ஞாயிறு, 18 மே, 2014

தே.மு.தி.க.,வின் படுதோல்விக்கு காரணம் : கூட்டணிக்காக குதிரை பேரம் நடத்தி காலம் கடத்திய விஜயகாந்த் !

கூட்டணிக்காக குதிரை பேரம் நடத்தியதும், பிரசாரத்தில் விஜயகாந்த் சொதப்பியதும் தான் தே.மு.தி.க.,வின் படுதோல்விக்கு காரணம் என அக்கட்சியினர் கருதுகின்றனர்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தைகள், கடந்தாண்டு டிச., மாதமே சூடுபிடித்தது. தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க., தரப்பில் தூதுகள் அனுப்பப்பட்டன. பேராயர் எஸ்ரா சற்குணம், திருமாவளவன் ஆகியோர் இதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இதற்கு பிடிகொடுக்கவில்லை.மாட்டு தரகர் போல...
இந்த தேர்தலில், காங்., கட்சியை கழற்றி விட்டு, தி.மு.க., தனி கூட்டணி அமைக்க முடிவு செய்தது. இதையடுத்து, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்., முயற்சியை துவக்கியது. இதற்காக, விஜயகாந்துடன், மத்திய அமைச்சர் வாசன் பேச்சு வார்த்தை நடத்தினார். பா.ஜ., தரப்பிலும், தமிழருவி மணியன் உள்ளிட்ட சிலர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். இதையடுத்து, மலேசியா, சிங்கப்பூர், டில்லி என மனைவி பிரேமலதாவுடன் சென்று, மூன்று கட்சிகளுடனும் விஜய காந்த் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார்.இதனால் ஒரு கட்டத்தில், கடும் அதிருப்தி அடைந்த தமிழருவி மணியன், 'கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் மாட்டு தரகர் போல நடந்து கொள்கிறார்' என, கடுமையாக விமர்சித்தார். அதன்பிறகும், விஜயகாந்தின் கூட்டணி பேச்சு வார்த்தை, மூன்று கட்சிகளுடனும் நடந்தது. ஒருகட்டத்தில், இது தே.மு.தி.க.,வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனால், இனியும் கூட்டணி பேச்சு வார்த்தையை மூன்று பக்கமும் இழுத்து செல்ல முடியாது என, பா.ஜ.,வுடன்
கூட்டணி அமைக்க முடிவெடுத்து, அதை விஜயகாந்த் அறிவித்தார்.
அதன் பின், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் இழுவையாக நடக்க ஆரம்பித்தன. இதனால், கோபமடைந்த விஜயகாந்த், பா.ஜ., தரப்பிடம் கலக்காமல், தன்னிச்சையாக 5 தொகுதிகளுக்கானவேட்பாளர் பட்டிலை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அதன்பிறகு, பா.ஜ., தலைவர்கள் முயற்சிஎடுத்து, கூட்டணியை உருவகப் படுத்தினர். ஆனால், தேர்தல் பிரசாரங்களில் விஜயகாந்த் சொதப்பினார். கூட்டணி கட்சி தொண்டர்கள் கொண்டு வந்திருந்த கொடியை இறக்குமாறு அடிக்கடி ஆவேசப்பட்டார். வாழ்த்து கோஷம் போட்ட தொண்டர்களை, சண்டைக்கு அழைத்தார். கடலூரில், தன்னை படம்பிடித்த தொண்டர்களின் மொபைல் போன்களை பறித்துக் கொண்டு வந்து கொடுக்குமாறு, தன் பாதுகாப்பு ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டணி கட்சியினரையும் சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தார்.திருவள்ளூர் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, சொந்த கட்சி வேட்பாளர் யுவராஜையே, 'கலப்பட பெட்ரோல் விற்பவர்' என்று சொல்லி, வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதுமட்டுமின்றி, பேச வேண்டிய விஷயங்களை பேசாமல், தனது டிரைவர், உதவியாளர், கட்சியினரை அடித்துவிட்டு, அவர்களுக்கு மதுரையில் 'மட்டன்' பரோட்டா வாங்கி கொடுத்த, கதைகளை கூறினார். இவ்வாறு, தேவையில்லாத விஷயங்களை பேசி, கூட்டணி கட்சியினரையும், தே.மு.தி.க., தொண்டர்களையும், வாக்களர்களையும் வெறுப்பேற்றினார்.

மீண்டும்சொதப்பி...
அதேநேரத்தில், விஜயகாந்தின் சொதப்பல்களை சரிகட்டும் முயற்சியில், பிரேமலதா இறங்கினார். மோடி ஆட்சி பொறுப்பேற்றால், மின் வெட்டுக்கு தீர்வு ஏற்படும், நதிகள் இணைக்கப்படும் என்று கூறினார். அவர் பேசி சென்ற இடங்களில், இரண்டாவது ரவுண்டு பிரசாரம் செய்ய சென்ற விஜயகாந்த், மீண்டும் சொதப்பி, கட்சியின் வெற்றி வாய்ப்பை குறைத்தார்.பிரேமலதா பிரசாரம் செய்யாவிட்டால், தே.மு.தி.க., பெற்ற ஓட்டு எண்ணிக்கை இத்தேர்தலில் மேலும் குறைந்திருக்கும் என்ற கருத்து அக்கட்சியில் தற்போது எழுந்துள்ளது. கூட்டணிக்காக குதிரை பேரம் நடத்தி காலம் கடத்தியதும், பிரசாரத்தில் விஜய காந்த் தொடர்ந்து சொதப்படியதும் தான் தே.மு.தி.க.,வின் படுதோல்விக்கு காரணம் எனவும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

-- நமது நிருபர் -- dinamalar.com

கருத்துகள் இல்லை: