திங்கள், 19 செப்டம்பர், 2011

தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் ,தனித்தொகுதிகள் அறிவிக்கப்படாத நிலையில் அதிமுகஎப்படி?


 உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கான தனி தொகுதிகள், மகளிருக்கான தொகுதிகள் அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது மாநில தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கான தனி தொகுதிகள் மற்றும் மகளிருக்கான தொகுதிகள் எவை எவை என்று மாநில தேர்தல் ஆணையம் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

10 ஆண்டு காலத்திற்கு ஒருமுறை இடஒதுக்கீட்டு சுழற்சிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற நிலையில் 5 ஆண்டு காலம் மட்டுமே முடிந்த பிறகு மேலும் 5 ஆண்டு காலம் மீதம் உள்ள நிலையில் இடஒதுக்கீடு சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தேர்தல் ஆணையம் மீது சந்தேகம்:
இந்த அடிப்படையில்தான் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுவது? என்ற தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இது அரசியல் கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. மாநில தேர்தல் ஆணையம் இடஒதுக்கீடு குறித்த விவரங்களை ஆளுங்கட்சிக்கு மட்டும் முன்னரே தெரிவித்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

ஏற்கனவே, மாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர் என்று தி.மு.க. வக்கீல்கள் மனு ஒன்றினை அவரிடம் அளித்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. மட்டும் தனது வேட்பாளர்களை அறிவித்திருப்பது, மாநில தேர்தல் ஆணையம் குறித்த இந்த குற்றச்சாட்டினை உறுதிபடுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: