![]() |
tamil.oneindia.com : டெல்லி: இந்திய உயர்கல்வியில் சமத்துவத்தை உறுதி செய்யும் விதமாக, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2026 ஆம் ஆண்டுக்கான சமத்துவ மேம்பாட்டு (உயர்கல்வி நிறுவனங்களில்) விதிமுறைகளை வெளியிட்டது. ஆனால், முன்னேறிய ஜாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பாஜகவுக்கு ஆதரவாக இருந்த குறிப்பிட்ட ஜாதியினரும் கூட. பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிக்கிறார்கள். இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தால் இந்த விதிமுறைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு. கல்வி நிலையங்களில், பாகுபாடு இல்லாமல் கண்ணியத்தையும் சம வாய்ப்பையும் உறுதி செய்வதே இந்த 2026 விதிமுறைகளின் முக்கிய நோக்கம். அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவ கொள்கை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டன.
சமூகத்தில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்பது ஒரு சலுகை அல்ல, மாறாக ஓர் அரசியலமைப்பு கடமை. ஆயினும், இந்த விதிமுறைகள் முன்னேறிய சாதி குழுக்களை வீதிக்கு வர வைத்தன.
பல்கலைக்கழகங்களில் ஜாதி வெறி
இது புதியதும் அல்ல, தன்னிச்சையானதும் அல்ல. நாராயணா சுகுமார் தனது "இந்தியப் பல்கலைக்கழகங்களில் சாதிப் பாகுபாடு மற்றும் புறக்கணிப்பு" ("Caste Discrimination and Exclusion in Indian Universities") என்ற புத்தகத்தில் இதை மிகத் தெளிவாகக் காட்டுகிறார்.
உயர்கல்வி நிறுவனங்கள், நடுநிலைமை என்ற போர்வையில் சாதிப் படிநிலை அமைப்புகளை மீண்டும் மீண்டும் உருவாக்கும் களங்களாக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். நம்மூரில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்பட கல்லூரி காட்சிபோலத்தான் இந்தியா முழுக்க ஜாதி பாகுபாடு உள்ளது.
மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் உள்ள நேர்காணல்களை மேற்கோள் காட்டி, பாகுபாடு வெளிப்படையாகக் காணப்படுவதில்லை. மாறாக, மதிப்பீடு, மேற்பார்வை, உதவித்தொகை ஒதுக்கீடு மற்றும் நிர்வாக முடிவுகள் போன்ற அன்றாட கல்வி நடவடிக்கைகளில் அவை மறைமுகமாக உட்பொதிந்துள்ளன என்பதை சுகுமார் விளக்குகிறார்.
பாகுபாடு குறித்த ஆதாரங்கள்
சாதிப் பாகுபாடு என்பது மிகைப்படுத்தப்பட்டது அல்லது அரிதானது என்ற சமாளிப்பு பேச்சுக்களை புள்ளிவிவரங்கள் மறுக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு புகார்கள் 118.4 சதவீதம் அதிகரித்துள்ளன.
பதிவுசெய்யப்பட்ட சம்பவங்கள் 2019-20ஆம் ஆண்டில் 173 வழக்குகளிலிருந்து, 2023-24ஆம் ஆண்டில் 378 வழக்குகளாக உயர்ந்துள்ளன. மேலும், 2019-20 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 704 பல்கலைக்கழகங்கள் மற்றும் 1,553 கல்லூரிகளிலிருந்து செயல்படும் சம வாய்ப்பு அமைப்புகள் மற்றும் SC/ST குழுக்கள் மூலம் UGC 1,160 புகார்களைப் பெற்றுள்ளது.
UGC 2026
இந்த வழக்குகளில் 90.68 சதவீதம் தீர்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டாலும், நிலுவையில் உள்ள வழக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன. 2019-20இல் 18ஆக இருந்த நிலுவைப் புகார்கள், 2023-24இல் 108ஆக உயர்ந்தன. ஆண்டுவாரியாகவும் இந்த உயர்வு திட்டவட்டமாக உள்ளது: 2020-21இல் 182 வழக்குகள், 2021-22இல் 186, 2022-23இல் 241 வழக்குகளுக்குப் பிறகு, 2023-24இல் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டது.
புகார்கள் அதிகரிப்பது மாணவர்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் நடந்துள்ளது எனக்கூறி கடந்துவிடுகிறார்கள் முன்னேறிய ஜாதியினர். ஆனாலும், அது கண்காணிப்பின் அவசியத்தைக் குறைக்க முடியாது. ஏனெனில், விழிப்புணர்வு பாகுபாட்டை உருவாக்குவதில்லை; அது ஏற்கனவே உள்ளதை அம்பலப்படுத்துகிறது.
விதிமுறைகள் குறித்த தவறான சித்தரிப்பு
2026 விதிமுறைகள் சாதியை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன என்ற வாதம் தவறானது. உண்மையில், இந்த விதிமுறைகள் உயர்கல்வியில் நிலவும் பாகுபாடுகளை கூடுதல் அளவில் எதிர்கொள்ள முயலுகின்றன. புறக்கணிப்பு பல்வேறு, ஒன்றையொன்று சார்ந்துள்ள கட்டமைப்புகள் மூலம் செயல்படுகிறது என்பதை அவை அங்கீகரிக்கின்றன. மேல்தட்டு சாதி குழுக்களின் எதிர்ப்பு பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது.
Also Read
எதிர்ப்பின் தவறான தர்க்கமும் ஆதிக்கத்தை இழக்கும் அச்சமும்
விதிமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இந்த வாதம் குறைபாடுடையது. ஒவ்வொரு சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. இது ஒருபோதும் சட்டப் பாதுகாப்புகளைத் திரும்பப் பெறுவதற்குப் போதுமான காரணமாக இருந்ததில்லை.
இந்த அடிப்படையில் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யவோ அல்லது கைவிடவோ கோருவது, தற்போதுள்ள அதிகார வெறியை பாதுகாக்கும் முயற்சியையே பிரதிபலிக்கிறது.
இந்த விதிமுறைகளுக்கு எதிரான போராட்டங்களின் தீவிரம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக, மேல்தட்டு சாதி குழுக்கள் கல்வி இடங்கள் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. பல்கலைக்கழகங்களில் உள்ள தலைமைப் பதவிகள் இன்றும் மேலடுக்கு சாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளன. இந்த இடங்களை ஒழுங்குபடுத்தும் எந்தவொரு முயற்சியும் அவர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கும், அடுத்தவரை அடக்கியாளும் அதிகாரத்தை அச்சுறுத்துகிறது.
பாகுபாடு நடைமுறையில் இல்லை என்றால், ஏன் இவ்வளவு அச்சம்? நியாயத்தை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறை ஏன் வீதிப் போராட்டங்களையும் ஊடகங்களில் விவாதங்களையும் தூண்டுகிறது?
தலைமை பதவி முன்னேறிய ஜாதிகளுக்கே
2023 ஜூலை மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒரு பட்டியல் சாதி, ஒரு பட்டியல் பழங்குடி மற்றும் ஐந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்த துணைவேந்தர்கள் மட்டுமே உள்ளனர். விளிம்புநிலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சாதி அடிப்படையிலான புறக்கணிப்பை அனுபவிக்காத அதிகாரிகளிடமிருந்து நீதியைத் தேட வேண்டியிருக்கிறது.
புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், சாதிப் பாகுபாடு குறித்த பதிவுகள் குறைவாகவே உள்ளன. பழிவாங்கல், சமூகத் தனிமைப்படுத்தல் மற்றும் பின்விளைவுகள் பற்றிய அச்சம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வருவதைத் தடுக்கிறது.
யுஜிசி 2026 விதிமுறைகள், உயர்கல்வியில் பாகுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான வரையறுக்கப்பட்ட, ஆனால் அவசியமான ஒரு படியாகும். தரவுகள், சாட்சியங்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் நீண்டகாலமாக நிறுவப்பட்ட ஒரு யதார்த்தத்தை அவை அங்கீகரிக்கின்றன.
இந்த விதிமுறைகளுக்கு எதிரான எதிர்ப்புகள், அவற்றின் தோல்வியைக் காட்டுவதில்லை. மாறாக, அவற்றின் அவசியத்தையே அவை உறுதிப்படுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக