வியாழன், 29 ஜனவரி, 2026

கூட்டணி திருப்தி தரவில்லையென்றால் .. தாரளமாக விஜயுடன் சேர்ந்து கொள்ளுங்கள்! முடிவாக சொன்ன .....

 vikatan.com : “கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம்"- கிரிஷ் ஜோடங்கர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. 
ஒருபுறம் அதிமுக- பாஜக தலைமையிலான NDA கூட்டணி, கட்சிகளை ஒன்றிணைத்துத் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மறுபுறம் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. 
தேசிய ஜனநாயகக் கூட்டணி
குறிப்பாகத் தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் நேற்று (ஜன.27) தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி அளித்திருக்கிறார்.
திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்?



அதில் “கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தையை இதுவரை தொடங்கவில்லை.

தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்? என தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜன. 28) ராகுல் காந்தியின் இல்லத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கிரிஷ் ஜோடங்கர்
திமுகவின் திட்டம் என்ன?
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் வாய் திறக்காமல் இருக்கும் திமுகவின் திட்டம்தான் என்ன? என்று மூத்த பத்திரிகையாளர் பிரியனைத் தொடர்புகொண்டு பேசினோம்.
திமுக கூட்டணிக்கு வரும் புதிய பிளேயர்கள்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “ திமுக, கூட்டணி குறித்து பொதுவெளியில் ஏன் பேசாமல் இருக்கிறது என்றால், அங்கே புதிய பிளேயர்கள் வர உள்ளார்கள் என்று அர்த்தம். 

தேமுதிக, ஓபிஎஸ் அணி மற்றும் இன்னும் சில கட்சிகள் திமுகவுடன் இணைகிற சூழல் இருந்து வருகிறது. 

திமுக இன்னும் தேர்தலுக்காக தனிக்குழுவை நியமிக்கவில்லை. ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் வருகிறது.

தேமுதிக
திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக
கூட்டணிக்காக ஒரு குழுவை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தினால் தகவல்கள் வெளியில் கசியும் என்று நினைக்கிறது திமுக. அதைத் தவிர்க்க, திரைமறைவில் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது. 

புதிய கட்சிகள் இணைவதால் தங்களுக்கான இடங்களைக் குறைத்துக்கொண்டு 175 இடங்களில் போட்டிப்போட இருப்பதாக திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. 

முக்கியமாக, ஆட்சியில் பங்கு கிடையாது என்பதில் திமுக தெளிவாக உள்ளது. இதை ஏற்கனவே திமுக சொல்லியும் விட்டது. 
கறார் ஸ்டாலின்
இடங்களை அதிகரிப்பது என்றாலும், ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் ஓரிரு இடங்களை அதிகப்படுத்திக் கொடுப்பார்களே தவிர, அதற்கு மேல் வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

விஜய்யின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சி 'ஆட்சியில் பங்கு', 'அதிக சீட் கேட்பது' போன்ற விஷயங்களைச் செய்கிறது. ஆனால் ஸ்டாலின் இதற்கெல்லாம் ஒத்துப்போகவில்லை. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் வைத்துக்கொள்ளுங்கள் என்ற மனநிலையில் இருக்கிறது திமுக.

இதனால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தலைமையிடம் ஒப்படைத்துவிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.

உஷாராக இருக்கும் திமுக
திமுகப் போட்டியிடும் இடங்களைக் குறைக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் நினைக்கின்றன. காரணம், அவர்கள் போட்டிபோடும் இடங்களைக் குறைத்தால், வெற்றி பெறும் இடங்களும் குறையும். அதன் பின், கூட்டணி ஆட்சி கட்டாயமாகிவிடும் என்று கருதுகிறார்கள். 

கூட்டணி கட்சிகள் என்ன கணக்கு போட்டாலும், திமுக இடங்களை ஒதுக்குவதில் மிகுந்த உஷாராக இருக்கிறது” என்று விளக்கினார்.

கருத்துகள் இல்லை: