புதன், 21 மே, 2014

தனி கட்சி தொடங்க வாசன் தீர்மானம் ? கேம் ஓவர்ன்னு இன்னுமா புரியல ?

தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ் 
தேர்தல் தோல்விக்கு பின், தமிழக காங்., கட்சியில், இப்போது தான் மெல்ல
புகைச்சல் கிளம்ப துவங்கி உள்ளது. 'தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து, ஞானதேசிகனை நீக்க வேண்டும்' என, தேர்தலில் தோற்ற வேட்பாளர் ஒருவர், முதல் குரல் கொடுத்து, முதல் திரியை கொளுத்தி போட்டுள்ளார். இந்த குரலுக்கு பின்னணியில், சிதம்பரம் அணியினர் இருப்பதால், விரைவில் இது கொழுந்து விட்டு எரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலத்திற்கு பின், தமிழகத்தில் இந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசார் தனித்துப் போட்டியிட்டனர். 39 தொகுதிகளில், 38ல் 'டிபாசிட்'டை பறிகொடுத்த போதிலும், 18 லட்சம் ஓட்டுகள் வாங்கி உள்ளனர். 10 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும் என்ற இலக்குடன், இந்த தேர்தலை சந்தித்த இக்கட்சியால், 4.3 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்துள்ளது. எதிரொலித்த கோஷ்டி பூசல்: அதற்கு காரணம், நாடு முழுவதும் வீசிய காங்., எதிர்ப்பு அலை என, காங்கிரசார் கூறினாலும், தமிழகத்தில் காணப்பட்ட கோஷ்டி பிரச்னைகளால், ஓட்டு வங்கியை, இக்கட்சி எப்போதோ இழந்து விட்டது என்பதே உண்மை. கட்சியை சீரழித்த கோஷ்டி பூசல், இந்த தேர்தலிலும் எதிரொலித்தது. தனித்துப் போட்டியிடும் சூழலிலும் கூட, தமிழக காங்., கோஷ்டிகள் ஒற்றுமையாக செயல்பட மறுத்து விட்டன. அதிக ஆதரவாளர்களை கொண்ட, வாசன் அணியினர் தனியாக செயல்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மட்டுமே, வாசன் தீவிர பிரசாரம் செய்தார். சிதம்பரம், தன் மகன் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியிலேயே, அதிக நாட்களை செலவிட்டார். மீதியுள்ள நாட்களில், அவரது ஆதரவு வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளுக்கு மட்டும், சென்று வந்தார். இந்நிலையில், தோல்விக்கு பின், தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையிலும், ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கும், தேர்தலில் பிரசாரம் செய்த வாசனுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன் உள்ளிட்ட யாரையும், அவர் குறிப்பிடவில்லை என்பதில் இருந்து, தோல்விக்கு பிறகும், கோஷ்டி பூசல் தொடர்கிறது என்பது, உறுதியாகி உள்ளது. தேர்தலுக்கு முன்பே, வாசனுக்கும், காங்., மேலிடத்திற்கும், ஏழாம் பொருத்தம் ஆகிவிட்டது. தேர்தலில் போட்டியிட மறுத்த அவரை, தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது, காங்., மேலிடம். தோல்விக்கு பின், மன்மோகன் சிங் அளித்த விருந்துக்கு மட்டுமே, வாசன் டில்லி சென்று வந்தார். அதன்பின், அவரை மேலிடத்தில் இருந்து, யாரும் அழைத்துப் பேசவும் இல்லை; தோல்வி குறித்து விவாதிக்கவும் இல்லை. இதற்கிடையில், காங்., துணைத் தலைவர் ராகுல், திடீரென்று திருநாவுக்கரசருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரது தொகுதிக்கு மட்டும் பிரசாரத்திற்கு வந்தார். இதையடுத்து, தேர்தலுக்கு பின், அவருக்கு தமிழக காங்., தலைவர் பதவி தரப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. உஷாராகி விட்டனர்: இப்போது, ராமநாதபுரத்தில் கணிசமான ஓட்டுகள் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட திருநாவுக்கரசர், வெறும் 62 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே வாங்கி, தோற்று உள்ளார். இதனால், அவருக்கு காங்., மேலிடம் முக்கியத்துவம் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருநாவுக்கரசர் தலைவராகக்கூடும் என்ற பேச்சு, அடிபட்ட போதே, வாசன் தரப்பினர் உஷாராகி விட்டனர். தமிழக காங்., தலைவரை மாற்றும் பட்சத்தில், அதை வாசனுக்கே கொடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு மேலிடம் சம்மதிக்க மறுத்தால், தனி வழியை தேட, வாசன் தயங்க மாட்டார் என்றே, அவரது ஆதரவாளர்கள் அடித்து கூற ஆரம்பித்திருக்கின்றனர். இதுகுறித்து, அவரது ஆதரவாளர்கள் வட்டாரம் கூறியதாவது: ஞானதேசிகனை மாற்ற வேண்டும் என, சிதம்பரம் தரப்பினர் குரல் எழுப்புவர் என்பது, எங்களுக்கு முன்பே தெரியும். அதனால், வாசனை தலைவராக்க வேண்டும் என, கூறுகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில், கட்சியை மீட்டெடுக்க, அவரால் தான் முடியும். இதை மேலிடம் புரிந்து கொள்ளும் என, நம்புகிறோம். வேறுவிதமான முடிவை மேலிடம் எடுத்தால், நாங்கள் தனித்தே செயல்படும் முடிவுக்கு தள்ளப்படுவோம். அதுபற்றி, நாங்கள் ஏற்கனவே ஆலோசித்து விட்டோம். மீண்டும் த.மா.கா,வை துவங்கும் திட்டம் இல்லை. ஏனென்றால், அந்த பெயரில், ஒரு கட்சி உள்ளது. அதனால், வேறு பெயரை பரிசீலித்து வருகிறோம். 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' என்ற பெயரில், ஒரு கட்சி செயல்பட்டு வருகிறது. இக்கட்சி தலைவராக, எம்.எஸ்.ராஜேந்திரன் இருக்கிறார். காமராஜ் மறைவுக்கு பின், அவர் இந்த கட்சியை ஆரம்பித்தார். 1994ம் ஆண்டு பதிவு செய்து நடத்தி வருகிறார். அந்த பெயரையும், அக்கட்சிக்கு உரிய மூவர்ண கொடியையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளோம். இதுபற்றி, ராஜேந்திரனுடனும் பேசி வருகிறோம். காங்., மேலிடத்தின் முடிவை பொறுத்து, வாசனின் திட்டம் மாறும். இவ்வாறு, வாசன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். - நமது சிறப்பு நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: