சனி, 27 செப்டம்பர், 2025

நான் முதல்வன் திட்டம் சாதித்தது என்ன?

 Raja Rajendran Tamilnadu : நான் முதல்வன் !
எனக்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்கள் பற்றித் தெரியும்.  அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரி மேற்படிப்புக்காக போகும் உரிய மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகின்றனர் !
ஆனால் நான் முதல்வன் திட்டம் பற்றி உண்மையில் ஒன்றுமே தெரியாது.  வெறுமனே அரசு அறிவுப்புகளைப் பார்ப்பதில்தான் அந்தத் தலைப்பு தெரியும்.
ஆனால் அந்தத் திட்டம் சாதித்திருப்பது என்ன தெரியுமா ?  எவ்வளவு தெரியுமா ??
முதலில் நான் முதல்வன் திட்டம் என்ன செய்கிறது என்று திட்டத்தின் இயக்குனர் சாந்தி அவர்கள் சொன்னதைக் கேட்டு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.


முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள் அதாவது மார்ச் 2022 அன்று இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது !
இந்தத் திட்டம் மாணவர்களின் உயர் கல்வி படிப்பு, மேற்படிப்பு, அவர்களுடையத் திறமைக்கேற்ற கல்வி, வேலை வாய்ப்பு என அத்தனையையும் உறுதிப்படுத்துகிறது !
அதாவது அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2 படித்து முடித்து தேர்வான மாணவர்களை அப்படியே விட்டுவிடுவதில்லை இந்த அரசு.
அவர்கள் அனைவரும் மேற்படிப்புக்கு விண்ணப்பித்திருக்கின்றனரா ? என்ன படித்துக் கொண்டிருக்கிறார்கள் ? புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் பயனாளிகளாக இருக்கின்றனரா என்பது வரை TRACK செய்கின்றனர்.
ஒருவேளை ப்ளஸ் டூவில் தேர்ச்சியுற்றும் அந்த மாணவர்களால் மேற்கல்விக்கு போக வசதியில்லை என்று தெரியவந்தால் அவர்களுக்கு உடனடியாக இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்துவகை உதவிகளும் கிட்டுகின்றன.  அத்தோடும் விடுவதில்லை.
திறமையான மாணவராக இருந்தால் அவருக்கு கல்வி கற்க, வெளிநாட்டுப் பல்கலைக் கழகமானாலும் அங்கு சென்று படிக்க வாய்ப்பு அமைகிறது.  அனைத்து அரசு நிதி உதவிகளுடனும் அவர் இலவசமாக பயிலலாம் !
சரி.  UG இங்க முடிச்சாச்சு.  ஆனா PG க்கு வெளிநாடு போய் படிக்க ஆசை.  அதற்கான தகுதியும் இருந்தா அதையும் செய்கிறது இந்தத் திட்டம்.  ஆச்சா ?
முன்பெல்லாம் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே கேம்பஸ் வரும்.  ப்ளேஸ்மென்ட் கிட்டும் (இப்போது கலைக் கல்லூரியிலும் உண்டு). 
ஆனால் அரசு கலைக் கல்லூரிகள் என்றால் கிள்ளுக்கீரை அல்லவா ?   அதை யார் சீந்துவார் ?
நான் முதல்வன் திட்டம் அதை அப்படியே தலைகீழாக்கியுள்ளது.  படிச்ச படிப்புக்கு நான் முதலில் வேலைக்குப் போகிறேன் என்றால் வேலை வாய்ப்பு.  வேலைக்கு போய்க்கிட்டே படிப்பேன்னா அதுக்கும் வாய்ப்பு என்று அரசுப்பள்ளி மாணவர்களின் அற்புதவிளக்காய் உள்ளது நான் முதல்வன் திட்டம்.  
திட்ட இயக்குனர் சாந்தி அடுக்கிக்கிட்டே போக ;
மேம், பெயருக்கேத்தாப்பல அமைதியா இருப்பீங்கன்னு பார்த்தா நீங்க கொட்டித் தள்ளுறீங்க மேம்.  என்னதான் மிச்சம் வச்சிருக்கீங்க என்றார் தொகுப்பாளர் டிடி.
காலை உணவுத்திட்டம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இருக்குன்னு பார்த்தோமா ?
நான் முதல்வன் யாருடைய நேரடி கண்காணிப்பில் இருக்கு தெரியுமா ?
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் திட்டத்தின் கேப்டன்.   தாத்தாவை விட, அப்பாவை விட தாராள குணம்.
ஜப்பான் போய் படிக்கப் போறியா, இந்தா டிக்கெட்.  நான் தைவான் போறேன், இந்தத் தம்பி மலேசியாவுக்கு போறார், அவர் கொஞ்சம் ஸ்பெஷல் நியூயார்க் போகிறார்.  எங்கனாலும் போ.  நல்லா படி.
என்ன ப்யூட்டின்னா போன பல பசங்க அங்கேயே முடிச்சி ப்ளேஸ்மெண்ட் வாங்கியதுதான்.  ஜப்பானில் இந்திய மதிப்பிற்கு மாதம் இரண்டு இலட்சம் சம்பளத்தில் வேலை என ஒரு பெண் சொன்னபோதுதான் இந்தத் திட்டத்தின் வீரியம் உறைத்தது.  அதுக்காக ஜாப்னிஷ் கத்துக்கிறேன்னு சொன்ன அந்தப் பெண்ணை கொஞ்சம் ஜாப்னிஷ் பேசிக்காட்டுங்க என்று டிடி கேட்டுக் கொண்டார்.
ஃப்ரெஞ்ச் படிப்பவர்கள் பேன்ஜோர்னு சொல்வாங்க.  அதுபோல அந்தப் பெண்ணும் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்ன்னு பார்த்தா அடைமழை பொழிஞ்சது. அரங்கத்தில் மிரளாத ஆள் இல்லை !
அமுதா ஐ ஏ எஸ் அப்ப ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க.  அந்தச் சிரிப்பில் என் கண்கள் குளமாகின.  தன் பிள்ளையைச் சான்றோன் எனக் கேட்டத் தாய் காட்டும் மகிழ்ச்சி அது !
உள்ளரங்கின் காலரி முழுக்க பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்திருந்தனர்.   அவர்கள் மனத்துள் என்ன விதைத்திருக்கிறோம் ?  எவ்வளவு வீரியமாய் முளைவிடும் அது ?
நான் முதல்வன் திட்டம் 
ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் கல்வி வளர்ச்சி, தர உயர்வு, மாற்றங்களைப் பயில பயிற்சி தருகிறது !
இந்தத் திட்டத்தால், படித்து, உரிய வேலை கிட்டி, தன் முதல் மாதச் சம்பளத்தை வாங்கிய பெண், அதை தன் அப்பா கையில் கொடுக்க விரும்புவதாகச் சொன்னார்.
அதற்கான சமூக காரணத்தையும் சொன்னார்.
பொட்டப்புள்ளய ரொம்ப படிக்க வச்சி என்னப்பா செய்யப் போற என்றவர்களுக்கு இடையே தன்னைப் போராடி படிக்கச் செய்தார் அப்பா.  அவருக்கு செய்யும் சிறு நன்றிக்கடன் என்றார். 
திருவண்ணாமலைக்கருகே ஒரு கிராமம்.  அங்கிருந்து படிக்க தென்கொரியாவின் சியோலுக்குப் போயிருக்கிறார் ஒரு மாணவர்.  வாழ்க்கையில் ஒருமுறை கூட விமானத்தில் பயணிக்காத நான், படிக்க விமானத்தில் வெளிநாடு போக முடியும், அதுவும் அரசுச் செலவில் என்று கற்பனை கூட பண்ணிப் பார்த்ததில்லை என்றார்.  சியோலில் தமிழ்நாட்டு மாணவர்கள் இவரைப் போல மேலும் ஐந்து பேர் படிக்கின்றனர் !
2014 - 2015 களில், திருவண்ணாமலையின் உள் மலைக்கிராமங்கள் எதற்கு புகழ்பெற்றிருந்தன தெரியுமா ?
ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டக் கூலியாட்களாக போவதற்கு.  அவர்களில் பலர் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அத்தோடு நிற்கவில்லை.  ஆந்திராவிலிருந்து கிளம்பி வந்த போலிஸ் இனி யாரையும் அங்கு மரம் வெட்ட அனுப்பாதீர்கள்.  பிணமாத்தான் திரும்ப வர முடியும்ன்னு எச்சரித்துவிட்டுப் போனார்கள்.  
இந்த மாணவன் திருவண்ணாமலையின் உள் கிராமத்திலிருந்து வந்து சாதித்தேன் என்றபோது உள்ளபடி மகிழ்ச்சியானது !
நான் முதல்வன் திட்டத்தின் வெற்றியை நான் கண்ணாறக் கண்டேன் என ஆரம்பித்தார் ஜெய்பீம் படத்தின் ஒரிஜினல் களநாயகன் முன்னாள் நீதியரசர் சந்துரு.
தூத்துகுடியில் 72 மாணவர்கள் இந்தத் திட்டத்தால் சட்டக் கல்லூரியில் சேர்ந்திருக்கின்றனர்.  அதில் 50 பேர் பெண்கள்.  அதை ஒரு விழாவாக எடுத்து தலைமை தாங்க அசல் நாயகனை அழைத்திருக்கின்றனர்.
சந்துரு இதைச் சொல்லிக் கொண்டிருந்த வேளையில்தான் உதயநிதியும் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் உள்ளே நுழைந்தனர்.
சிவகார்த்திகேயன் வரவு சர்ப்ரைஸ் என்பதால் மாணவர்கள் உணர்ச்சிக்குவியலின் உச்சத்துக்குப் போய்விட்டனர்.  அது உள்ளரங்கம் என்பதால் அவர்களின் பரவசக் குரல் கூரையைப் பிய்த்துவிட்டது !
Gen Z க்களின் அலப்பரைகளைப் பற்றி இப்போதுதான் உயிர்மைக்கு எழுதி அனுப்பியிருந்தேன்.  Gen Alpha இவர்களை விஞ்சிச் செல்வார்கள் போல ?
ஆனால் இந்தச் சத்தம் சினிமாக்காரர்கள் எவர் வந்தாலும் இருந்திருக்கும் என்பதில் வியப்பில்லை.  சிவகார்த்திகேயன் அதிர்ந்துவிட்டார். ஒருவேளை பிரதீப் ரங்கநாதன் வந்திருந்தால் மீண்டும் சிவகார்த்திகேயனே அதிர்ந்திருப்பார்.  ஜென்சீ, ஜென் அல்பாக்கள் அப்படித்தான் !
ஒரு தப்பு செஞ்சுட்டோம்.  சந்துரு மேடை ஏறும்போது, பசங்களா நீங்க ஜெய்பீம் பார்த்திங்களா ? அதுல சூர்யா சந்துருவா வர்றார்ல்ல ?  அந்த ஒரிஜினல் இவர்தான்னு சொல்லியிருக்கலாம்.  ஆனால் சந்துருவை அப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டுமா என விட்டிருக்கலாம்.
பசங்க உண்மையாகவே சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த வரவேற்பை சந்துருக்கல்லவா கொடுத்திருக்க வேண்டும் என்கிற என் தனிப்பட்ட ஆதங்கம் அது !!!
இன்னும் பேச கொஞ்சம் இருக்கு.  அடுத்து...

கருத்துகள் இல்லை: