறைகள் ஒத்துழைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். டாமின் நிறுவனத்தை பொதுத் துறை நிறுவனம்போல் அரசே நடத்த வேண்டும் என 20 பரிந்துரைகள் அறிக்கையில் தரப்பட்டிருக்கின்றன.
யார் யார் மீது குற்றச்சாட்டுகள்!
 கிரானைட் முறைகேட்டில் முந்தைய ஆட்சியில் அழகிரிக்கும் இப்போதைய ஆட்சியில் சசிகலாவுக்கும் தொடர்புண்டு என அறிக்கையில் சொல்லியிருக்கிறார்களாம்.
 நீதித்துறையைச் சேர்ந்த சில புள்ளிகளையும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்களாம். நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஒருவர் தொடர்பான புகார்களை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு சகாயம் கடந்த ஆண்டே அனுப்பிவிட்டார். அதை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பிவிட்டார் சஞ்சய் கிஷன் கவுல். அதன் பிறகு, அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
 கனிமவளத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என ‘டாப்’பில் தொடங்கி  கடை நிலை அரசு ஊழியர்கள் வரை 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கிறது அறிக்கை.
உயர் நீதிமன்ற உத்தரவுகள்!
காயம் அறிக்கையை சமர்பித்தப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் இவை!
 ஆவணங்களில் இருந்து மாநில அரசுக்கு ஏதாவது தேவைப்பட்டால், கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
 விசாரணை அறிக்கைத் தொடர்பாக அரசு பதிலளித்த பிறகு, ஆவணங்கள் குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்.
 சிறப்பு அதிகாரியின் பணி பாராட்டத்தக்கது. விசாரணை அதிகாரிகளுக்கும் சாட்சியம் அளித்தவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- ஜோ.ஸ்டாலின், செ.சல்மான்
படங்கள்: எம்.விஜயகுமார், பா.காளிமுத்து, ஈ.ஜெ.நந்தகுமார்

கருத்துகள் இல்லை: