புதன், 28 ஜனவரி, 2026

விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு- மஹாராஷ்டிரா

தினமலர் : மும்பை: மஹா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித்பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சிறிய ரக விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் இறுதி சடங்குகள் நாளை(ஜன29) நடக்கிறது.
மஹாராஷ்டிராவில் மும்பையில் பாராமதிக்கு 8 பேர் இருக்கை கொண்ட விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 6 பேர் பயணம் செ ய்துள்ளனர். பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.


பின்னர் விமானத்தில் மளமளவென தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார், அவரது தனிப்பாதுகாவலர், இரு பைலட்டுகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான இடத்தில் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

பாராமதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு அஜித்பவார் விமானத்தில் பயணித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த சம்பவம் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித் பவார் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் இறுதிச்சடங்குகள் நாளை (ஜன.29) நடக்கின்றன.

சரத் பவாருக்கு மோடி ஆறுதல்

அஜித் பவார் விமான விபத்தில் இறந்த தகவல், உடல் நலம் குன்றி மும்பை வீட்டில் ஓய்வில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அஜித் பவாரின் சித்தப்பாவுமான சரத் பவாருக்கு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அவர், தன் மனைவி பிரதிபா உடன் பாரமதி புறப்பட்டு சென்றார். அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவும், பாரமதிக்கு சென்று சேர்ந்தார். அஜித் பவரின் குடும்பத்தினரை சுப்ரியா சுலே கட்டி அணைத்து ஆறுதல் ஆறுதல் கூறினார் . மாநில முதல்வர், துணை முதல்வர் ஏக் நாத் ஷிண்டே உள்ளிட்ட பலரும் அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

யார் இந்த அஜித் பவார்?

* 1959ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி அகமதுநகர் மாவட்டம், தியோலலி பிரவராவில் பிறந்த அஜித் பவார் (வயது 66), தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகன் ஆவார்.

* மஹாராஷ்டிராவின் நீண்ட கால துணை முதல்வராக இருந்தவர் அஜித்பவார். 6 முறை துணை முதல்வராக பதவி வகித்தவர்.

* 1991 முதல் பார்லிமென்ட், சட்டசபை உறுப்பினராக அஜித்பவார் இருந்துள்ளார்.

* பாராமதி சட்டசபை தொகுதியில் 2004, 2009, 2014, 2019, 2024 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.

அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்து வருகிறார்.

* அண்மையில் தான் தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் ஒன்றாக செயல்பட முடிவு செய்யப்பட்டது. இருதரப்பிலான குடும்ப பிரச்னைகள் படிப்படியாக தீர்க்கப்படும்'' என அஜித்பவார் அறிவித்து இருந்தார். இந்த சூழலில் அஜித்பவார் மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கருத்துகள் இல்லை: