Sridhar Subramaniam : ஈரான்-அமெரிக்கப் போரில் எழும் எதிர்வினைகளில் என்னை ரொம்பவும் ஆச்சரியமூட்டியது ஒரு விஷயம்:
கமேய்னிக்கு இந்திய இடதுசாரிகள் கொடுத்த / கொடுக்கும் ஆதரவும் மரியாதையும்தான்.
பலர் கமேய்னியின் ஃபோட்டோவை முகநூல் முகப்புப் படமாகவே வைத்திருக்கிறார்கள்.
கமேய்னி ஒரு ஆயதொல்லா. ஆயதொல்லா என்றால் 'அல்லாஹ்வின் பிரதிபலிப்பு' அல்லது 'அல்லாஹ்வின் அறிகுறி' என்று அர்த்தம்.
அதாவது அவர் உண்மையில் ஒரு மதத் தலைவர்.
அவருடன் மோடியைக் கூட ஒப்பிட முடியாது.
காரணம் மோடி மதத்தலைவர் அல்ல. மோகன் பகவத்தையும் ஒப்பிட முடியாது.
காரணம், அவரிடம் மத அதிகாரம், அரசியல் அதிகாரம் இரண்டுமே இல்லை. வேண்டுமானால் யோகி ஆதித்யநாத்துடன் ஓரளவுக்கு ஒப்பிடலாம்,
அவரும் ஒரு மடத்தின் தலைவர் என்பதால். 'ஓரளவுக்கு' என்று சொன்னதற்குக் காரணம், யோகி மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர். கமேய்னி அது கூட இல்லை. 'நிரந்தர முதல்வர்' என்பது போல 'நிரந்தர அதிபர்'.
ஒப்பீட்டில் இப்படி யோசித்துப் பாருங்கள்: இந்தியாவில் புரட்சி ஒன்று நடக்கிறது. அது வெற்றி பெற்று இந்து மதவாதிகளின் கையில் ஆட்சி போகிறது. தேர்தல் எதுவுமின்றி காஞ்சி சங்கராச்சாரியார் இந்தியாவின் ஜனாதிபதியாகி விடுகிறார். நிரந்தர ஜனாதிபதி. அவர் கை காட்டுபவர்தான் இந்தியாவின் பிரதமர். பிரதமருக்கு நிர்வாகப் பொறுப்புகள் தாண்டிப் பெரிய அதிகாரம் இருக்காது. ஆட்சிப் பொறுப்பேற்றதுமே அரசியல் சாசனம் தூக்கி எறியப்பட்டு, மனுஸ்மிருதியின் பரிந்துரைகளை ஒட்டிய புதிய சாசனம் அமலுக்கு வருகிறது.
![]() |
அசைவம் உண்பது சட்டவிரோதமாகிறது. மத மாற்றப் பிரச்சாரங்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகின்றன. பெண்களுக்கு சொத்துரிமை போகிறது. விதவை மறுமணம் தடை செய்யப்படுகிறது. சூத்திரர்களுக்கு அரசுப் பதவிகள் கிடையாது என்று சட்டம் அரங்கேறுகிறது. நகரங்களில் வசிக்கும் தலித்துகள் காலி செய்து நகரத்துக்கு வெளியே உள்ள வீடுகளுக்குக் குடியேற வேண்டும் என்று அரசாணை வெளியாகிறது. நாத்திகர்கள் சிறைப்படுத்தப்படுகிறார்கள். பள்ளிகளில் சரஸ்வதி பிரார்த்தனையுடன் நாள் துவங்குகிறது.
இவற்றை எதிர்த்து சூத்திரர்கள், பெண்கள், தலித்துகள் போராட்டம் மேற்கொள்கிறார்கள். அவற்றைப் பெரும் குரூரத்துடன் அரசு ஒடுக்குகிறது. ஆயிரக்கணக்கில் போராட்டக்காரர்கள் கொலையுறுகிறார்கள். லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள்.
இது போதாது என்று உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தானை அழித்தே ஆக வேண்டும் என்று சங்கராச்சாரியார் கூக்குரலிடுகிறார். லட்சக்கணக்கான போராளிக் குழுக்களை பயிற்சி கொடுத்து ஆயுதங்கள் கொடுத்து எல்லை கிராமங்களுக்கு அனுப்புகிறது அரசு. ஸ்கூல் பிரேயர் முடிந்ததும் 'பாகிஸ்தானை அழிப்போம்' என்ற கோஷம் முடித்து பிள்ளைகள் வகுப்புகளுக்குப் போகிறார்கள்.
மேலே சொன்னது உங்களுக்கு எவ்வளவு நாசகரமாகத் தோன்றுகிறது? இதுதான் ஈரானில் கடந்த 45 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சங்கராச்சாரி = கமேய்னி. மனுஸ்மிருதி = ஷரியா. பாகிஸ்தான் = இஸ்ரேல். தலித், சூத்திரர்கள் = சிறுபான்மையினர். இந்து நாத்திகர்கள் = முஸ்லிம் நாத்திகர்கள்.
இதுதான் ஆயதொல்லாக்களின் ஈரான்.
45 ஆண்டுகள் தொடர் பிரச்சாரத்திலும் அடக்குமுறையிலும் இதற்கு மக்களின் ஆதரவு இல்லை. கணக்கற்ற சர்வேக்கள் நமக்கு சொல்வது இதுதான். ஒரு ஆய்வின்படி ஈரானின் மக்கள்தொகையில் 73% செக்யூலர் அரசு வேண்டும் என்கிறார்கள். சுமார் 22% மக்கள் எந்த மதத்தையும் சாராமல் வாழ விரும்புகிறார்கள். 2009 முதல் சமீபம் வரை மொத்தம் எட்டுப் பெரிய போராட்டங்கள் அங்கே அரங்கேறி இருந்திருக்கின்றன. லட்சக்கணக்கான பேர்கள் அதில் கொலையுண்டிருக்கிறார்கள். ஜனவரியில் அரங்கேறிய அரசுக்கெதிரான போராட்டத்தில் மட்டுமே 35,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 'ஜின்-ஜியான்-ஆசாதி', 'பெண்கள்-வாழ்க்கை-விடுதலை' எனும் கோஷத்துடன் போராட்டங்கள் அங்கே சென்ற ஆண்டு அரங்கேறின. அவற்றில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கொலையுண்டார்கள்.
இதெல்லாம் போதாது என்று ஈரானின் பொருளாதாரம் மண்ணைக்கவ்விக் கொண்டிருக்கிறது. Hyperinflation எனப்படும் அதீத பணவீக்கம் விலைவாசியை வானுக்கு அனுப்பி இருக்கிறது. ஒரு பிரட் பாக்கெட் ஐந்து லட்சம் ரியால் வரை விற்கிறது. சமீபத்தில் ஈரான் ஒரு கோடி ரியால் நோட்டை அடித்து வெளியிட்டிருக்கிறது!
இந்தப் பின்னணியில்தான் இந்தப் போர் நடக்கிறது. போரைத் துவக்கியது ஒரு குரூரக் கோமாளிதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் போர் துவக்கப்பட்டது ஒரு குரூர சித்தாந்தவாதிக்கு எதிராக என்பதைத்தான் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
யோசித்துப் பாருங்கள்: இந்தியாவின் சர்வாதிகாரி சங்கராச்சாரிக்கும் அவர் ஆட்சிக்கும் எதிராக அமெரிக்கா போர் தொடுக்கிறது. அதில் சங்கராச்சாரி கொலையுறுகிறார். அப்போது உங்களில் எத்தனை பேர் அவர் ஃபோட்டோவை முகப்புப் படமாக வைத்து துக்கம் அனுசரிப்பீர்கள்? மனுஸ்மிருதியைப் போற்றும் இந்துத்துவர்கள் அனுசரித்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். இந்து மதவாதத்துக்கு எதிராக இயங்குவதாக சொல்லிக் கொள்ளும் இடதுசாரிகள் செய்தால்?
போலவே, ஷரியா எனும் பண்டைய குரூரங்களைப் போற்றும் மதவாதிகள் கமேய்னியை முகப்புப் படமாக வைத்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். மதவாதத்தை கசப்புணர்வுடன் அணுகும் இடதுசாரிகள் செய்தால்?
நீங்கள் இந்துத்துவத்துக்கு எதிராக இயங்குவது உண்மையாக இருந்தால் ஈரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகவும் இயங்கித்தான் ஆக வேண்டும். சொல்லப்போனால் இன்னும் கூடுதல் வீரியத்துடன் இயங்க வேண்டும். காரணம், மோடி அரசு போல நூறு மடங்கு மோசமானது கமேய்னி அரசு.
மாறாக, அமெரிக்க எதிர்ப்புக்காக கமேய்னியைப் போற்றிக் கொண்டிருந்தால், மோசமான ஒரு பாசாங்குத்தனத்தையோ அல்லது அறிவீனத்தையோ வெளிக்காட்டுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
ReligionIs Poison
Non-Statutory Warning: Religion is Poisonous to Society.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக