ஞாயிறு, 24 ஜனவரி, 2021

தளவனூர் தடுப்பணை உடைந்தது-பொன்முடி தலைமையில் திமுக அதிரடி போராட்டம்!

Mathivanan Maran - tamil.oneindia.com : விழுப்புரம்: விழுப்புரம் அருகே தளவனூர் தடுப்பணை உடைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் இன்று திடீரென அங்கு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தடுப்பணை உடைப்பு தொடர்பாக அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவனூரில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. எனதிரி மங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

கதவணையால் மண் வெளியேற்றம் !  இது தொடர்பாக விசாரணை நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்டப்பட்ட தடுப்பணை உறுதியாகவே உள்ளது. கதவணை திறக்கப்பட்டதால் மண் அடித்துக் கொண்டு வெளியேறுகிறது. இது பைப்பிங் ஆக்‌ஷன் என்போம். இப்படி நிகழ்வது எதிர்பார்த்ததுதான். இதனால் தடுப்பணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.

இதனிடையே தடுப்பணை பகுதியை திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி நேற்றும் இன்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அணை உடைந்தது என்பது அதிமுக அரசின் ஊழலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. அணையை தரமற்ற முறையில் கட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துறை அமைச்சரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றார்.

அத்துடன் தடுப்பணை பகுதியிலேயே இன்று காலையில் பொன்முடி தலைமையில் திமுகவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, மாவட்ட நிர்வாகம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் இந்த இடத்தை விட்டு நகருவோம் என்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் சி.வி. சண்முகம், தடுப்பணை விவகாரம் குறித்து கூறியதாவது: தளவானூர் எனதிரிமங்கலம் இடையே கடந்த 2019 ஆம் ஆண்டில் ரூபாய் 25 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. தொடர் மழை காரணமாக தடுப்பணையை திறப்பதற்கு முன்பு தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து நேற்று தடுப்பணை உடைந்து விட்டது என சொல்வது தவறு. எனதிரிமங்கலம் அருகே தடுப்புச் சுவர் மட்டுமே உடைந்துள்ளது. இது தானாகவே உடைந்தது இல்லை. மர்ம நபர்கள் சதி திட்டம் காரணமா? என விசாரணை நடைபெறுகிறது.

மேலும் இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் உயர்மட்ட குழு ஆய்வு செய்து உடனடியாக தமிழக அரசுக்கு அறிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடுப்புச்சுவரை சீரமைக்க ரூபாய் ஏழு கோடி மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பணையை முழுமையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சிவி சண்முகம் கூறினார்.

கருத்துகள் இல்லை: