மின்னம்பலம் : தமிழ்நாடு நிதி அமைச்சரான பி.டி.ஆர். தியாகராஜன் மீது கடந்த சில நாட்களாகவே பல்வேறு சர்ச்சைகள் மையம் கொண்டு வருகின்றன.
தன் மீது விமர்சனங்களை வைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் நிதி அமைச்சரும் அதிமுக பிரமுகருமான ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் மீது கடுமையான வார்த்தைகளை ஏவிவரும் பிடிஆர், ஒரு ஆங்கில சேனலுக்கு இந்த விவகாரம் பற்றி பேட்டி அளித்ததற்காக திமுகவின் செய்தித் தொடர்பாளரான டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி.யைக் கூட கடுமையான வார்த்தைகளால் ட்விட்டரில் வறுத்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்திரன், பிடிஆர் பற்றிய சில முக்கியமான விஷயங்களை கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் சேர்ந்தார். அந்த இணைப்பு மேடையில் மகேந்திரனை பற்றி ஸ்டாலின் குறிப்பிட்ட புகழ்ச்சி வார்த்தைகள் கொங்கு திமுகவினர் இடையே கூட சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு மகேந்திரனை புகழ்ந்தார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு திமுக ஐடி விங் மாநில இணைச் செயலாளராக பதவி அளித்தார் ஸ்டாலின். திமுக ஐடி விங்கின் மாநில செயலாளராக இருப்பவர் நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்தார் மகேந்திரன்.
"நீங்கள் எனக்கு ஐடி விங் மாநில இணைச் செயலாளராக பதவி அளித்தீர்கள். ஐடி விங் செயலாளராக இருக்கும் பிடிஆரிடம் தகவல் தெரிவிக்காமல் என்னை நியமித்து விட்டீர்கள் என்ற கோபம் அவருக்குள் இருக்கிறதுபோல தெரிகிறது.
எனது அமைப்பின் மாநிலச் செயலாளர் என்ற வகையில் அவரை சந்திப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். என்னிடம் கோபமாகவே பேசினார். சிஐடி காலனியில் இருக்கும் ஐடி விங் அலுவலகத்தில் தங்களை சந்திக்க வரவா என்று கேட்டேன். அது எங்க பாட்டி வீட்டு சொத்து நீங்க அறிவாலயத்துக்கு வந்து பாருங்க என்று கோபமாகக் குறிப்பிட்டார். அறிவாலயத்திற்கு வந்தால் அவரது அலுவலகம் பூட்டி தான் கிடக்கிறது.
நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத் தலைவராக இருந்த போதிலும் சமூக தள விவகாரங்களையும் கையாண்டேன். அங்கே சுமார் 2 லட்சம் பேரை கட்சிக்காக சமூக தளங்களில் ஆக்டிவாக வைத்திருந்தேன். சிறிய கட்சியான அங்கேயே அப்படி என்றால், பெரிய கட்சியான இங்கே திமுகவில் அந்த வகையில் சுமார் 26 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள். இங்கேயும் என்னால் லட்சக்கணக்கான இளைஞர்களை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வைத்திருக்க முடியும். அந்த நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அணிச் செயலாளர் பிடிஆர் என் மேல் கோபமாக இருக்கிறார். நான் எப்படி செயல்படட்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்" ஸ்டாலினிடம் தன் குமுறல்களை கொட்டியிருக்கிறார் மகேந்திரன்.
அதுமட்டுமல்ல பிடிஆர் தன்னிடம் பேசிய உரையாடல்களில் திமுக தலைவர் ஸ்டாலினைப் பற்றி குறிப்பிட்ட சில வார்த்தைகளையும் பதிவு செய்து ஸ்டாலினிடம் போட்டுக் காட்டியுள்ளார் மகேந்திரன். இதைக் கேட்ட முதல்வருக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏன் இவர் இப்படி நடந்துக்குறாரு என்று கோபத்துடன் கேட்டிருக்கிறார். அதையடுத்து, ‘பிடிஆரிடம் இருக்கும் ஐடி விங் மாநில செயலாளர் பதவியிலிருந்து அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் இல்லை என்றால் அவரை விடுவித்து விடலாம்’ என்ற உத்தரவிட்டு, . இதை பிடிஆருக்கும் தெரியப்படுத்திவிட்டார்.
பிடிஆரும் சபரீசனும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் தற்போது சபரீசன் மூலம் ஸ்டாலின் கோபத்தை தணிக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக