![]() |
மின்னம்பலம் - Mathi : பாஜக- அதிமுக கூட்டணி அக்கப்போர்தான் தெரியுமே.. திமுக கூட்டணியிலுமா?
திமுக கூட்டணியில் சலசலப்புன்னு சொல்ற மாதிரி பெருசா இல்லைதான்.. நீலகிரியில் நேற்று (செப்டம்பர் 23) எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியை பற்றி பேசியிருக்காரு..
ஓஹோ.. பாஜக- அதிமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறுவதால கவுண்ட்டர் அட்டாக்கா?
அப்படித்தான்.. அதுல எடப்பாடி பேசும் போது, “காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோலங்கர், சரிபாதி தொகுதிகள்- அதாவது 117 தொகுதிகளை திமுக கிட்ட கேட்கனும் சொல்லி இருக்காரு.. ஆட்சி அதிகாரத்துல பங்கு கேட்போம்னு பேசியிருக்காரு.. இதே மாதிரி கே.எஸ். அழகிரி, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பேசியிருக்காங்க.. அதனால திமுக கூட்டணியில் சலசலப்பு, விரிசல்”னு கொளுத்திப் போட்டிருக்காரு..
கூட்டணி ஆட்சி- அதிகாரத்தில் பங்கு .. இதைப்பற்றியெல்லாம் டெல்லி காங்கிரஸ் மேலிடம் என்ன நினைக்குதாம்?
டெல்லியில தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல்களைப் பற்றி வழக்கமான ஒரு டிஸ்கஷன் அண்மையில நடந்துச்சு.. ராகுல் காந்தி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் எல்லாம் கலந்துகிட்டாங்க.. அதுல தமிழ்நாடு தேர்தல் பற்றியும் இயல்பாக பேசியிருக்காங்க..
அந்த டிஸ்கஷனில் என்ன பேசனாங்களாம்?
இதுபற்றி டெல்லியில் இருக்கிற காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, “தமிழகத்துல ஆட்சி அதிகாரத்துல காங்கிரஸ் உட்கார்ந்து 60 வருஷமாகிடுச்சுதான்.. இப்பவும் அப்படியான சூழ்நிலைதான் இருக்கு.. இதுக்கு முன்னாடி 2006-ம் வருஷம் ஒரு சூழ்நிலை உருவாச்சு.. அப்ப தேர்தலில் திமுக அதிகமான இடங்களில் ஜெயிச்சிருந்தாலும் பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற முடியலை.. தேர்தல் ரிசல்ட் முடிஞ்சதுமே சோனியா அம்மா முதலில் போன் போட்டு கலைஞருக்கு வாழ்த்து சொன்னாங்க.. கலைஞரும், சோனியா அம்மாகிட்ட பேசும்போது, திமுக தனித்து ஆட்சி அமைக்க இருக்குன்னு சொல்லி இருந்தார்..
அப்பவே சில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்கனும்னு என்றெல்லாம் சொல்லிப் பார்த்தாங்க.. ஆனா சோனியா அம்மாவோ, “கலைஞர் ரொம்ப சீனியர் லீடர்.. அவரை தொந்தரவு செய்யாதீங்கன்னு” சொல்லி கூட்டணி ஆட்சி பேச்சுக்கே இடமில்லைங்கிற மாதிரி புரிதலை உருவாக்கி இருந்தாங்க..
அப்ப ஜெயலலிதா, திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி.. மைனாரிட்டி ஆட்சின்னு விடாம பேசிகிட்டே இருந்தாரு..
அதுபோதாதுக்கு கூடவே இருந்த பாமக நிறுவனர் ராமதாஸும் சில விமர்சனங்களுடன் அறிக்கைகள் வெளியிட்டாரு..
காங்கிரஸிலும் சிலர் கூட்டணி ஆட்சி பற்றி பேச தொடங்கினாங்க..
அப்ப கலைஞர், காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், சுதர்சனம் என 2 பேருக்கு அமைச்சர் பதவி தரலாம்னு கூட ஆலோசிச்சாரு..
அப்பவும் கூட காங்கிரஸ் கட்சி மேலிடம் எந்த ஒரு நிர்பந்தமும் செய்யலை.. சோனியா அம்மா அதை பற்றி பெருசாகவும் எடுத்துக்கலை.. அதனால அப்ப எதுவும் நடக்கலை.. அவ்வளவுதான்..
அதுக்கு முன்னாடி 1980-ல் எம்ஜிஆருக்கு எதிராக திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைச்சு தேர்தலை சந்திச்சது. அந்த தேர்தலில் திமுகவை விட காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட்டது. திமுக 112 இடங்களிலும் காங்கிரஸ் 114 தொகுதிகளிலும் போட்டி போட்டது.. அப்ப திமுக- காங்கிரஸ் கூட்டணி ஜெயிச்சிருந்தா இயல்பாகவே கூட்டணி ஆட்சி அமைஞ்சிருக்கும்..
இப்பவும் கூட, திமுககிட்ட கூடுதல் தொகுதிகளை கேட்டும் பார்க்கலாம். ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு பிரசாரம் வரும் போது, “தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்து 60 வருஷமாச்சுங்கிற மாதிரி பேசட்டும்..
இதுக்கு எல்லாம் திமுகவின் ரியாக்சன் என்னனு பார்க்கலாம்” என்றெல்லாம் மேலோட்டமான ஆலோசனை நடந்திருக்கு.. பைனல் முடிவாக எதுவும் எடுக்காமலேயே..
சரி.. இப்ப திமுக கூட்டணிதான் வலிமையா இருக்கு.. திமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையா இருக்கே.. கூட்டணி ஆட்சிக்கு என்ன தேவையாம்?
காங்கிரஸில் சிலர் வேற மாதிரி நினைக்கிறாங்க.. “
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக கணிசமான தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இது திமுகவின் வெற்றியைத்தான் பாதிக்கும்.. திமுகவால் தனித்து ஆட்சி அமைக்க கூடிய பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்காது.. அதுக்குதான் இப்பவே பேசுறோம்” என்கின்றனராம்..
இதைத்தான் நீலகிரியில் பேசுன எடப்பாடி பழனிசாமியும், காங்கிரஸில் சிலர் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறாங்கன்னு சொல்லி இருக்கார்..
காங்கிரஸ் நினைக்கிறது ஒரு பக்கம்.. திமுக என்ன செய்யுமாம்?
இதுபற்றி திமுகவில் சிஎம் ஸ்டாலினை சுற்றி இருப்பவர்களிடம் நாம் பேசிய போது, “கலைஞர் காலத்தில இருந்த சூழ்நிலை எல்லாம் வேற.. இப்ப சிஎம் ஸ்டாலின் காலம் வேற.. திமுக தனித்து ஆட்சி அமைக்கிற இடங்களை கைப்பற்றியே ஆகனும்னு ரொம்ப தீவிரமாக இருக்கிறாரு ஸ்டாலின்..
திமுகவில் மேல இருந்து கீழவரைக்கும் யாருக்கும் மூச்சுவிடக் கூட நேரமில்லாம தினமும் பொதுக்கூட்டங்களில் கலந்துகிட்டு பேசுறாங்க.. மற்ற கட்சிகளில் தலைவர்கள் மட்டும்தான் பிரசாரம் செய்யுறாங்க.. திமுகவிலோ அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக இப்பவே பிரசார களத்துல முந்திகிட்டு நிற்கிறாங்க..
இப்படி திமுகவினர் அசராமல் உழைப்பதே, தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைச்சிடனும்.. திமுக தொடர்ந்து ஆட்சி அமைச்சிடுச்சுன்னு புது வரலாறு எழுதனும் என்பதற்குதான்..
2006-ல் தலைவர் கலைஞர், கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான சீட் கொடுத்ததால பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற முடியாத ஒரு சூழ்நிலை வந்துச்சு..
இதை புரிஞ்சதாலதான் சிஎம் ஸ்டாலின், 2021-ல் காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கையை கணிசமாகவே குறைச்சாரு.. இப்பவும் அதே பார்முலாவைத்தான் கையில் வெச்சிருக்காரு..
ஒருவேளை அப்படி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போனாலும் சிஎம் ஸ்டாலின், எதிர்க்கட்சியாக உட்கார கூட தயாராக இருக்கிறாரே தவிர.. கூட்டணி ஆட்சியை பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லைங்கிறதுதான் யதார்த்தம்” என்கின்றனர் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக