வியாழன், 19 நவம்பர், 2015

20.11.2015 நீதிக்கட்சி நூற்றாண்டு- சுயமரியாதை இயக்கம் 90-ம் ஆண்டு தொடக்க விழா

நீதிக்கட்சியின் நூற்றாண்டு - சுயமரியாதை இயக்கம் 90ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பெரியார் திடலில் 20.11.2015 அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது 
தாழ்ந்தவர் என்பர் உயர்ந்தவர்க்கு இம்மொழி இன்பம் - இந்தச்
சாத்திரத்தால் இந்த நாள்வரைக்கும் துன்பம்! - மண்ணில்
தாழ்ந்தவர் என்றொரு சாதியுரைப்பவன் தீயன் - அவன்
தன்னுடலைப் பிறர் சொத்தில் வளர்த்திடும் பேயன் - நீர்
தாழ்ந்து படிந்து தரைமட்டமாகிய நாட்டில் - இனிச்
சாக்குருவிச் சத்தம் நீக்கிடுவீர் மன வீட்டில் - இன்று
வழ்ந்தவர் பின்னர் விழிப்பதற்கே அடையாளம் - வாய்
விட்டிசைப்பீர் சுயமரியாதை எக்காளம்!
என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பிறப்பிலேயே பேதம் பேசும் நாடு இது. இந்தச் கேவலத்துக்குக் கடவுள் துணை _ மதம் பாதுகாப்பு _ சாத்திரம் சாய்கால் -_ ஏன் இந்த அரசமைப்புச் சட்டமே பாடுவது ஏற்றப் பாட்டு.
ஜாதி ஓர் அடையாளமாக இருந்தால் கூட இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும் என்று அலட்சியத் துடைப்பத்தால் தட்டி விட்டுப் போகலாம்.
அப்படியில்லையே! அவன் பிறப்பை இது மய்யப்படுத்தி, இழிவைத் துடைப்பத்தால் அல்லவா மொத்துகிறது.  தாசிமகன் என்றல்லவா, வைப்பாட்டி மகன்கள் என்றல்லவா முத்திரை குத்துகிறது.
உலகத்தில் எங்கும் கேள்விப்படாத பெருங்கொடுமை இது.
ஆம்... கடாரம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் யார்? இமயம்வரை சென்று எதிரியின் தலையில் கல்லைச் சுமத்திக் கொண்டுவந்த மன்னவர்களின் பூமியாயிற்றே!
ஆனாலும் அந்த மன்னாதி மன்னர்கள் _ இங்குச் சூத்திரர்கள்தான் _ பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள்தான்.
இதன்மீது ஏன் கோபம் குமுறி எழவில்லை? ஆத்திரம் ஏன் அலைமோதவில்லை? அதுதான் பக்தி என்னும் போதை _ கடவுள் என்னும் மாத்திரை _ சாஸ்திரம் என்னும் சாத்துப்படி.
இழிவை ஏற்றதோடு அல்லாமல், அதனை ஏற்றமானதாகக் கருதினான்; தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகச் சரியாக சொன்னதுபோல அவன் மூளையில் மத விலங்கு மாட்டப்பட்டுவிட்டது.
இந்த இன இழிவை ஒழிக்க வேண்டுமானால் அவன் கடவுளைக் கருவறுப்பவனாக இருக்க வேண்டும்; மதத்தை மரணக் குழிக்கு அனுப்பும் வீரனாக இருக்க வேண்டும். சாத்திரத்திற்கு நெருப்பு வைத்து சாம்பலாக்கும் சரித்திர நாயகனாக இருக்க வேண்டும்.
அந்த நாத்திகர்தான் _ அந்த மான வீரர்தான் _ அந்தச் சரித்திர நாயகர்தான் தந்தை பெரியார்.

திண்ணைப் பள்ளிக் கூடத்தில், தான் குடித்த தண்ணீர்க் குவளையை தண்ணீர்த் தெளித்து ஒர் உயர்ஜாதிப் பெண் எடுத்தபொழுது அந்த இள வயதில் அவர் உள்ளத்தில் பீறிட்டு எழுந்த அந்தச் சுயமரியாதைதான் _ நாட்டில் நிலவும் _ அவமரியாதைகள் _ ஏற்றத் தாழ்வுகள், உரிமை மறுப்புகளைக் கண்டபொழுது சுயமரியாதை இயக்கம் என்னும் சூறாவளியாகப் புறப்பட்டது.
கட்சி அரசியலுக்கு அவர் செல்லும் முன்பும் சரி, காங்கிரஸ் கட்சி அரசியலுக்குள் நுழைந்தபோதும் சரி, அவருக்கு உதித்த சிந்தனைகள் எல்லாம் அந்தச் சுயமரியாதைச் சூறாவளி என்னும் தாயின் கர்ப்பத்திலிருந்து வெடித்ததுதான்.
காங்கிரசில் இருந்தபோது வைக்கம்வரை சென்று போராடியதற்கும், காங்கிரஸ் நிதி உதவியோடு நடத்தப்பட்ட சேரன்மாதேவி குருகுலத்தில் காட்டப்பட்ட மேல்ஜாதி _ கீழ்ஜாதி நடவடிக்கைகளை எதிர்த்து, அதனை ஊற்றி மூடியதற்கும், ஒரு கட்டத்தில் தான் தலைவராக ஏற்றுக்கொண்ட காந்தியார் அவர்களையே முகத்துக்கு முகம் எதிர்த்ததற்கும் _ தன்னால் தமிழ்நாட்டில் கட்டிக் காப்பாற்றப்பட்ட காங்கிரசுக்கு முழுக்குப் போட்டதற்கும் _ எல்லாவற்றிற்குமே காரணம் தந்தை பெரியார் அவர்களிடத்தில் தணலாக எப்பொழுதும் கனன்று கொண்டிருந்த சுயமரியாதையே!
கடவுள் இல்லை _ இல்லவே இல்லை _ கோயிலுக்குள்ளிருப்பது கல்லுதான் என்று கர்ச்சித்த தந்தை பெரியார், அந்தக் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் உரிமை தாழ்த்தப்பட்டவர் முதல் அனைத்து ஜாதியினருக்கும் உண்டு என்று உரிமைக்குரல் கொடுத்தற்கும்கூட காரணம் அந்த மனித சுயமரியாதை உணர்வுதான்.
கடவுள்களைப் போட்டு உடைத்ததற்கும், புராண இதிகாசங்களைக் கொளுத்தியதற்கும், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தியதற்கும் கூட காரணம் அந்தச் சுயமரியாதைதான்.
அந்தச் சுயமரியாதை என்பதன் மீது இந்தச் தலைவருக்கு அப்படி என்ன அதீதமான காதல்?
இதற்கு அந்தச் சுயமரியாதை ஞான சூரியனிடமே கேட்கலாம்.
இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டுவந்து போட்டு ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும் _ அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது (குடிஅரசு 01.06.1930) என்கிறார் அந்த ஞானசூரியன்.

இரண்டு முறை கதவைத் தட்டி இந்தாருங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் இம்மாநில முதல் அமைச்சர் பதவியை என்று வெள்ளைக்காரக் கவர்னர்கள் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தபோதும்கூட அட்ரஸ் தெரியாமல் என்னைத் தேடிவந்து விட்டீர்கள், அந்த முதல் அமைச்சர் பதவிக்கு ஆயிரம் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் நாட்டில்; ஆனால், மக்களுக்குச் சுயமரியாதையை ஊட்டும் இந்தப் பணியைச் செய்வதற்கு என்னை விட்டால் வேறு நாதியில்லை! என்றாரே! அந்த அறிவிப்புக்கு எடையாக எந்தப் பொருளை ஈடு கொடுக்க முடியும்?    ஆம், அந்தச் சுயமரியாதைச் சொக்கத் தங்கம் பதவிக்குப் போகாததால்தான் இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட குடிமகன் முதல் தமிழர்கள் எல்லாம் பதவிக்குச் செல்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இழிவை ஒழிக்க இந்து மதத்திலிருந்து கரையேறி, புத்த மார்க்கத்திற்குப் போவோம்!  என்று தந்தை பெரியார் அவர்களை அழைத்தபோதுகூட, இழிவைச் சுமந்து கிடக்கும் மக்களைக் கைவிட்டுவிட்டு, நாம் மட்டும் இழிவு நீங்கி என்ன பயன்? இங்கிருந்துகொண்டே ஒருகை பார்க்கிறேன் என்று சொன்ன தந்தை பெரியார் இதில் பெரும்பாலும் வெற்றி பெற்றாரா? இல்லையா?
அய்யரை அழைத்து, அருந்ததி பார்த்து, அக்னியைச் சுற்றி, சப்தபதி எடுத்து வைத்தால்தான் கல்யாணம் செல்லுபடியாகும் என்ற நிலை இருந்த இந்தச் சமுதாயத்தில், அவற்றையெல்லாம் தூக்கிச் சாக்கடையில் வீசி எறிந்து, புரோகிதமற்ற புரட்சி மணக்கும் புதுத் திருமண முறையை அறிமுகப்படுத்தி அதற்குச் சுயமரியாதைத் திருமணம் என்ற பெயரும் சூட்டி, நாட்டில் ஆயிரக்கணக்கான புரோகிதமற்ற புரட்சித் திருமணங்களை நடத்திக் காட்டினாரா இல்லையா?
சட்டப்படி அது செல்லாது என்று உயர்நீதிமன்றமே சொன்னது. இதன் பொருள் என்ன? சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள் சட்டப்படியான தம்பதிகள் அல்லர்; அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சட்டப்படியானவர்களும் அல்லர் என்ற நிலை இருந்தும்கூட உங்கள் சட்டத்தைத் தூக்கி உடைப்பில் போடு! எங்கள் தலைவர் சொல்லுவதுதான் எங்களுக்குச் சட்டமே தவிர உங்கள் அரசியல் சட்டம் அல்ல என்று பல்லாயிரக்கணக்கானோர் திருமணங்களைச் செய்து கொண்டார்களே _ இந்த அதிசயம் _ புரட்சி இந்த உலகப் பந்தில் வேறு எங்குதான் நடந்திருக்கிறது என்று சொல்லட்டுமே பார்க்கலாம்.
தந்தை பெரியார் அவர்களின் சீடர் அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து அய்யாவின் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தாரே! (28.11.1967)
இதன் பிறகு நடக்கும் சுயமரியாதைத் திருமணம் மட்டுமல்ல, இதற்கு முன் நடந்த சுயமரியாதைத் திருமணங்களும் (With Retrospective Effect)செல்லுபடியாகும் என்று சட்டம் செய்தாரே!
சட்டசபைக்கே செல்லாத தலைவருக்கு இந்தச் சட்ட சபையே காணிக்கை என்று அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தாரே, (20.6.1967) இந்த அதிசயம்தான் எங்கு நிகழ்ந்திருக்கிறது?
சூத்திரன் ஆட்சி செய்தால் அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசுபோல் அழிந்து விடும் என்ற சாஸ்திரம் நங்கூரம் பாய்ச்சப்பட்ட இந்த இந்து நாட்டில் தந்தை பெரியார் மொழியில் சொல்லுகிறேன் _ இது சூத்திரர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் அரசு என்று (28.7.1971) ஒரு முதல் அமைச்சர் (மானமிகு மாண்புமிகு கலைஞர்) சட்டமன்றத்திலேயே முழங்கியதுகூட இந்தப் பாருலகில் எங்கு நடந்திருக்கிறது? எடுத்துக் காட்ட முடியுமா?
1929ஆம் ஆண்டு (பிப்ரவரி 17, 18) செங்கற்பட்டில் நடந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் பிற்காலத்தில் சட்டங்களாக மாறியுள்ளன. பெண்கள் கல்வி, பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவைத் திருமணம் என்று அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமணங்களில் சொன்ன கருத்துகளும், திட்டங்களும்கூட சட்டங்களாகப் பிற்காலத்தில் கொண்டுவரப்பட்டன.
ஆட்சிக்குச் செல்லாத பெரியார் ஆட்சியை நடத்தினார் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.
சுயமரியாதை இயக்கம் என்கிறபோது அதற்கென்று தொடக்க விழா இல்லை; எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்றுகூட அறுதியிட்டுக் கூறமுடியாது. சமூகச் சூழலும், அந்தப் பருவத்தில் ஞான சூரியனாகத் தோன்றிய தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையில் வெடித்த கருத்துகளும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் சுயமரியாதை இயக்கம்.
காங்கிரசில் இருந்தபோதே தந்தை பெரியார் குடிஅரசு இதழைத் துவக்கினார்களே _ அந்த மே 2ஆம் தேதி (1925)யை சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க நாள் என்று கூறுவோரும், தந்தை பெரியார் காஞ்சிபுரத்தில் சமூக நீதிக் கொள்கைக்காக காங்கிரசை விட்டு வெளியேறினாரே (22.11.1925) அந்த நாள்தான் சுயமரியாதை இயக்கம் பிறப்பெடுத்த நாள் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு என்றாலும் 1925இல் தந்தை பெரியார் என்னும் பேராசானின் மூளையில் பிரசவிக்கப்பட்ட இயக்கம் இவ்வியக்கம் என்பது மட்டும் உண்மை. அதன் அடிப்படையில்தான் 1975இல் தஞ்சையில் பொன்விழா அன்னை மணியம்மையார் அவர்களால் சீரும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது. அதன் தொண்ணூறாம் ஆண்டு வரும் 18.ஆம் தேதி (18.11.2015) அன்று சென்னைப் பெரியார் திடலில் கொண்டாடப்படுகின்றது.

சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் இணைத்துதான் சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற   வரலாற்றுத் திருப்பு முனையை உருவாக்கினார்! (27.8.1944)
இன்றைக்கு இருக்கும் திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமே! இது சமுதாயத்தில் மட்டுமல்ல. அரசியலையும் புரட்டிப் போட்டு இருக்கிறது. பொருளாதாரத் துறையிலும் புதிய சிந்தனை வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அதன் மாநாட்டுத் தீர்மானங்களை ஒரு கணம் கண்டாலே அதன் சகலப் பரிமாணங்களையும் அட்சரம் பிறழாமல் அறியலாமே!
சுயமரியாதை இயக்கம் குறித்து இங்கிலாந்தின் ஆர்.பி.ஏ. அமைப்பு ((Rationalist Press Association) 1931ஆம் ஆண்டிலேயே கணித்ததுண்டு.
இந்திய வரலாற்றில் வியக்கத்தக்கபடி சென்ற அய்ந்தாண்டுக் காலத்தில் ஒரு புதிய உணர்ச்சி வெள்ளம் இருகரையும் புரண்டு போய்க் கொண்டிருக்கிறது. அதாவது சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் சென்ற அய்ந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநிலத்தில் தொடங்கப்பட்டு, மக்களால் நெடுங்காலமாக மரியாதை செய்யப்பட்டு வந்த கருத்துகளும், உணர்ச்சிகளும் அடிப்படையிலே ஆட்டம் காணும்படிச் செய்துவிட்டது என்று குறிப்பிட்டது என்றால் இவ்வியக்கத்தின் வீறுகொண்ட தலைமையை அறியலாமே (ஆர்.பி.ஏ. என்னும் அமைப்பு பகுத்தறிவு வெளியீட்டுக் கழகம் _ லிட்டரரி கெய்டு (அறிவு விளக்கம்) என்னும் திங்களிதழில் _ 1931ஆம் ஆண்டு)
சுயமரியாதை இயக்கம் என்பதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார்.
மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடுகின்றது. இவற்றிற்கு எதிராகவும், தடையாகவும் இருக்கும் எதையும் அடியோடு ஒழிக்கத் தைரியம் கொள்கிறது. (குடிஅரசு 20.9.1931) என்று சுயமரியதை இயக்கத்தின் கொள்கையைச் சுருக்கமாகக் கூறியுள்ளார் தந்தை பெரியார்.
சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு வாழ்க்கை நெறிமுறை. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்ற அறிவு மொழியைக் கண்ணொளியாக அளித்த வாழ்வியல்! சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பதே அதன் இலக்கு.
நீதிக்கட்சி என்று சொல்லப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தோற்றம் 1916ஆம் ஆண்டு. அதனை மய்யப்படுத்தியே 2015ஆம் ஆண்டை நீதிக்கட்சியின் நூற்றாண்டுத் தொடக்கமாகக் கருதி விழாவினை திராவிடர் கழகம் எடுக்கிறது. (நவம்பர் 17, 18, 19, 20 _ 2015 -_ இடம்: பெரியார் திடல், சென்னை-_7).
இந்த அமைப்புத் தோன்றுவதற்கு மும்மூர்த்திகளாக இருந்த பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியவர்கள் ஆவார்கள்.
1912ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சிக்கு முன்னோடியாக ஓர் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. அதற்குரிய பெருமான் டாக்டர் சி.நடேசனார். அவ்வமைப்பின் பெயர் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் (Madras United League) 1913ஆம் ஆண்டில் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
1916 நவம்பர் 20ஆம் தேதி சென்னை வேப்பேரியில் வழக்குரைஞர் எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் பார்ப்பனர் அல்லாத பெருமக்கள் டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், ராமராய நிங்கர் (பனகல் அரசர்) உள்ளிட்ட 26 பார்ப்பனர் அல்லாத பிரமுகர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்த நீதிக்கட்சி.
அதன் முதல் கொள்கை அறிக்கையை (Non-Bramin Manifesto) வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்டார். (20_12_1916) அந்த அறிக்கையை முழுமையாகப் படித்தால் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட வேண்டிய அவசியத்தை அறிந்துகொள்ள முடியும்.
இந்த அறிக்கை வெளிவந்தபோது பார்ப்பன இந்து ஏடு எழுதிய தலையங்கம் கவனிக்கத் தக்கதாகும். மிகவும் துயரத்துடனும், ஆச்சரியத்துடனும் நாங்கள் அந்த ஆவணத்தை ஆராய்ந்தோம்.(It is with much pain and surprise we persued the documents) என்று எழுதியது என்றால் பார்த்துக் கொள்ளலாமே. அவாள் கண்ணோட்டத்தில் அது சரி தானே!
அந்த இயககம் அல்லவா பார்ப்பன ஆதிக்கத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறிந்தது, பார்ப்பனர் அல்லாதார் தலைதூக்கக் காரணமாக இருந்தது.
ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்ற ஏடும், தமிழில் திராவிடனும், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா என்று மூன்று ஏடுகள் தொடங்கப்பட்டன.
பார்ப்பனரல்லாத மக்களுக்காக சமுதாய நிலை, பொருளாதார நிலை, சம அந்தஸ்து, சம வாய்ப்பு ஆகியவற்றைக் கிடைக்கச் செய்வதே நீதிக்கட்சியின் நோக்கமாகும்.
1922, 1923 சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய சாதனைகளை பார்ப்பனர் அல்லாதார் சமுதாயத்திற்கு வாரி வழங்கியது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சாதித்துக் காட்டியது நீதிக்கட்சி அமைச்சரவையே. அந்த ஒன்றுக்காகவாவது பார்ப்பனர் அல்லாதார் ஒவ்வொருவரும் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை நன்றி உணர்வோடு நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானதாக இருக்கும்.
ஒரு கொடுமையை நினைத்துப் பார்க்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது என்றால் இதன் கொடுமையையும் ஆரிய சூழ்ச்சியையும் எளிதில் புரிந்துகொள்ள முடியாதா?
தந்தை பெரியார் கொடுத்த குரலைச் செவிமடுத்த அன்றைய முதல் அமைச்சர் பனகல் அரசர் அவர்கள் அந்த நிபந்தனையை உடைத்துச் சுக்கல் நூறாக்கித் தூக்கி எறிந்தார்.
அதன் விளைவுதான் இன்று தொப்புளான் எம்.எஸ்., அமாவாசை எம்.டி., குப்பம்மாள் எம்.பி.பி.எஸ். என்ற கண்கொள்ளாக் காட்சி!
நீதிக்கட்சியின் சாதனைப் பட்டியல்களுள்  இதோ ஒரு சில:
தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிறபோது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை  உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.
மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப் படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
பி அண்டு சி மில்லின் வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.
ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
குடிப்பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.
தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளை களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (Stipend) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்-பட்டது.
அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்-பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்-படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.
அரசு ஆணைகளின் தொகுப்பு:
1.    பெண்களுக்கு வாக்குரிமை அரசாணை எண். 108 நாள்: 10.05.-1921.
2.    பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் _- ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25.-3.-1922
3.    கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20.-5.-1922.
4.    கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21.-6.-1923.
5.    தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11.-2.-1924; (ஆ) 1825 நாள்: 24.9.1924.
6.    இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27.-01.-1925.
7.    சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 2-.5.-1922. (ஆ) 1880 நாள்15.-9.-1928.
8.    வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.744 நாள் 13.9.1928.
9.    சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18-.10.-1929.
10.    தேவதாசி ஒழிப்புச் சட்டம். (1930).
நீதிக்கட்சி 1916 முதல் பார்ப்பனர் அல்லாதார் கல்விக்காகவும், உத்தயோகத்துக்-காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தந்தை பெரியார் காங்கிரசுக்-குள்ளேயிருந்த அதே கருத்துக்கான குரலை கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நல்ல சட்டங்களுக்குக் காங்கிரசுக்குள்ளேயிருந்தே ஆதரவுக் குரல் கொடுத்தார்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய நிலையில் மிகவும் வெளிப்படையாக நீதிக்கட்சியை அரவணைத்தார். அதன் செவிலித் தாயாகவே இருந்தார்.
அதனால்தானோ என்னவோ தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தந்தை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
திராவிடர் இயக்கமான நீதிக்கட்சியின் சாதனைகளில் கை வைக்க யாருக்கும் துணிவு கிடையாது என்பதிலிருந்தே அக்கட்சியின், ஆட்சியின் அருமையும் பெருமையும் விளங்கும்.
----------------
சுயமரியாதை இயக்கத்தின் சாதனை!


- அசோக் மேத்தா
1977 செப்டம்பரில் தமிழகத்துக்கு வந்த பிரபல சோசலிஸ்டும், பொருளாதார மேதையுமான அசோக் மேத்தா அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசும்போது கீழ்க்கண்ட கருத்தைச் சொன்னார்.
தென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்-பட்ட மக்களின்மீது உயர்ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் அறைகூவல் விடுத்தது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிலே வெற்றி கண்டு அரசியலையும் கைப்பற்றினார்கள்.  தமிழகத்தில் ஏற்கெனவே நடந்துள்ள இத்தகைய மாற்றத்தின் எதிரொலியை அண்மையில் சில மாதங்களாக வட மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களில் காண முடிகிறது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களாக இருப்பவர்கள் விவசாயிகள்தான். அத்தகைய பிற்படுத்தப்பட்ட மக்கள் இப்பொழுது வட மாநிலங்களில் அரசியலைக் கைப்பற்றிக்-கொண்டு வருகிறார்கள். வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இடையே இப்படிப்பட்ட சிந்தனைப் பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு இருக்கிறது! என்று அசோக் மேத்தா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(இந்தியன் எக்ஸ்பிரஸ், 16.09.1977)



கருத்துகள் இல்லை: