புதன், 28 ஜனவரி, 2026

அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்- மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு! Mamata Banerjee makes shocking allegation

 மின்னம்பல -Mathi :  மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், விமான விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார், மும்பையில் இருந்து பாராமதி சென்ற போது அவர் பயணித்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில் அஜித் பவார் மரணம் தொடர்பாக மமதா பானர்ஜி சந்தேகம் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது: நாட்டு மக்களுக்கு இங்கே எந்த பாதுகாப்பும் இல்லை. எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு என்ன நடக்கும் என்பதும் தெரியவில்லை.  

அஜித் பவார், பாஜக அரசில் இடம் பெற்றவர்தான். ஆனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் இணைவதற்கு அஜித் பவார் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆகையால் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில், அஜித் பவார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். நாட்டின் பிற விசாரணை அமைப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவை அனைத்தும் விலை கொடுத்து வாங்கப்பட்டுவிட்டன. இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: