புதன், 8 பிப்ரவரி, 2017

சசிகலா நடவடிக்கை ! பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கம் .. எடப்பாடி முதல்வர் ஆகிறார்?

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்ததற்காக பன்னீர் செல்வத்தை அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் புதிய அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் சமாதியின் முன்பு பன்னீர் செல்வம் அமர்ந்து, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், என்னுடைய மனசாட்சியை வெளிப்படுத்த வேண்டியிருக்கின்றது என்று பரபரப்பு பேட்டியை அளித்தார். அதில், என்னை முதல்வராக பொறுப்பேற்க வைத்து, அவமானப்படுத்தினர். அழகான முறையில் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர், நிர்ப்பந்தித்னர். அதனால், தான் ராஜினாமா செய்தேன். நான் கடைசி வரை கட்சியின் கட்டுக்கோப்பை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், என்னுடைய கஷ்டத்தையும் பொறுட்படுத்தாமல் சகித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், கோடிக்கணக்கான தொண்டர்களின் மனக்குமுறலை என்னால் வெளிப்படுத்த முடியாது. கட்சியின் உண்மையான தொண்டர் ஒருவர் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று கூறினார். இந்தப்பேட்டி தொண்டர்களின் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள அவரின் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், அவர் சிறைக்கு செல்ல நேர்ந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க இருந்த நிலையில் தமிழக ஆளுநர் பொறுப்பில் இருக்கும் வித்யாசாகர் ராவ் மும்பை சென்றார். இந்த நிலையில் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல நேர்ந்தால் அவருக்குப் பதில் யாரை முதல்வராக அமர வைப்பது என்பது குறித்து மன்னார்குடி கோஷ்டி ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன், அக்கா மகன் டிடிவி தினகரன், தம்பி திவாகரன் ஆகியோர் பெயர்கள் அடுத்த முதல்வர் பதவிக்கு அடிபட்டு கொண்டிருக்கிறது.
ஆனால்,ஃபெரா அன்னியசெலாவணி மோசடி வழக்குகளில்  நடராஜன், தினகரன் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், இருவரது பெயர்களும் முதல்வர் பட்டியலில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மன்னார்குடி கோஷ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மக்களோ அதெல்லாம் முடியாது பன்னீர் மட்டுமே முதல்வர் ஆகணும். இல்லைன்னா…என்று மிரட்டுவது போல கமெண்ட்கள் வருவதை பார்த்தால் எமக்கே அச்சம் வருகிறது.  லைவ்டே

கருத்துகள் இல்லை: