tamil.oneindia.com - Pavithra Maniலக்னோ: தமிழகத்தை பின்பற்றும் விதமாக உத்தரப்பிரதேச மாநிலத்திலும் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை ஆவணங்களில் பெயர்களுக்கு பின்னால் உள்ள ஜாதிய ரீதியான அடையாளங்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அங்கு ஜாதி ரீதியான பேரணிகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு வரவேற்பு இருந்தாலும், அங்குள்ள எதிர்க்கட்சிகள் யோகி ஆதித்யநாத்தை கண்டித்துள்ளனர்.
இந்தியாவிலேயே பெயருக்கு பின்னால் ஜாதியை நீக்கும் முறை தமிழ்நாட்டில் தான் அமலில் இருக்கிறது. பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களின் பணியால் தமிழகத்தில் இது சாத்தியமாகி நீண்ட காலமாகிவிட்டது. ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகளில், அதிலும் வட இந்தியாவில் இப்போதும் அவர்களின் பெயர்களுக்கு பின்னால் தங்களின் ஜாதியையும் இணைத்துக் கொள்கிறார்கள்.
Uttra Pradesh Caste
அலகாபாத் நீதிமன்றம் அதிரடி
அரசு அதிகாரபூர்வ ஆவணங்களில் கூட ஜாதிய அடையாளத்துடன் தான் பெயர்கள் இருக்கின்றன. இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றம், "காவல்துறை சம்மந்தப்பட்ட நபர்களின் ஜாதியை பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. இது சட்ட ரீதியான சரியான நடைமுறை இல்லை. நம் அரசியலமைப்பு மரபை குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது." என நீதிமன்றம் கூறியிருந்தது.
வழக்குகளில் ஜாதி ரீதியான பதிவுகள் இடம் பெறுவது ஏன் என்று அந்த மாநிலத்தின் டிஜிபிக்கும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. உத்தரவுப்படி உத்தரப்பிரதேச மாநில அரசு அவர்களின் காவல்துறை பதிவுகள், பொது இடங்கள், அதிகாரபூர்வ ஆவணங்கள், வாகனங்கள் ஆகியவற்றில் ஜாதிய பாகுபாட்டை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாதிய அடையாளம் நீக்கம்
இதற்காக அனைத்துத் துறைகளுக்குமான உத்தரவை உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் தீபக் குமார் பிறப்பித்துள்ளார். அதில், "கைது குறிப்பாணைகள், முதல் தகவல் அறிக்கை, தகவல் பலகை, விளம்பர பலகை, வாகனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் உள்ள ஜாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்.
சம்மந்தப்பட்டவர்களின் பெற்றோர் பெயரை அடையாளத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதை உடனடியாக அமல்படுத்துவதற்காக கையேடு மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் வந்துள்ளது. அதேநேரத்தில் அங்குள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
பேரணிகளுக்கும் தடை
இந்த உத்தரவில் சில விதிவிலக்குகளும் உள்ளன. காவல்துறை பதிவுகளில் ஜாதிய அடையாளங்களை நீக்க சொன்னாலும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் இருந்து இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜாதி ரீதியான பேரணிகளுக்கும் தடை விதித்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜாதிய பேரணிகளுக்கு நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காத நிலையில், உத்தரப்பிரதேச அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், "5,000 வருடங்களாக மனதில் வேரூன்றியுள்ள சாதிய பாகுபாட்டை எப்படி நீக்க முடியும்.
எதிர்க்கட்சி எதிர்ப்பு
இப்போதும் ஒருவரை சந்தித்தால் அவரின் பெயரை கேட்பதற்கு முன்பு ஜாதியை கேட்கிறார்கள். அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணிகளில் உள்ள பாகுபாட்டை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதி ரீதியாக அவதூறு பரப்புவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக