BBC News தமிழ் : சென்னையில் பிகார் மாநில இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகரில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் அருகே கடந்த 26 ஆம் தேதியன்று சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதில் இருந்து ரத்தம் கசிவதைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அடையாறு காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், சாக்குமூட்டையைப் பிரித்துப் பார்த்துள்ளனர். முகம் மற்றும் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் சடலம் இருந்துள்ளது.
அதனைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவரைப் பற்றி எந்த விவரமும் கிடைக்காததால் ஐந்து தனிப்படைகளை அமைத்து காவல்துறை விசாரித்து வந்தது.
இந்திரா நகர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சாக்குமூட்டையை வீசிச் செல்வது கண்டறியப்பட்டதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
வாகனத்தின் இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இறந்து கிடந்த இளைஞரின் ஆடையில் இருந்த சில தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு போலீசார் பேசியுள்ளனர்.
அதில், சென்னையில் உள்ள தனியார் பாதுகாப்பு ஏஜென்சி நிறுவனம் ஒன்றின் தொடர்பு எண் இருந்ததாக ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், இறந்துபோன நபரின் அடையாளம் தெரியவந்துள்ளது.
அவர் தனது மனைவியுடன் தனியார் பாதுகாப்பு ஏஜென்சி நிறுவனத்துக்குச் சென்று தங்கிப் பணிபுரியும் வகையில் வேலையைக் கேட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதன்பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தரமணியின் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக அவர் பணியில் சேர்ந்துள்ளார். அங்கு மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
அவரது நண்பர்கள் சிலரிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், அந்நபரின் மனைவி மற்றும் அவர்களின் 2 வயது குழந்தையையும் காணவில்லை என்பதை அறிந்து காவல்துறை தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் அந்நபரின் நண்பர்களான சிக்கந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், பிகாஸ் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பிகார் இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக, அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் இளங்கனியிடம் பிபிசி தமிழ் பேசியது. இந்தச் சம்பவம் தொடர்பாக பேச இயலாது என்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே ஊடகங்களிடம் விளக்கம் அளிப்பார்கள் என்று மட்டும் பதில் அளித்தார்.
அடையாறு துணை ஆணையர் ஹரிகிரனை தொடர்பு கொண்டு பேசும் முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.
“இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் பேசிவரும் முதலமைச்சர் ஸ்டாலின், இச்சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி, "சென்னை தரமணி பகுதியில் வடமாநில இளைஞரையும் அவரது மனைவி மற்றும் குழந்தையையும் சமூகவிரோதிகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் தருகிறது. கொலை செய்யப்பட்ட அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரித்துவருகின்றனர். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக