புதன், 18 நவம்பர், 2026

ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா புகார்: பங்களாவில் நீச்சல் குளத்தைத் தோண்டிய SIT |

Jem Veeramani-Archana Case மின்னம்பலம் - Mathi  :  ஜெம் வீரமணியின் சென்னை பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தை முன்னறிவிப்பின்றி சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தோண்டியதாக அவரது மகள் அர்ச்சனா வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 17) புகார் தெரிவித்தார்.
சிறுமிகள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் அதிபர் ஜெம் வீரமணி கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போது, ஜெம் வீரமணியின் சென்னை பங்களாவில் சிறுமி ஒருவரின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக அவரது கார் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்திருந்தார்.



இதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 14-ந் தேதி ஜெம் வீரமணியின் பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தோண்டி சோதனை நடத்தினர். ஆனால், அங்கு சிறுமியின் உடல் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

இதனிடையே, கடந்த அக்டோபர் 23-ந் தேதி சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்திலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தம்மை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக அர்ச்சனா வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்திருந்தார்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி அவர் தாக்கல் செய்திருந்த இந்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

அப்போது அர்ச்சனா வீரமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜராகி, “ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டதிலிருந்து அவரது மனைவியும் மகள் அர்ச்சனாவும் சென்னை பங்களாவில் வசித்து வருகின்றனர். கடந்த நவம்பர் 14-ந் தேதி அர்ச்சனாவுக்கோ, அவரது வயதான தாயாருக்கோ எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தோண்டியுள்ளனர்.

ஆனால், அந்தச் சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வயதான பெண் உட்பட 2 பெண்கள் வசிக்கும் வீட்டில் காவல் துறையினர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது எப்படி? எனவே, இனிமேல் வீட்டில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு அர்ச்சனாவுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். விசாரணையின்போது அவரது வழக்கறிஞர் உடன் இருக்கவும் அனுமதிக்க வேண்டும்“ என்றார்.
காவல்துறை பதில் என்ன?

இதற்குப் பதிலளித்து காவல்துறை சார்பில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி, ”அர்ச்சனாவும் அவரது தாயாரும் வசிக்கும் வீட்டின் கட்டிடத்திற்குள் காவல்துறையினர் நுழையவில்லை. வீட்டின் திறந்தவெளிப் பகுதியில் மட்டுமே தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஜெம் வீரமணியின் பங்களாவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக கார் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது” என்றார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன், வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார்.

அதேநேரத்தில், அர்ச்சனா மற்றும் அவரது தாயாரிடம் வீட்டில் விசாரணை நடத்த காவல்துறையினர் விரும்பினால், அர்ச்சனாவின் வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், விசாரணையின்போது பேசப்படும் விஷயங்களைக் கேட்க முடியாத தொலைவில் வழக்கறிஞர் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக புகார்

ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில் அர்ச்சனா வீரமணி, தனது மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக அக்டோபர் 23-ந் தேதி சிங்கப்பூர் செல்லவிருந்ததாகவும், ஜெம் வீரமணி மீதான வழக்கில் தான் குற்றம்சாட்டப்பட்ட நபர் அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

வெளிநாடு செல்ல எந்த நீதிமன்றமும் தடை விதிக்காத நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் விமான ஊழியர்கள் தம்மை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாக மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple Sclerosis) என்ற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதைக் கருத்தில் கொள்ளாமல் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தில் விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

விசாரணையின்போது மயங்கி விழுந்ததாகவும், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தனது எதிர்ப்பையும் மீறி இவற்றைக் காவல்துறையினர் வீடியோ பதிவு செய்ததாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

மருத்துவரான தனது நண்பர் அறிவுறுத்திய பின்னரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அர்ச்சனா தெரிவித்திருந்தார்.

இந்த மனுவுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு பதில் மனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நவம்பர் 24-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: