Prabaharan Alagarsamy : பாராட்டப்பட வேண்டிய திமுக பலிகடாவாக்கப்பட்டிருக்கிறது!
20 புத்தகங்கள் பதிப்பித்துள்ள மிகச்சிறிய பதிப்பாளர் (நிகர்மொழி பதிப்பகம்) என்கிற வகையிலும், கடந்த திமுக ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ய நடைமுறைப்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர முறையில் மிகச்சிறிய அளவில் பயன்பெற்ற பதிப்பாளர் என்கிற வகையிலும் இதை எழுதுகிறேன்.
நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் பன்னெடுங்காலமாகவே இடைத்தரகர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து வந்துள்ளது. கடந்த காலங்களில், 20% முதல் 30% வரை கமிஷன் கொடுக்காமல் புத்தகங்களை நூலகங்களுக்குக் கொடுக்க முடியாது என்கிற நிலைதான் எல்லா ஆட்சிக் காலங்களிலும் இருந்தது. மிகப்பெரிய பதிப்பகங்கள் இதிலிருந்து தப்பியிருக்கலாம். மட்டமான மலிவான மட்டித்தாளில் (Newsprint quality paper) நூலகங்களுக்கான புத்தகங்களை அச்சிடும் மோசடியும் பல காலமாக நடந்து வந்துள்ளது.
இந்த நிலையை ஒழித்து ஒற்றைச் சாளர முறையை 2024-ஆம் ஆண்டு திமுக அரசு அறிமுகப்படுத்தியது. பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை நேரடியாக அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கண்டிப்பாக ஐஎஸ்பிஎன் (ISBN) பெற்றிருக்க வேண்டும்; அச்சிடப்படும் தாள்கள் குறிப்பிட்ட தரத்தில் இருக்க வேண்டும்; கேள்விகளை நிவர்த்தி செய்வதற்கு நேரடியாக அரசின் உதவி எண் (Help-line); இப்படி நிறைய விதிமுறைகளுடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால் பயன்பெற்ற பதிப்பாளர்கள் ஏராளம். பதிப்புத்துறையில் நெடுங்காலம் இருக்கும் என்னுடைய நண்பர்கள் சொன்ன தோராயமான கணக்கு, கடந்த ஆட்சிக் காலத்தில் மட்டும் இதோ: சுமார் 1,000 புத்தகங்களுக்கு மேல் பதிப்பித்திருக்கும் காலச்சுவடு, கிழக்கு, பாரதி போன்ற முன்னணி பதிப்பகங்கள் குறைந்தபட்சம் 3 முதல் 5 கோடிகள் வரை ஆணைகள் (orders) பெற்றிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இடதுசாரி நூல்களை வெளியிட்டு வரும் 'எதிர் வெளியீடு' பதிப்பாளர், நூலக ஆணை என்பது தனக்கு எட்டாக்கனியாக இருந்தது; முந்தைய திமுக ஆட்சியின் ஒற்றைச் சாளர முறைதான் அதை உடைத்தது என்பதை வெளிப்படையாக நேற்று எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகமும், பெருமாள் முருகனுடைய புத்தகங்களைப் பெரும்பாலும் பதிப்பித்தவரும், பல ஆண்டுகளாக நூலக ஆணை பெற்று வருபவருமான காலச்சுவடு கண்ணன், முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய ஒற்றைச் சாளரத் திட்டத்தை ஆதரித்து நேற்றுகூட எழுதியிருக்கிறார். பா. ரஞ்சித்தின் 'நீலம்' பதிப்பகம்கூட ஓரிரு கோடிகள் மதிப்புள்ள ஆணைகளைப் பெற்றுள்ளார்கள் என்று சொல்கிறார்கள் பதிப்பக நண்பர்கள். நூற்றுக்கணக்கான சிறு பதிப்பாளர்கள் நேரடியாகப் பயன்பெற்றிருக்கிறார்கள். இவை யாவும், 10 காசு லஞ்சம் கொடுக்காமல், இடைத்தரகர்களுக்குக் கமிஷன் கொடுக்காமல், யாரிடமும் பரிந்துரைக்கு என்று போகாமல் சத்தமில்லாமல் நடந்த ஒரு சிறப்பான மாற்றம்.
காலங்காலமாக நூலக ஆணைகள் மூலம் பணம் அடித்தவர்கள், இந்தப் புதிய திட்டத்திற்குள்ளும் நுட்பமாகத் திருடுவதற்கு முயற்சித்து மிகக் குறுகிய காலத்திலேயே மாட்டிக்கொண்டார்கள் என்பதுதான் இந்த அகல்விளக்கு மோசடி.
"இந்தத் தேதியில் ஆன்லைனில் விண்ணப்பித்தார்கள், இந்தத் தேதியில் ஐஎஸ்பிஎன் வாங்கினார்கள், இந்தத் தேதியில் நூலக ஆணை போனது, இந்தத் தேதியில் பணம் போனது" என்று இப்போது ஆதாரங்களை அடுக்குகிறார்கள். இவையாவும், எளிதாகத் தப்பித்துவிட முடியாதவாறு கணினிமயமாக்கப்பட்ட நேரடிக் கொள்முதல் முறையை திமுக அரசு நடைமுறைப்படுத்தியதால் மட்டுமே இரண்டு நாட்களில் சாத்தியமாகியிருக்கிறது.
திமுக அரசு, கொள்கை முடிவெடுத்து ஒரு சிறப்பான ஒற்றைச் சாளர முறையை (Single Window System) நடைமுறைப்படுத்தியுள்ளது. இது முக்கியமான சாதனை. இதுதான் ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய செயல். அந்த நடைமுறையைச் செயல்படுத்தும் இடத்தில் இருப்பவர்களில் ஒரு சிலர், பல காலமாக நூலக ஆணைகளில் பணம் அடித்து ருசி கண்டவர்கள், இந்தப் புதிய நடைமுறையிலும் திருடுவதற்கு முயற்சித்து இப்போது மாட்டியிருக்கிறார்கள்.
இன்னேரம் இன்றைய அரசு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அவர்களைத் தடுக்கும் அந்தப் பிரபல எழுத்தாளர் த்ரிஷா விஜய் யார்?
- நிகர்மொழி பதிப்பகம் See less
Shared post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக