சனி, 23 செப்டம்பர், 2017

பணமதிப்பழிப்பால் வாடிய பூ வியாபாரிகள்! மீண்டும் தலையெடுக்க முடியுமா?

மின்னம்பலம் :வினிதா கோவிந்தராஜன்
சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பால் வாடிய பூ வியாபாரிகள்!சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கனி சந்தை ஆசியாவில் இருக்கும் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். இங்கு 3,000க்கும் அதிகமான உரிமம் பெற்ற கடைகள் காய், கனி, பூக்களை விற்றுவருகின்றன. 10,000க்கும் அதிகமான வணிகர்கள் இங்கு தொழில் செய்கின்றனர். ஒவ்வொரு கடையிலும் 3 அல்லது 4 பேர் தொழில் புரிகின்றனர். தினசரி அடிப்படையில் 10,000 பணியாளர்கள் இங்கு வேலை செய்வதாக தமிழ்நாடு பூ காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளரான வி.கோவிந்தராஜ் கூறுகிறார். கோயம்பேடு பூச்சந்தையில் மட்டும் 500க்கும் அதிகமான பூக்கடைகள் இருப்பதாகவும், வாரத்துக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான பூக்கள் இங்கு விற்பனையாவதாகவும் அவர் கூறினார்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு ஒரு வாரத்துக்குப் பிறகு இந்தச் சந்தைக்குச் சென்றிருந்தோம். பின்னர் ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் இச்சந்தைக்குச் சென்றிருந்தோம். இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 2000 ரூபாய் போன்ற உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளுக்குச் சில்லறை வழங்க முடியாமல் பூ வியாபாரிகள் தவித்துள்ளனர். பிறகு வாடிக்கையாளர்களை இழந்ததால், சில கடைகளில் பூக்கள் மற்றும் மாலைகளின் விலை 60 சதவிகிதம் வரை சரிந்துவிட்டது. லாரிகளில் பூ விநியோகம் செய்த விவசாயிகளுக்கும், தன் பணியாளர்களுக்கும் பணம் வழங்க முடியாமல் வியாபாரிகள் தவித்தனர்.


பூ, விரைவில் பாழடைந்துவிடக்கூடிய பொருளாக இருப்பதால், அதை விரைந்து விற்பனை செய்ய வேண்டிய தேவை வியாபாரிகளுக்கு உள்ளது. ஒரு நாளைக்குப் பூக்களின் வியாபாரம் மந்தமானால், அதனால் டன் கணக்கிலான பூக்கள் வீணாகிவிடும். பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில், ரோஜா, அல்லி, மல்லி உள்ளிட்ட மலர்கள் சுமார் 360 டன் வதங்கி வீணாகிவிட்டது. இவ்வளவு மலர்களும் வீணாகக் கொட்டப்பட்டது. பத்து மாதங்களுக்குப் பிறகு தொழில் சீராகிவிட்டதாக வணிகர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த மாற்றம் மிக மெதுவாகவே ஏற்பட்டுள்ளது. இச்சந்தையில் பூக்கடை வைத்திருக்கும் ரவிச்சந்திரனிடம் பேசுகையில், “கடந்த ஐந்து மாதங்களில் தான் தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றார்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை மோடி அரசு கொண்டுவந்த சிறப்பான கொள்கை மாற்றம் என்று வணிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால், அது தோல்வியடைந்த திட்டம் என்று வேல்முருகன், செல்வராஜ் போன்ற வியாபாரிகள் கோபத்துடன் கூறுகின்றனர்.

ஆலப்பன் என்ற பூ வியாபாரிக்குப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு நான்கு மாதங்களில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்துக்கு 30,000 ரூபாய் வரை லாபம் ஈட்டிவந்த தன் கடையில் 5,000 ரூபாய் மட்டுமே லாபமாகக் கிடைத்ததாக ஆலப்பன் கூறுகிறார். அதையும் தாண்டி, டிசம்பர் மாதத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆலப்பன் ஆதரவளித்து வந்தார். ஏழைகள், பணக்காரர்கள் இருவரையுமே பணமதிப்பழிப்பு நடவடிக்கை சமமாகப் பாதித்ததாக அவர் நினைத்திருந்தார். மோடியின் திட்டம் சிறப்பான திட்டம் என்று அவர் கூறிவந்தார்.
“கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர இது ஒரு சிறப்பான திட்டம். அனைவருமே சிக்கிக்கொண்டுள்ளதால் இதனால் எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறியிருக்கிறார். பல மாதங்கள் கழித்தும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவளித்தே இருக்கிறார். “ஊழலை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அது ஒரு நல்ல திட்டம் என்றே நான் நினைத்தேன் . ஆனால், எங்களைப் போன்ற சிறு வணிகர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். பணக்காரர்கள் தங்களின் கறுப்புப் பணத்தை எப்படியோ வெள்ளையாக்கிவிட்டனர். சாமானிய மனிதனே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளான்” என்று அவர் கூறுகிறார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99 சதவிகித நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்குக் கிடைத்துவிட்டது பற்றி வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு இல்லை. ஆகஸ்ட் 31ஆம் தேதி காலையில் ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் இதுபற்றி முன்னணித் தமிழ் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் எந்தச் முக்கியச் செய்தியும் வெளியாகவில்லை.

மாறாக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணத்தை அரசு கைப்பற்றியுள்ளதாகச் செய்தித்தாள்களில் படித்ததாக ரவிச்சந்திரன் கூறுகிறார். “மோடியின் திட்டம் , எங்களைப் போன்ற மக்களைப் பாதிக்காத வகையில் அதைச் செயல்படுத்தியிருக்கலாம்” என்கிறார் ரவிச்சந்திரன். பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ரவிச்சந்திரனுக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியால் எந்தவொரு அரசியல் பலன்களையும் ஈட்ட முடியாது என்றே பணியாட்கள் நினைக்கின்றனர். செல்வராஜ் என்னும் வியாபாரி, “இங்கிருக்கும் மக்களுக்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை மட்டுமே தெரியும்” என்று கூறினார். தமிழகத்தில் பாஜகவுக்குப் பலம் இல்லை என்றே வணிகர்களும் கருதுகின்றனர்.
நன்றி: ஸ்க்ரால்
தமிழில்: அ.விக்னேஷ்

கருத்துகள் இல்லை: