வெள்ளி, 24 செப்டம்பர், 2021

10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

 நக்கீரன் மருத்துவச் சேர்க்கையில் பொருளாதார ரீதியில் 10% இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
 மருத்துவச் சேர்க்கையில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி பெற வேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக மத்திய அரசு, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
 இந்த வழக்கு இன்று (24/09/2021) உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மருத்துவச் சேர்க்கையில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 27% ஒதுக்கீட்டில் அவமதிப்பு வழக்குத் தொடுத்த நிலையில் 10% இட ஒதுக்கீட்டில் உத்தரவு பிறப்பித்தது எப்படி? இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தனது விசாரணை வரம்பை மீறியுள்ளதாகவே பார்க்க முடிகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தத் தேவையில்லை" என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

மாலைமலர் : பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு மருத்துவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியது. சில மாநிலங்கள் இதற்கு வரவேற்பு அளித்தாலும் பெரும்பாலான மாநிலங்கள் இதை எதிர்த்தது.
ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பதால், 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.


கருத்துகள் இல்லை: