![]() |
News4 Tamil Digital : சல்லியா சல்லியா நொருங்கும் கூட்டணி.. எல்லாமே போச்சு.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் நிலவும் முரண்பாடுகள் தற்போது வெளிப்படையாகத் தெரிய் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, தேமுதிக, பாமக ராமதாஸ், ஓ. பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் இணைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்தால், அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய கவலையாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால் தான், பாஜக தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவர் தடையாக நிற்கிறார் என்கின்றனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - பாஜக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய கணக்குப்படி ஓரளவு எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
அதன்படி, பாஜகவுக்கு 30 தொகுதிகள், அமமுகவுக்கு 8 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், தமாகாவுக்கு 5 தொகுதிகள், இதர சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என ஒதுக்கப்படலாம் என பேசப்படுகிறது. இந்த கணக்கின் அடிப்படையில், சுமார் 60 முதல் 70 தொகுதிகள் வரை கூட்டணி கட்சிகளுக்கு செல்லும் நிலை உருவாகிறது. அதனால், மீதமுள்ள 167 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிட முடியும். இது கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டால், அதிமுகவுக்கு சுமார் 12 தொகுதிகள் குறைவாகும் சூழல் உருவாகிறது.
இரட்டை இலை
கடந்த தேர்தலில், கூட்டணி கட்சிகளில் பலரும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட விருப்பம் தெரிவித்ததால், அதிமுக சார்பில் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடிந்தது. ஆனால் இம்முறை அந்த நிலை இல்லை. தமாகா தனி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கடந்த முறை இரட்டை இலையில் போட்டியிட்டு தோல்வியடைந்த சில கட்சிகள், இந்த முறை பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றன.
என்டிஏ தொகுதி பங்கீடு
இந்த சூழலில், தேமுதிக, பாமக, ஓ. பன்னீர்செல்வம் அணி போன்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வந்தால், அவர்களுக்கும் தனித்தனி தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறையும். அதோடு, இக்கட்சிகள் கூட்டணிக்குள் வந்தாலும், அதிமுகவுக்கு நேரடியாக பெரிய அரசியல் லாபம் இல்லை என்ற கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி
இதனால் தான், பாஜக தரப்பில் இருந்து கூட்டணியை விரிவுபடுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவர் சம்மதம் தெரிவிக்காமல், கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், பாஜக தரப்பு இதற்கு முற்றிலும் மாறான கருத்தை முன்வைக்கிறது. தற்போதைய நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக இருந்தாலும், தேர்தல் வெற்றிக்கு அது மட்டும் போதுமானதாக இருக்காது. கூட்டணி இன்னும் விரிவடைய வேண்டும். அதற்காக, வாக்கு வங்கி குறைவாக இருந்தாலும், ராமதாஸ், பிரேமலதா, ஓ. பன்னீர்செல்வம் போன்ற தலைவர்களை கூட்டணிக்குள் இணைப்பது அவசியம் என பாஜக தரப்பு வலியுறுத்துகிறது.
ஓபிஎஸ் கூட்டணி விவகாரம்
இதற்காக, எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த அழுத்தங்களை அவர் பொருட்படுத்தாமல், இனி கூட்டணிக்குள் புதிய கட்சிகளை சேர்க்க மாட்டேன் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒருவேளை ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணிக்குள் ஏற்றுக் கொண்டாலும், அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என எடப்பாடி பழனிச்சாமி நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜக மேலிடத்தில் அதிருப்தி
தேவைப்பட்டால், கடந்த மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் பயன்படுத்திய பலாப்பழம் சின்னத்திலேயே அவர் போட்டியிடலாம் என்ற கடுமையான நிலைப்பாட்டில் எடப்பாடி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி நலனுக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த அளவிலும் சமரசம் செய்யத் தயாராக இல்லாதது, பாஜக மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், வரும் நாட்களில் இது அதிமுக - பாஜக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக