சனி, 25 செப்டம்பர், 2021

கடலூர் கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை

கண்ணகி முருகேசன்.

BBC : தமிழ்நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இனி தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறாமல் இருக்கவே இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரது மகன் முருகேசன். பட்டியல் சாதியை சேர்ந்த இவர் இளங்கலை பொறியாளர் படிப்பு படித்தவர். இவரும் அதே பகுதியில் உள்ள இடைநிலை சாதியை சேர்ந்த துரைசாமி என்பவது மகள் கண்ணகி என்பவரும் காதலித்தனர். இருவரும் 2003 மே 5ம் தேதி கடலூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர். அப்போது முருகேசனின்‌ வயது 25, கண்ணகியின் வயது 22.

முருகேசன் - கண்ணகி திருமணம் செய்துகொண்ட விஷயம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததால் அப்போதைய விழுப்புரம் மாவட்டம் , மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை முருகேசன் தங்க வைத்திருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்கள் 2003 ஜூலை 8ஆம் தேதி அன்று முருகேசனை பிடித்து வைத்தனர்.‌ மேலும் விழுப்புரம் மூங்கில்துறைப்பட்டில் கண்ணகி இருக்கும் இடத்தை அறிந்த அவரது உறவினர்கள் முருகேசன் பிடித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கண்ணகியை அழைத்து வந்தனர்.

பின்னர் முருகேசன் , கண்ணகி ஆகிய இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு , காது வழியாக விஷம் செலுத்தி அவர்களைக் கொலை செய்து , சடலங்களை தனித்தனியாக எரித்தனர்.
நீதிமன்றம்

முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதாக புகார் எழுந்தது. மேலும் இந்த குற்றச் செயலை மறைக்கும் நோக்கில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதன் பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன் , கண்ணகி ஆகியோர் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பினரையும் கைது செய்தனர்.

முருகேசன் கண்ணகி இருவரையும் சாதி ஆணவத்தில் கொலை செய்திருக்கலாம். எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தின.

இதையடுத்து, கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை சிபிஐ எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனை விசாரித்த சிபிஐ அதே ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சிபிஐ குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிழர் சாட்சிகளாக மாறினர்.
நீதிமன்றம்

கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி உத்தமராஜா வழக்கினார்.

அதில் தொடர்புடைய பெண்ணின்‌ தந்தை துரைசாமி, பெண்ணின்‌ சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது ஆய்வாளராக செல்லமுத்து (தற்போது ஓய்வு பெற்ற டிஎஸ்பி), அப்போது உதவி ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் (தற்போது ஆய்வாளர்) உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் அய்யாச்சாமி மற்றும் குணசேகரன் குற்றவாளி இல்லை என்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம்


இந்த வழக்கை சரியாக விசாரிக்காத காவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மனித குலத்தை அச்சுறுத்தும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறிய நீதிபதி உத்தம ராஜா இந்த சம்பவம் காட்டுமிராண்டி செயல் என்றும் கூறிபிட்டார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இனியாவது தமிழ் மண்ணின் வரலாறு கண்ணகி எரித்ததாகவே இருக்கட்டும் என்றும் நீதிபதி உத்தமராஜா இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: