திங்கள், 26 மே, 2014

27 ஆயிரம் 'நோக்கியா' தொழிலாளர் வெளியேற்றம் ~! தி.மு.க., - மார்க்சிஸ்ட் தொழிற்சங்கங்கள் குடுமிப்பிடி

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா மொபைல்போன் உற்பத்தி நிறுவனத்தின், 27 ஆயிரம் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் சென்று விட்ட நிலையில், ஆலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம் என்பதில், தி.மு.க.,வின், எல்.பி.எப்., தொழிற்சங்கத்துக்கும், மார்க்சிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., சங்கத்துக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது.நோக்கியா ஆலையில், தி.மு.க.,வின், எல்.பி.எப்., தொழிற்சங்கத்தை செயல்பட விடாமல் தடுத்து, ஆளுங்கட்சி உதவியுடன், மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்தை உருவாக்கிய பின், 27 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். இதற்கு, சி.ஐ.டி.யு., தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் என, எல்.பி.எப்., தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நோக்கியா ஆலையில், எல்.பி.எப்., தொழிற்சங்கத்தை துவங்கி, இரண்டு ஊதிய ஒப்பந்தங்களை போட்டோம். தி.மு.க., ஆட்சியின் போது, 20 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ததற்கு, மறியல் போராட்டங்களை நடத்திய, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்திரராஜன், தன்னை கைவிலங்கு மாட்டி இழுத்து சென்றனர் என, பொய்யான தகவலை வெளியிட்டார்.  கம்யூனிஸ்ட் காரர்களை நம்பமுடியாது. அவர்கள் தமிழகத்தை விட்டு, கேரளா போன்று எல்லா தொழிற்சாலைகளையும் விரட்டி விடுவார்கள். திமுகவின் சிறந்த நிர்வாகம் நடுநிலையான போக்கை கையாளும். முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் மிதமான கொள்கையை கையாளுவது தான் தலைவரின் சாமர்த்தியம். அது வேறு யாருக்கும் வராது.

ஆனால், இது உண்மையில்லை என, நீதிமன்றத்தில், வீடியோ ஆதாரங்களை போலீசார் அளித்தனர். மேலும், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்தோம்.தமிழகத்தில், 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஆளுங்கட்சியின் உதவியுடன், தி.மு.க., தொழிற்சங்கத்தை நடத்த விடாமல் செய்து, புதிய தொழிற்சங்கத்தை துவங்கி, சவுந்திரராஜன் அதற்கு தலைவரானார். இப்போது, நோக்கியா நிறுவனத்திலிருந்து, 27 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 20 பேரை வெளியேற்றியதற்காக கொந்தளித்த, சி.ஐ.டி.யு., தலைவர்கள், இப்போது மவுனம் காப்பது ஏன்?

தப்பிக்க முயற்சி



தொழிலாளர்களை வெளியேற்றியதற்கு, தாராளமய சித்தாந்தத்தை சொல்லி, மார்க்சிஸ்டுகள் தப்பித்துக் கொள்ள முடியாது. தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கிடைத்த வெற்றி என்றும், மார்க்சிஸ்டுகள் வெற்றி பெற்றால், ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறுவது, அவர்களின் வாடிக்கை.மார்க்சிஸ்டுகளின் தொழிலாளர் போராட்ட வரலாறுகள், வடசென்னை விம்கோ ஆலை துவங்கி, தென்சென்னை ஸ்டேன்டர்டு மோட்டார் கம்பெனி வரை, நினைவு சின்னங்களாக உள்ளன. விருப்ப ஓய்வு திட்டத்தை எல்.பி.எப்., எதிர்க்கிறது. ஆனால், சி.ஐ.டி.யு., விருப்ப ஓய்வு தொகையை அதிகரித்து தர வேண்டும் என, வாதிடுகிறது.மார்க்சிஸ்டுகளை பொறுத்தவரை, மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி. வேலை இழப்புக்கு, இவர்கள் கூறும் தத்துவங்களை, நோக்கியாவின், 27 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஏற்றுக் கொள்ளாது.இவ்வாறு, அந்த அறிக்கையில் சண்முகம் கூறியுள்ளார்.

தீ குளிக்க வேண்டுமா?



சண்முகத்தின் அறிக்கைக்கு பதில் அளித்து, சி.ஐ.டி.யு., தலைவரும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,வுமான சவுந்திரராஜன் கூறியதாவது:எல்.பி.எப்., தலைவரின் அரிப்புக்கு ஏற்ப, நாங்கள் போராட வில்லை என, நினைக்கிறாரோஎன தெரியவில்லை. ஒருவேளை, நான் தீ குளிக்க வேண்டும் என, நினக்கிறாரோ? அவரது கருத்துக்கள், அரசியல் வன்மத்தை கக்குவதாக உள்ளது. நோக்கியா ஆலையை, இன்னும் மூடாமல் வைத்திருக்கிறோம். 850 பேர் வேலையில் உள்ளனர்.

தடுக்க முடியாது



நோக்கியா நிர்வாகத்தை எதிர்த்து, உண்ணாவிரதம் இருந்தோம். தமிழக தொழிலாளர் நல நீதிமன்றத்தில், வழக்குத் தொடர்ந்தோம். விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்பது, தொழிலாளர்களின் மன நிலையைப் பொறுத்தது. அதை, தொழிற்சங்கத்தால், முழுமையாகத் தடுக்க முடியாது.மத்திய அரசில், 15 ஆண்டுகளுக்கு மேல், தி.மு.க., அங்கம் வகித்தது. விருப்ப ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய, அவர்களால் ஏன் முடியவில்லை. எனவே, எல்.பி.எப்., தலைவரின் பேச்சு, அரசியல் வன்மத்தை மட்டுமே காட்டுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: