வெள்ளி, 23 மே, 2014

மக்களவைத் தலைவர் மனது வைத்தால் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து

பத்து சதவீத இடங்களைப் பெறும் கட்சிக்கு மட்டுமே எதிர்க்கட்சி தலைவர்
அந்தஸ்து கிடைக்கும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் மக்களவைத் தலைவர் மனது வைத்தால் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.
16-வது மக்களவை அமையவுள்ள நிலையில் எதிர்க்கட்சி அந்தஸ்து வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பளம் மற்றும் படிகள் சட்டம், 1977 மற்றும் நாடாளு
மன்றத் தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கொறடாக்கள் மற்றும் குழுக்கள் சட்டம் 1998 ஆகிய இரண்டு சட்டங்கள் தான் எதிர்க்கட்சி அந்தஸ்து குறித்து தெரிவிக்கின்றன.

இந்தச் சட்டங்களின்படி, மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம் உறுப்பினர்கள் உள்ள கட்சியை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கலாம். அக்கட்சியின் தலைவருக்கு மத்திய அமைச்சருக்கு இணையான அந்தஸ்து, சம்பளம், படிகள் வழங்கப்படும். இந்த நிலை இல்லை என்றால் மக்களவைத் தலைவர் நினைத்தால் ஒரு குழுவை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவையில் 1980-ம் ஆண்டு முதல் ஒன்பது முறை எம்பி-யாக இருந்தவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினருமான வாசுதேவ் ஆச்சார்யா ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம் அதாவது 55 உறுப்பினர்கள் உள்ள கட்சி மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் மக்களவைத் தலைவர் நினைத்தால் ஒரு குழுவை எதிர்க்
கட்சியாக அங்கீகரிக்கலாம். அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இருக்காது என்றே கருதுகிறேன். ஒருமுறை தெலுங்கு தேசம் கட்சிக்கு அத்தகைய அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டும் இணைந்து ஒரே குழுவாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் அனுமதி கேட்டபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு, “இடதுசாரி குழு” என்று அங்கீகரிக்கப்பட்டோம். ஆனால் 59 உறுப்பினர்கள் கொண்ட எங்களை ஒரே பிரிவாக கருதி, இடம் ஒதுக்குவதற்கும் குழுக்களில் உறுப்பினர்களாக நியமிப்பதற்கும் மட்டுமே இந்த வசதி பயன்படுத்தப்பட்டது. வேறு எந்த தனிச் சலுகையும் வழங்கப்படவில்லை.
அதிமுக-வும் திரிணமுல் காங்கிரஸும் இணைந்து எதிர்க்கட்சி அந்தஸ்து கோர முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைத்திருந்த கட்சிகள் அப்படி ஒரு குழுவாக அந்தஸ்து கோருவதை ஏற்கலாம். ஒரு அங்கீகாரத்துக்காக கூட்டு சேர்ந்து சலுகை கோருவது முறையல்ல. அதை மக்களவைத் தலைவர் அங்கீகரிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.
மக்களவை துணைத் தலைவராக இருந்து அனுபவம் பெற்ற எம்பி ஒருவர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் ‘தி இந்து’ விடம் கூறியபோது, “பத்து சதவீத உறுப்பினர்கள் உள்ள கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது விதி. ஆனால் நடைமுறையில் பிரதமரும் மக்களவைத் தலைவரும் சேர்ந்து முடிவெடுத்து ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கினால் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. மக்களவையை பொறுத்தமட்டில் மக்களவைத் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது” என்றார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைப்பது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மக்களவைத் தலைவர் கையில்தான் உள்ளது என்பது தெளிவாகிறது.tamil.hindu.com

கருத்துகள் இல்லை: