நக்கீரன் செய்திப்பிரிவு : பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங் தனது பதவியையும், தனது தலைமையிலான அமைச்சரவையையும் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை, அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் நேரில் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, இன்று (19/09/2021) பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை (58 வயது) சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.
இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, "ஆளுநர் மாளிகையில் நாளை (20/09/2021) காலை 11.00 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
அதேபோல், முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சரண்ஜித் சிங் சன்னியுடன், அவர் தலைமையிலான அமைச்சரவையும் நாளையே பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவி வகித்தார். தலித் சீக்கியர் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பது இதுவே முதல்முறை.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக